Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாற்றங்களுக்காகக் குழந்தைகள் காத்திருக்கிறார்கள் .-உதயசங்கர்


       குழந்தைகள் அவரவர் பெற்றோர்கள்வழி வந்திருந்தாலும் அவர்கள் மானுட இனத்திற்கே சொந்தமானவர்கள். மனித இனம் தழைக்க, நீடித்திருக்க, வந்த அற்புத மலர்கள். ஒவ்வொரு குழந்தையும் இந்த சமூகத்தின் பொக்கிஷம்

           பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் பாதுகாத்து, போஷித்து, உற்றுக்கவனித்து, அன்பே உருவான அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டு, சுதந்திரமான, ஜனநாயகபூர்வமான, பங்கேற்புள்ள கல்வியை அவர்களுக்குக் கொடுத்து ஏற்றத்தாழ்வுகளில்லாத சமத்துவமான ஒரு சமூகத்தை அவர்களிடம் கொடுக்க வேண்டிய கடமை ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறது. ஆனால் என்ன நடந்து கொண்டிருக்கிறது?
 
               குழந்தைகளை விலங்குகள் போல் நடத்துவது, மனதாலும் உடலாலும் துன்புறுத்துவது, பாலியல் சுரண்டலுக்கு பலியாக்குவது, குழந்தைகளின் மீது அதிகாரம் செலுத்துவது, அலட்சியப்படுத்துவது, சமத்துவமற்ற ஏற்றதாழ்வுகளைக் கற்பிப்பது, தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்துவது, நிற, இன, மத, சாதி, வேறுபாடுகளைக் கற்பிப்பது, சாதிய, நிற, வேறுபாட்டினால் அவமானப்படுத்துவது, மதரீதியான வேறுபாடுகளினால் அந்தந்த மதப்பயங்கரவாதிகளால் கொல்லப்படுவது, குழந்தைகளின் அபிப்பிராயங்களைக் கேட்க மறுப்பது, அவர்களுடைய ஜனநாயக உரிமைகளை மதிக்க மறுப்பது, பொதுவெளியிலும், குடும்பத்துக்குள்ளும் குழந்தைகளை மதிக்க மறுப்பது, இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். குழந்தைகளுக்கு எதிராக ஒவ்வொரு பெற்றோரும், தனிமனிதனும், சமூகமும் செய்து வரும் கொடுமைகளைக் கணக்கிட முடியாது. இந்தப் பூமியின் எதிர்காலச்சொந்தக்காரர்களை பெரியவர்களாகிய நாம் நடத்துகிற விதத்தைப் பார்த்தால் அவர்களை மனிதர்களாகவே மதிக்கவில்லை என்று தோன்றும்.

           பெரும்பாலான குழந்தைகளுக்கு மகிழ்ச்சியில்லை. பெரும்பாலான குழந்தைகள் வீட்டிலும், வெளியிலும், பள்ளியிலும், சமூகத்திலும் ஒடுக்கப்படுகிறார்கள். பெரும்பாலான குழந்தைகள் தங்கள் குழந்தைமையைத் தொலைத்தவர்கள். பெரும்பாலான குழந்தைகள் ஊட்டச்சத்துக்குறைபாட்டினால் நோயுற்றவர்கள், பெரும்பாலான குழந்தைகள் தங்கள் குழந்தைப்பருவத்திலேயே பெரியவர்களைப் போல நடந்து கொள்பவர்கள் அல்லது அப்படி நடக்கும்படி வற்புறுத்தப்படுபவர்கள், பெரும்பாலான குழந்தைகள் ஏதோ ஒரு வகையில் வேலை செய்து சம்பாதித்துக் குடும்பத்துக்குக் கொடுப்பவர்கள், பெரும்பாலான குழந்தைகள் தங்கள் குழந்தைப்பருவத்தில் ஏதோ ஒரு சமயத்திலாவது பாலியல் சுரண்டலுக்கு ஆளானவர்கள், பெரும்பாலான குழந்தைகள் பெற்றோரின் வன்முறையினால் துன்புறுபவர்கள், பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கூடத்தின், ஆசிரியர்களின் அடக்குமுறையினால் மனம் கூம்பியவர்கள், பெரும்பாலான குழந்தைகள் அடக்குமுறைக்குப் பயந்து கேள்வி கேட்க அஞ்சுபவர்கள், பெரும்பாலான குழந்தைகள் பெற்றோர் மற்றும் சமூகத்தின் அறிவியல்பூர்வமற்ற வாழ்க்கைப்பார்வையினால் மூடநம்பிக்கைகளின் தாக்கத்துக்கு ஆளானவர்கள்,பெரும்பாலான குழந்தைகள் தங்கள் பெற்றோர்களின் பைத்தியக்காரத்தினால் அல்லது மந்தைபுத்தியினால் தனித்துமிக்க தங்கள் திறமையைத் தொலைத்தவர்கள், ஆக குழந்தைகளுக்குச் சொந்தமான இந்த உலகத்தில் அந்தக் குழந்தைகளைக் கொடுமைப்படுத்தும் செயல்களே நடந்து கொண்டிருக்கின்றன என்றால் அந்தக் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் போது அவர்கள் இந்த உலகை, சகமனிதர்களை, இயற்கையை, ஜீவராசிகளை எப்படி எதிர்கொள்வார்கள்?

            நம்மிடம் குழந்தைகளின் உளவியல் சம்பந்தமான ஆய்வுகள் இல்லை. நம்மிடம் குழந்தைகளைப் பற்றிய புத்தகங்கள் சிலவே உள்ளன. அதை வாசிக்கும் பெற்றோரும் மிகச்சிலரே. நம்மிடம் குழந்தைகள் இலக்கியம் இன்னும் போதுமான அளவுக்கு வளரவில்லை. ஏனெனில் பாடப்புத்தகங்களைப் படித்தால் போதும் என்ற மனநிலை பெற்றோர்களுக்கு இருக்கிறது. நம்மிடம் குழந்தைப்படைப்பாளிகள் இல்லை. ஏனெனில் குழந்தைகளின் படைப்பூக்கத்தை முளையிலேயே கிள்ளி எறிகிற வேலையை பள்ளிக்கூடமும் பெற்றோரும் செய்கிறார்கள். நம்மிடம் குழந்தைகளுக்கான பத்திரிகைகள் அதிகம் இல்லை. அதெல்லாம் மேல்தட்டு, உயர்மத்தியதரவர்க்கத்துக்குச் சொந்தமானதென்று யாரும் கவலைப்படுவதில்லை. நம்மிடம் அறிவியல்பூர்வமான வாழ்க்கைப்பார்வையை உருவாக்கவும், குழந்தைகளுடைய படைப்பூக்க உணர்வை வளர்த்தெடுக்கவும் அமைப்புகள் துளிர் தவிர வேறு எதுவும் இல்லை. ஏனெனில் குழந்தைகளின் ஆளுமை பற்றிக் கவலைப்பட நமக்கு நேரம் இல்லை. குழந்தைகளுக்கான மாற்றுப்பள்ளிக்கூடங்கள் நம்மிடம் அதிகம் இல்லை. குழந்தைகளுக்கான மாற்றுப்பண்பாட்டு நிகழ்வுகளுக்கான நிகழ்ச்சி நிரல் நம்மிடம் இல்லை. அதனால் மதநிறுவனங்கள் குழந்தைகளை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. குழந்தைகளுக்கான உரிமைகளுக்காகப் போராடுவதற்கு எந்த அமைப்பும் இல்லை. ஏனெனில் சமூகத்தில் இன்னும் பழைய சநாதனக்கருத்துகளே ( குழந்தைகள் அவர்களுடைய பெற்றோர்களின் சொத்து அவர்கள் அடிக்கலாம் மிதிக்கலாம் உதைக்கலாம் ஏன் கொலை கூடச் செய்யலாம்) மேலோங்கி நிற்கின்றன.

ஆக மொத்தத்தில் ஒட்டுமொத்த சமூகமே குழந்தைகளைப்பற்றிக் கவலைப்படவில்லை. இது தான் யதார்த்தம். நடக்கின்ற சின்னச்சின்ன சீர்திருத்த நிகழ்வுகள் எல்லாம் ஒட்டுமொத்த குழந்தைகளின் பரிதாபநிலைமையில் எந்தப் பெரிய மாற்றங்களையும் ஏற்படுத்தப்போவதில்லை. இடது சாரிகள், சமூக அக்கறையுள்ள அறிவுஜீவிகள் ஆகியோரின் தலையீடு மிகவும் அவசியம். குழந்தைகளுக்கான பாலர் அமைப்புகள், குழந்தைகளுக்கான வயது, வாசிப்புத்திறனுக்கேற்ற பத்திரிகைகள், குழந்தைகளுக்கான கதைப்புத்தகங்கள், அறிவியல் நூல்கள், தொழில்நுட்ப நூல்கள், குழந்தைகளைப் பற்றிய நூல்கள், குழந்தைகள் எழுதும் நூல்கள், குழந்தைகளின் உளவியல் குறித்த ஆராய்ச்சிகள், குழந்தைகளின் படைப்பூக்கத்தை ஊக்குவிக்கும் செயல்திட்டங்கள், அறிவியல்பூர்வமான வாழ்க்கைப்பார்வையை உருவாக்கும் பயிற்சிமுறைகள், குழந்தைகளுக்கான விழாக்கள், குழந்தைகளுக்கான கல்விமுறையில் மாற்றங்கள், குழந்தைகளைப் பற்றி, அவர்களுடைய உளவியல்பற்றி, அவர்களுடைய தனித்துவமிக்க திறமைகளைப் பற்றி பெற்றோர்களை ஆற்றுப்படுத்துதல், என்று நாம் குழந்தைகளுக்காகச் செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம். பாதையும் நெடிது. நாம் மிகச்சில தப்படிகளே எடுத்து வைத்திருக்கிறோம்.

தொழிலாளர் உரிமைகளுக்காகப் போராட்டங்கள் நடக்கின்றன. விவசாயிகளின் உரிமைகளுக்காகப் போராட்டங்கள் நடக்கின்றன. இளைஞர்களின் உரிமைக்காகப் போராட்டங்கள் நடக்கின்றன. பெண்களின் உரிமைகளுக்காகப் போராட்டங்கள் நடக்கின்றன. ஆனால் இந்த பூமியின் எதிர்காலச்சொந்தக்காரர்களான குழந்தைகளின் உரிமைகளுக்காக, அவர்களின் ஆளுமை வளர்ச்சிக்காக, அவர்களின் படைப்பூக்க மலர்ச்சிக்காக யார் போராடுவது? குழந்தைகளைப்பற்றி இந்தச் சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் சநாதனக்கருத்துகளை மாற்றப்போராடப் போவது யார்? மாற்றங்களுக்காகக் குழந்தைகள் காத்திருக்கிறார்கள்.

நன்றி- இளைஞர் முழக்கம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive