சென்னை:
பி.இ., மற்றும் எம்.பி.பி.எஸ்.,
சேர்க்கைக்கான கலந்தாய்வு பணிகள், மும்முரமாக நடந்து
வருகின்றன. பி.இ.,க்கு
விண்ணப்பித்தமாணவர்களின் எண்ணிக்கை, இறுதியாக, 1.89 லட்சமாக உயர்ந்தது. கடந்த மூன்று
நாளில் மட்டும், 89 ஆயிரம் விண்ணப்பங்களை, அண்ணா
பல்கலை பெற்றுள்ளது.
கடந்த, 4ம் தேதி
முதல், 20ம் தேதி வரை,
பி.இ., விண்ணப்பங்கள் விற்பனை
செய்யப்பட்டன. கடைசி நாள் நிலவரப்படி,
2.35 லட்சம் விண்ணப்பங்கள், விற்பனை ஆயின. எனினும்,
19ம் தேதி வரை, 1 லட்சம்
விண்ணப்பங்கள் மட்டுமே, பூர்த்தி செய்யப்பட்ட நிலையில், அண்ணா பல்கலைக்கு கிடைத்தன.
எம்.பி.பி.எஸ்.,
சீட் கேட்டு 29 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தபால் மற்றும் இணையதளம் வழியாக
சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களும் சேர்த்து, இறுதியாக, 1.89 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக,
அண்ணா பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த, மூன்று நாளில் மட்டும்,
89 ஆயிரம் விண்ணப்பங்கள், கூடுதலாக வந்துள்ளன. கடந்த ஆண்டை விட,
7,000 விண்ணப்பங்கள், கூடுதலாக வந்திருப்பதாகவும், பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.இதனால், கணிசமான அளவிற்கு,
பி.இ., இடங்கள் நிரம்பும்
என, பல்கலை எதிர்பார்க்கிறது. எப்படி
பார்த்தாலும், 2 லட்சம் இடங்களில், 60 ஆயிரம்
முதல், 75 ஆயிரம் இடங்கள் வரை,
காலி ஏற்படும் எனவும், பல்கலை வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
துணைவேந்தர்
இன்று பதவி ஏற்பு
கலந்தாய்வுக்கான
பணிகள், விரைவில் துவங்க உள்ள நிலையில்,
அண்ணா பல்கலையின் புதிய துணைவேந்தராக, ராஜாராம்
நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இன்று காலை,
10:00 மணிக்கு, துணைவேந்தர் பொறுப்பை ஏற்கிறார். பல மாதங்களாக, பொறுப்பு
துணைவேந்தர் காளிராஜ் கீழ், பல்கலை இயங்கி
வந்தது.தற்போது, துணைவேந்தர் நியமிக்கப்பட்டதன் மூலம், பல்கலை பணிகள்
வேகம் பெறும் என்றும், கலந்தாய்வு
பணிகளும் முடுக்கி விடப்படும் எனவும், பல்கலை வட்டாரங்கள்
தெரிவித்தன.
"ரேண்டம்'
எண்
ஜூன்,
5ம் தேதி, "ரேண்டம்' எண்களை வெளியிடுவதற்கான பணிகளில்,
அண்ணா பல்கலை மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
விண்ணப்பித்துள்ள, 1.89 லட்சம் மாணவர்களுக்கும், கம்ப்யூட்டர்
மூலம், 10 இலக்க எண்கள் ஒதுக்கப்படும்.
சம அளவிலான, "கட்-ஆப்' மதிப்பெண்,
பிறந்த தேதி ஆகிய, இரண்டும்
சம அளவில் இருந்தால், நான்காவது
பாடத்தில் பெறும் மதிப்பெண்கள், கணக்கில்
எடுத்துக் கொள்ளப்படும்.
இதுவும்,
ஒரே மதிப்பெண்களாக இருந்தால், கம்ப்யூட்டர் ஒதுக்கிய ரேண்டம் எண்ணில், எந்த
மாணவரின் எண் மதிப்பு அதிகமாக
உள்ளதோ, அந்த மாணவர், முதலில்,
கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார். இதன் பின், ஜூன்,
12ம் தேதி, அனைத்து மாணவர்களின்,
"ரேங்க்' பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
எம்.பி.பி.எஸ்.,
தமிழகத்தில்
உள்ள, 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில்,
2,145 எம்.பி.பி.எஸ்.,
இடங்கள் உள்ளன. இவற்றில், 15 சதவீதம்,
அகில இந்திய ஒதுக்கீடு போக,
மீதமுள்ள, 1,823 இடங்கள்; 11 தனியார் மருத்துவக் கல்லூரிகளில்,
அரசு ஒதுக்கீடாக உள்ள, 838 இடங்கள்; அரசு பல் மருத்துவக்
கல்லூரியின், 85 பி.டி.எஸ்.,
இடங்கள்; 18 தனியார் பல் மருத்துவக்
கல்லூரிகளில், அரசு ஒதுக்கீடான, 909 பி.டி.எஸ்., இடங்கள்
ஆகியவை, ஆண்டுதோறும், கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.எம்.பி.பி.எஸ்.,
- பி.டி.எஸ்., படிப்புகளில்,
2013-14ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு,
ஜூன், 18ம் தேதி துவங்க
உள்ளது. இதில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்கள்,
இம்மாதம், 9ம் தேதி முதல்,
18ம் தேதி வரை, அனைத்து
அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் வினியோகிக்கப் பட்டது.
கூடுதல்
இடங்கள்
மொத்தம்,
40 ஆயிரம் விண்ணப்பங்கள்அச்சிடப்பட்ட நிலையில், 32 ஆயிரத்து 53 விண்ணப்பங்கள் விற்பனையாகின. இவற்றில், பூர்த்தி செய்யப்பட்ட, 29 ஆயிரம் விண்ணப்பங்கள், மருத்துவக்
கல்வி இயக்ககத்தால் பெறப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, மொத்தம்
விற்பனையான, 39 ஆயிரம் விண்ணப்பங்களில், 29 ஆயிரம்
விண்ணப்பங்கள் மட்டுமே திரும்பப் பெறப்பட்டது
குறிப்பிடத்தக்கது.விண்ணப்பங்கள் பரிசீலனை முடிந்து, ஜூன், 6ம் தேதி,
மதிப்பெண் தரவரிசை பட்டியலை வெளியிட
திட்டமிட்டுள்ளதாக, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை
அரசு மருத்துவக் கல்லூரி செயல்படவும், சென்னை
மருத்துவக் கல்லூரியில், 85 மற்றும் ஸ்டான்லி மருத்துவக்
கல்லூரியில், 100 எம்.பி.பி.எஸ்., இடங்களை அதிகரித்துக்
கொள்ளவும், இந்திய மருத்துவ கவுன்சில்
அனுமதி அளித்தால், இந்த ஆண்டு கூடுதலாக,
285 எம்.பி.பி.எஸ்.,
இடங்கள் கிடைக்கும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...