அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான, நாசா சார்பில் நடத்தப்பட்ட, "கிரேட்
மூன்பக்கி ரேஸ்" எனப்படும், அறிவியல் போட்டிகளில், இரு பிரிவுகளில்
பங்கேற்ற இந்திய மாணவர்கள், முதல் பரிசை வென்றுள்ளனர். அத்துடன், இந்திய
மாணவர் வடிவமைத்த வாகனத்திற்கு, சிறப்பு பரிசும் கிடைத்துள்ளது.
இந்தாண்டு, கடந்த மாதம், 25 முதல், 28ம் தேதி வரை நடைபெற்ற போட்டிகளில்,
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள, "அக்யூரிட் இன்ஸ்டிடியூட் ஆப்
மேனேஜ்மென்ட் அண்டு டெக்னாலஜி"யை சேர்ந்த மாணவர்கள், பங்கேற்று முதலிடம்
பிடித்தனர்.
மகாராஷ்டிராவிலுள்ள உள்ள, படேல் ஸ்கூல் ஆப் டெக்னாலஜி மேனேஜ்மென்ட்டை
சேர்ந்த மாணவர்கள், நிலவிலிருந்து அனுப்பப்படும் தகவல்களை சேகரிக்கும்
முறையில், புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியதில், முதலிடம்
பிடித்தனர். இந்த இரு குழுவினருக்கும் நாசாவின் சார்பில், பரிசுகளும்,
சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
அதுமட்டுமின்றி, போட்டியின் முக்கிய அம்சமாக, நிலவில் பயணிக்க கூடிய
வகையில், எடை குறைந்த நவீன வாகனத்தை வடிவமைத்ததற்காக, இந்திய குழுவிற்கு
தலைமை தாங்கிய, இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த, சாகேப் சூத் சானுவுக்கு,
சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
உலக அளவில் தயாரிக்கப்பட்ட அனைத்து வாகனங்களிலும், இதுவே மிகவும் எடை
குறைந்ததாகவும், நவீன முறையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், நாசா
விஞ்ஞானிகள் பாராட்டு தெரிவித்தனர். இவர் தயாரித்த வாகனம், எட்டு அடி
நீளமும், மிகக் குறைந்த எடையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
இதை மடக்கி, ஒரு சிறிய பெட்டியாக மாற்றும் வகையிலும் இருந்தது. நான்கு
சக்கரங்களை உடைய இதில், இரண்டு பேர் பயணிக்கலாம். சிறு வயது முதலே,
பொம்மைகளை பிரித்து மீண்டும் சரி செய்யும் பழக்கமுடைய சாகேப், தற்போது உலக
அளவில் சாதனை படைத்ததில், மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாக
தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...