"கல்வி மட்டுமே திருட முடியாத செல்வம்; பொருளாதார பிரச்னை,
எப்போதும் கல்விக்கு குறுக்கே தடையாக நிற்கக்கூடாது," என கலெக்டர்
கோவிந்தராஜ் பேசினார்.
திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கியான, கனரா வங்கியின் 17
கிளைகள் சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் 16 பள்ளிகளில் பயின்று,
1000க்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற, பிளஸ் 2 மாணவர்களுக்கு, கடன் ஒப்புதல்
கடிதம் வழங்கும் நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கனரா வங்கி கிளை மேலாளர் ராமச்சந்திரன் வரவேற்றார். முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி முன்னிலை வகித்தார். கலெக்டர் பேசியதாவது:
ஏழை, எளிய மாணவர்களுக்கு பணம் இல்லை என்ற பொருளாதார
பிரச்னை, கல்விக்கு குறுக்கே தடையாக நிற்கக்கூடாது. கல்வி மட்டுமே பிறரால்
திருட முடியாத பெருஞ்செல்வம். அத்தகைய கல்வியை, ஏழை, எளிய மாணவர்கள் பெற்று
பயனடையும் வகையில், வங்கிகள் கல்விக்கடன் வழங்குகின்றன.
மொத்தம் 16 பள்ளிகளில் படித்த 100 மாணவர்களுக்கு, இரண்டு
கோடி ரூபாய் மதிப்பிலான கல்விக்கடனுக்கான ஒப்புதல் கடிதம்
வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 46 வங்கிகள் மற்றும் 258 கிளைகள்
மூலமாக, எளிதில் கல்விக்கடன் வழங்கப்படும். கடன் ஒப்புதல் கடிதம்
பெற்றவர்கள், நான்கு லட்சம் ரூபாய் வரை கல்விக்கடன் பெறலாம்.
இதேபோல், பிளஸ் 2 தேர்வில் 800 மதிப்பெண்ணுக்கு அதிகமாக பெற்ற மாணவர்களுக்கும், இதேபோல், ஒப்புதல் கடிதம் வழங்கப்படும்.
முன்னோடி வங்கி மூலமாக, அனைத்து வங்கிகள் மற்றும் கிளைகளை
ஒருங்கிணைத்து, கல்விக்கடன் முகாம் நடத்தப்படும். கடந்தாண்டு 4,000
மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளதைபோல், இந்தாண்டும்
அதிகப்படியான மாணவர்களுக்கு வழங்கப்படும், என்றார்.
முன்னோடி வங்கி மேலாளர் ராஜகோபால் பேசுகையில், "கல்லூரியில்
அனுமதிக்கப்பட்ட கடிதத்துடன் விண்ணப்பித்தால், 15 நாட்களுக்குள் கடன்
வழங்கப்படும். மாணவர்கள், "கவுன்சிலிங்" முறைக்கு முன்னுரிமை கொடுக்க
வேண்டும். "கவுன்சிலிங்" மூலம் தேர்வாகும் மாணவர்களின், ஆண்டு குடும்ப
வருமானம் 4.50 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருந்தால், மத்திய அரசு
கல்விக்கடனுக்கான வட்டியை செலுத்தும்; மாணவர்கள் படிப்பு முடிந்து அசல்
தொகையை மட்டும் செலுத்தினால் போதும்," என்றார்.
முன்னதாக, மாணவ, மாணவியருக்கு, கல்விக்கடனுக்கான ஒப்புகை கடிதம் வழங்கப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...