அரசு மருத்துவக் கல்லூரிகளில், கூடுதலாக மாணவர்கள் சேர்வதற்கு வசதியாக,
எம்.பி.பி.எஸ்., இடங்களை அதிகரிப்பது குறித்த ஆய்வு முடிவை, இந்திய
மருத்துவ கவுன்சில் அறிவிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும், கடந்த ஆண்டு, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம்
மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில், அதிகரிக்கப்பட்ட, 100 எம்.பி.பி.எஸ்.,
இடங்களுக்கு, இந்த ஆண்டும் அனுமதி அளிப்பது தொடர்பாகவும், திருவண்ணாமலையில்
புதிதாக துவக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரியில், மாணவர்
சேர்க்கைக்கு அனுமதி தருவது குறித்தும், எம்.சி.ஐ., குழு தனித்தனியாக ஆய்வை
நடத்தியது.
இந்த ஆய்வுகள் முடிந்து, ஒரு மாதத்திற்கு மேல் ஆகி உள்ள நிலையில்,
அவற்றின் முடிவுகள், இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனால், குறிப்பிட்ட அரசு
மருத்துவக் கல்லூரிகளுக்கு, கூடுதல் எம்.பி.பி.எஸ்., இடங்கள் கிடைக்குமா
என்பதில், "சஸ்பென்ஸ்" நீடிக்கிறது.
எம்.பி.பி.எஸ்.,- பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு,
ஜூன், 18ம் தேதி துவங்குகிறது. அரசு மருத்துவக் கல்லூரிகளில், இந்த ஆண்டு,
கூடுதலாக, 242 பேர் வரை சேர வசதியாக, கலந்தாய்வு துவங்கும் முன்,
எம்.சி.ஐ., தன் ஆய்வு முடிவை அறிவிக்க வேண்டும் என டாக்டர் கனவில்
இருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் கோருகின்றனர்.
இதன் மூலம், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டில்,
எம்.பி.பி.எஸ்., சேரும் மாணவர்களில், "கட்-ஆப்" மதிப்பெண் அடிப்படையில்,
242 பேருக்கு, முதல் கட்ட கலந்தாய்விலேயே, அரசு மருத்துவக் கல்லூரிகளில்
சேர, வாய்ப்பு கிடைக்கும்.
மேலும், அவர்கள், தனியார் கல்லூரிகளில் இருந்து, அரசு கல்லூரிகளில்
சேர்ந்தபின், தாங்கள், லட்சக்கணக்கில் செலுத்திய, கல்வி கட்டணத்தை திரும்ப
பெற, தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திடம், போராட வேண்டி இருக்காது.
இதுகுறித்து, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் பொதுச் செயலர் ஜெயலால்
கூறியதாவது: ஆய்வுக்குப் பின், எம்.சி.ஐ., கேட்கும் ஆவணங்களை,
சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்கள் தருவது, மத்திய அரசிடம் நடைமுறை அனுமதி
பெறுவது போன்றவற்றுக்கான காலஅளவை பொறுத்தே, எம்.பி.பி.எஸ்., இடங்களை
அதிகரிப்பது குறித்த, தன் ஆய்வு முடிவை, எம்.சி.ஐ., தெரிவிக்கிறது.
இம்முடிவு, கலந்தாய்வு துவங்குவதற்கு முன் தெரிந்தால், மாணவர்களுக்கு பலனுள்ளதாக இருக்கும். இவ்வாறு ஜெயலால் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...