அரசு உதவி பெறும் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்காக அமைக்கப்படும்
குழு, பெயரளவில் செயல்படுவதாக, கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இக்குழுவில், முதல்வர், இரு மூத்த பேராசிரியர்கள், ஆதிதிராவிட பிரிவைச்
சேர்ந்த பேராசிரியர் ஒருவர் என, நான்கு பேர் உறுப்பினராக இருப்பர்.
கல்லூரிகளில், விண்ணப்பங்களை பெறுதல், விதிமுறைகள் அடிப்படையில் தகுதி
வாய்ந்த விண்ணப்பங்களை தேர்வு செய்தல், பிரிவுகளுக்கேற்ப இடஒதுக்கீடு
செய்தல், மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துதல் உள்ளிட்ட,
பணிகளை இக்குழு மேற்கொள்ளும்.
ஒவ்வொரு ஆண்டு மாணவர் சேர்க்கையின் போதும், அரசு கல்லூரிகளில், இக்குழு
நன்றாக செயல்படுகிறது. ஆனால், அரசு உதவி பெறும் கல்லூரிகளில்,
இக்குழுக்கள், பெயரவில் மட்டுமே செயல்படுகின்றன. இக்கல்லூரிகளில், மாணவர்
சேர்க்கை வழிகாட்டி நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை.
கல்லூரி நிர்வாகம் கொடுக்கும் மாணவர் சேர்க்கை பட்டியலையே, இக்குழு
தேர்வு செய்கிறது. மாணவர் சேர்க்கை குழு, சரியாக செயல்படுகிறதா என, மண்டல
கல்லூரி கல்வி இயக்குனரகம் கண்காணிப்பதில்லை என, கல்வியாளர்கள்
குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால், அரசு உதவி பெறும் கல்லூரிகளில், பின் வாசல் வழியாக, மாணவர்
சேர்க்கை நடத்தப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து,
தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்க பொது செயலர் பிரதாபன் கூறியதாவது:
வசதி படைத்த மாணவர்கள், சுயநிதி கல்லூரிகளில் மேற்படிப்பை
மேற்கொள்கின்றனர். ஏழை மாணவர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும்
கல்லூரிகளையே நம்பியுள்ளனர். எனவே, அரசு கல்லூரிகளில் செயல்படும் மாணவர்
சேர்க்கை குழுவில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என,
சேர முன்னுரிமை அளிக்க வேண்டும்.
அரசு உதவி பெறும் கல்லூரிகளில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, மாணவர்
சேர்க்கை நடக்கிறதா என்பதை கண்காணிக்கவும், மண்டல கல்லூரி கல்வி
இயக்குனரகத்திற்கு, கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு,
பிரபாகரன் கூறினார்.
இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குனர் செந்தமிழ் செல்வி கூறுகையில்,
"அரசு உதவி பெறும் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை குழு அமைக்கப்பட்டு,
மாணவர் சேர்க்கை நடக்கிறது. இக்குழு சரியாக செயல்படவில்லை என புகார்
வந்தால் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...