அரசு பள்ளிகளை பராமரிக்கவும், தரம் உயர்த்தவும்
தேவையான நிதி உதவியை செய்வதில் மேடவாக்கத்தை சேர்ந்த விவசாயி தாராளமாக
செய்து வருகிறார்.
தற்போது, சிறுதாவூர் நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்த,
பொதுமக்கள் பங்களிப்பாக செலுத்த வேண்டிய, ஒரு லட்சம் ரூபாய் நிதியை, அவர்
வழங்கி உள்ளார்.
திருப்போரூர் அடுத்துள்ள சிறுதாவூர் கிராமத்தில், ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி, கடந்த 80 ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்டது. இதில், தற்போது 372 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.
இங்கு, எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள், மேற்படிப்பை தொடர, 6 கி.மீ., தொலைவில் உள்ள திருப்போரூர் அல்லது 5 கி.மீ., தொலைவில் உள்ள மானாம்பதிக்கு செல்ல வேண்டும். இங்கிருந்து, மானாம்பதி, திருப்போரூர் செல்ல, போதிய பேருந்து வசதி இல்லை.இதனால், மாணவியர் பலர், படிப்பினை பாதியில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இப்பிரச்னைக்கு தீர்வாக, சிறுதாவூர் நடுநிலைப்பள்ளியை, தரம் உயர்த்த வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கு, பொது மக்கள் பங்களிப்பாக, ஒரு லட்சம் ரூபாய், அரசிற்கு செலுத்த வேண்டும் என, கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதனை செலுத்த முடியாமல் கிராம மக்கள் தவித்து வந்தனர்.
இதையறிந்த, மேடவாக்கத்தை சேர்ந்த கல்வி ஆர்வலரும், விவசாயியுமான நடராஜன், சிறுதாவூர் நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துவதற்கு, மக்கள் பங்களிப்பாக, ஒரு லட்சம் ரூபாயை, சிறுதாவூர் ஊராட்சித் தலைவரிடம் வழங்கி உள்ளார்.
இதுகுறித்து, விவசாயி நடராஜன் கூறியதாவது: இப்பள்ளியில், எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், மேற்படிப்பை தொடர நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளதால், படிப்பை பாதியில் நிறுத்தி விடுகின்றனர். குறிப்பாக, கிராமப்புறங்களில், உள்ள மாணவியரை வெளியூரில் படிக்க வைக்க பெற்றோர் மறுக்கின்றனர்.
இதனால், பெரும்பாலான மாணவியரின் கல்விக் கனவு நிறைவேறாமல் போகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், வசதி இல்லாத காரணத்தால், எனது குடும்ப உறுப்பினர்கள் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலை, தற்போது உள்ள மாணவர்களுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக, மாம்பாக்கம், பள்ளிக்கரணை, மாமல்லபுரம், நெம்மேலி, திருப்போரூர், ஒரகடம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தையூர் உட்பட 17 அரசு பள்ளிகளுக்கு இதுவரை நிதி வழங்கியுள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...