Home »
» ஆங்கில வழிக் கல்விக்கு அனுமதி அளித்தால் ஏராளமான உபரி ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள்
அரசு
பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் குறைந்து
வருகிறது. இலவச புத்தகம், சீருடை,நோட்டுப் புத்தகங்கள், கல்வி உதவித் தொகை
என பல்வேறு நலத் திட்டங்கள் மாணவர்களுக்காக செயல்படுத்தப் பட்டுக்
கொண்டிருக்கும்போதும் ஏன் மாணவர்கள் பள்ளியில் சேர்வதில்லை.
அரசு
பள்ளிகளில் பின்பற்றப்படும் செயல்வழிக் கற்றல் படைப்பாற்றல் கல்விமுறை
மிகச் சிறப்பானது இந்த முறை எந்த பெரிய புகழ்பெற்ற பள்ளிகளிலும் பின்பற்றப்
படுவதில்லை. பின்னர் ஏன் மாணவர்கள் சரியாகப் படிக்கவில்லை. பல்வேறு
சலுகைகள் இருந்தும் மாணவர்கள் சேர்க்கை குறைவு ஏன்? என்ற கேள்வியை
கல்வித்துறை அதிகாரிகள் எழுப்பி வருகிறார்கள்.
இதற்குமுக்கிய
காரணம் மக்கள் ஆங்கில வழிக் கல்வியை விரும்புவதுதான், என்று ஆசிரியர்கள்
தரப்பில் கூறப்பட்டது. ஆங்கில வழியில் படித்தால்தான் எதிர்காலத்திற்கு
நல்லது என்று பெரும்பாலோர் நினைப்பது கண்கூடு. தமிழ் வழியில் படித்த
முந்தைய தலைமுறையினர் தன் பிள்ளைகளை எவ்வளவு செலவானாலும் ஆங்கில வழிக்
கல்வியில்தான் படிக்க வைக்கவேண்டும். வசதி வாய்ப்பு அற்றவர்களும், படிப்பு
வராத மாணவர்களும்தான் அரசுப் பள்ளிகளில்தான் படிப்பார்கள்.
அவர்களுக்காகத்தான் அந்தப் பள்ளிகள். நாம் அப்போது வசதி குறைவானவர்களாக
இருந்ததால் அரசு பள்ளியில் படித்தோம். ஆனால் அதற்கு இப்போது அவசியம் இல்லை.
நம் அரசு பள்ளியில் சேர்ப்பது கௌரவத்திற்கு இழுக்கானது போன்ற எண்ணங்கள் பல
பெற்றோர்களின் மத்தியில் காணப்படுகிறது.
இந்த சூழ்நிலையில்தான்
கடந்த ஆண்டு முன்னோட்டமாக தேர்ந்தெடுக்கப் பட்ட சில பள்ளிகளில் ஆங்கில
வழிக் கல்வி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அப்பள்ளிகளில் சேர்ந்த
மாணவர்கள் முதல் வகுப்பில் ஆங்கில வழியில் சேர்க்கப் பட்டனர். தமிழ்வழிக்
கல்வி இருந்தும் பெற்றோர்கள் ஆங்கில வழியையே தேர்ந்தெடுத்தனர். ஒருவர் கூட
தமிழ் வழியில் சேராத பள்ளிகளும் உண்டு. சென்னையில் இப்படி சில மாநகராட்சி
பள்ளிகள் உள்ளன.
இதை கருத்தில் கொண்டே இந்த ஆண்டு 20 க்கு
மேற்பட்ட மாணவர்கள் இருந்தால் ஆங்கில வழிக் கல்வி தொடங்கலாம் என்ற அரசு
அனுமதித்திருக்கக் கூடும். சாதரணமாக 1:40(அதாவது ஒரு ஆசிரியருக்கு 40
மாணவர்கள்) என்பது அரசு பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் விகிதமாகும். ஆனால்
இப்போது 1:20 அளவுக்கு குறைந்து விட்டது. இதனால் பல பள்ளிகளில் (அரசு உதவி
பெறும் தனியார் பள்ளிகள் உட்பட) பல பள்ளிகளில் ஆசிரியர்கள் உபரி என்று
கணக்கிடப் பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை
அபாயகரமான அளவுக்கு அதிகரித்துக் கொண்டே வர, மாணவர் எண்ணிக்கையோ குறைந்து
வர ஒரு மாணவனுக்கு அரசு செலவிடும் தொகை மிக தனியார் பள்ளிகளில் அவர்கள்
செலுத்தும் கட்டணத்தைவிட அதிகமாக உள்ளது. அதுவும் நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள
பகுதிகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கடந்த ஆண்டு கணிசமான
அளவுக்கு உபரி ஆசிரியர்கள் கிராமப்புற பள்ளிகளுக்கு கட்டாய மாறுதல்
செய்யப்பட்டனர். அங்காவது மாணவர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதா என்று
பார்த்தால் அதுவும் இல்லை. எவ்வளவு குறைவாக மாணவர்கள் இருந்தாலும்
ஒராசிரியர் பள்ளிகள் கூடாது என்ற விதியின் படி இரண்டு ஆசிரியர்கள்
அப்பள்ளிகளில் பணி புரிகின்றனர். மாணவர் எண்ணிக்கை 40 க்கும் குறைவாகவே
இருக்கும். ஒவ்வோர் ஆண்டும் ஒரு ஆசிரியர் ஒய்வு பெற்று விட்டால்
அப்பணியிடம் நீக்கப்பட்டுவிடும்
தொடக்கக் கல்வியைப் பொருத்தவரை 15
ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஆசிரியர்களின் எண்ணிக்கையை விட இப்போது உள்ள
ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது. ஆனால் மாணவர்களின்
எண்ணிக்கையோ அதைவிட வேகமாக குறைந்து வருவதால் உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை
அதிகரித்த வண்ணமே உள்ளது. அதன் காரணமாகவே ஆங்கில மீடியம் தொடங்கப் பட்டால்
மாணவர் எண்ணிக்கை கூடும். உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறையும்.
ஆசிரியர்களுக்கு அரசால் வழங்கப்படும் ஊதியத் தொகை வீணாகாமல் இருக்கும்.
உபரி ஆசிரியர்கள் என்பதால் இவர்களை வீட்டுக்கு அனுப்பவும் முடியாது.
பணிப்பாதுகாப்பு அளிக்கப்படவேண்டிய கட்டாயத்தில் அரசு இருக்கிறது. இந்த
அறிவிப்பால் மகிழ்ச்சி அடைவது உபரி ஆசிரியர்கள்தான். ஆனால் அவர்கள்
மகிழ்ச்சி நிலைக்குமா என்பது இந்த ஆண்டு சேரும் மாணவர் எண்ணிக்கையை
பொறுத்தே அமையும். லட்சங்கள் கொடுத்து நகர்ப்புறங்களுக்கு மாறுதல் பெரும்
ஆசிரியர்கள் எப்போது வேறு ஒன்றியத்திற்கோ அல்லது மாவட்டத்திற்கோ தூக்கி
அடிக்கப் படுவோமா என்ற அச்சத்துடன் உள்ளனர்
அரசு பள்ளிகளில்
உபரியாக உள்ள ஆசிரியர்களை மாணவர்கள் அதிகம் உள்ள பள்ளிக்கு மாறுதல் செய்து
விட முடியும். ஆனால் அரசு நிதி உதவி பெரும் பள்ளிகளில் இதுபோன்ற
மாறுததல்களுக்கு அதிக வாய்ப்பில்லை. பணிப்பாதுகாப்பு இருப்பதால் ஒய்வு
பெறும் வரை உபரி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டிய நிலை அரசுக்கு
ஏற்பட்டுள்ளது.
ஆங்கில வழிக் கல்வியால் அதிக மாணவர்கள் சேர்வார்கள்
என்று எதிர்பார்க்கப் படுகிறது. தனியார் பள்ளிகளைப் போல பல்வேறு
விளம்பரங்கள் மூலம் அரசு பள்ளிகள் மாணவர் பிடிக்கும் வேலையில் இறங்கி
வருகிறது. மாணவர் இன்றி சில பள்ளிகள் மூடும் நிலைக்குக் கூட
தள்ளப்பட்டுள்ளன. ஆங்கில வழிக் கல்வி ஓரளவிற்காவது அப் பள்ளிகளை மீட்கக்
கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆசிரியர்களும் தங்கள் பணி இடத்தை
தக்கவைத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்.
ஆனால் ஆங்கில வழிக் கல்வி
நிதி உதவி பள்ளிகளில் தொடங்க அனுமதி அளிக்கப்படவில்லை. அவர்களுக்கு ஆங்கில
வழிக் கல்விக்கு அனுமதி அளித்தால் ஏராளமான உபரி ஆசிரியர்கள் பயன்
பெறுவார்கள். ஆனால் இப்பள்ளிளுக்கு அனுமதி வழங்கப்பட்டால் அரசு
பள்ளிகளில்சேரும் மாணவர்களை இவர்கள் கவர்ந்து இழுத்து விடுவார்கள் என்ற
கருத்தும் உண்டு.
அரசு பள்ளிகளில்ஆங்கில வழிக் கல்வி நடைமுறைப்
படுத்துவதால் காலப் போக்கில் தமிழ் வழிக் கல்வி முறையே இருக்காது. இது அரசே
தமிழை அழிக்கும் செயலாக மாறிவிட வாய்ப்பு உண்டு என்று கருணாநிதி வைகோ
உட்பட பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதற்கு எதிரான கருத்தைக்
கூறுவோர் அரசுபள்ளிகளில் ஆங்கில வழியை எதிர்ப்பவர்கள் ஒருவர்கூட தங்கள்
பிள்ளைகளை தமிழ் வழியில் படிக்க வைப்பதில்லை. தாய்மொழி மூலமே சிறந்த கற்றல்
திறனை பெறமுடியும் என்பவர்கள் முதலில் அதற்கு முன் உதாரணமாக விளங்கட்டும்
பின்னர் ஆங்கில வழியை எதிர்க்கட்டும். தன் பிள்ளைகள் மட்டும் ஆங்கிலத்தில்
சிறந்து விளங்கவேண்டும் ஏழை மக்களுக்கு மட்டும் தமிழ் வழிக் கல்வி என்பது
எவ்விதத்தில் நியாயம் என்ற வாதத்தை முன்வைக்கின்றனர். தாய்மொழிக் கல்வி
என்ற பெயரில் அவர்கள் முன்னேற்றத்தை தடை செய்வது சரியா என்று கேட்கின்றனர்.
பத்தாம் வகுப்பு வரை தமிழ் மீடியத்தில் படித்துவிட்டு +2 ஆங்கில வழி
படிப்பவர் நிறையபேர் உண்டு. ஏன் ஆங்கில வழியில் சேர்ந்தோம் என்று எண்ணி
வருந்தக் கூடிய அளவுக்கு அவர்களுக்கு ஆங்கில வழி கடினமாக இருக்கும் .
அவர்களால் +2 வில் குறைந்த மதிப்பெண்ணே பெற முடிகிறது. முதலில் இருந்தே
ஆங்கிலத்தில் படித்தால் இந்த கஷ்டங்கள் இருக்காது என்று பெற்றோர்கள்
நம்புகிறார்கள்.தாய்மொழி வழியாக பெறக்கூடிய கல்வியே சிறந்தது. என்று
வல்லுனர்கள் கூறுகிறார்கள். மகாத்மா காந்திகூட தாய்மொழி வழிக் கல்வியையே
ஆதரித்தார். அது உண்மைதான் என்றாலும் உயர் கல்வி பெரும்பாலும்
ஆங்கிலத்தில்தான் படிக்க வேண்டி இருக்கிறது. ஆங்கில வழியில் படித்தவர்களே
வேலை வாய்ப்பை அதிக அளவில் பெற முடிகிறது என்று நம்பப்படுவதும் ஆங்கில
வழியைவிரும்புவதகு ஒரு காரணமாக அமைகிறது
ஆனால் ஐந்தாம் வகுப்பு வரை
ஆங்கில வழியில் படித்துவிட்டு அதற்கு மேல் பணம்கட்ட வழியின்றியோ அல்லது
சரியாக படிக்காத காரணத்தாலோ தமிழ் வழியில் சேருபவர்கள், தமிழும் வராமல்
ஆங்கிலமும் வராமல் தவிப்பதையும் பார்க்க முடிகிறது
பட்டப் படிப்பு
வரை கூட ஆங்கிலத்தில் படித்து விட்டாலும் ஆங்கிலம் சரளமாக பேச முடியாதவர்
பலர் உள்ளனர். வீட்டில் ஆங்கிலத்தை பயன்படுத்துபவர்கள்தான் ஆங்கிலத்தில்
சரளமாக உரையாட முடிகிறது.
இந்நிலையில் ஆங்கிலவழிக் கல்வி எந்த
விளைவுகளை ஏற்படுத்தும், இடைநிலை ஆசிரியர்களால் ஆங்கில வழியில் கற்பிக்க
முடியமா? ஆங்கில வழியிக் கல்வியின் மூலம்தான் தரமான கல்வியை அளிக்க
முடியுமா? அது உண்மையிலேயே சிறந்ததுதானா? தாய்மொழிக் கல்வியை மக்கள் ஏன்
விரும்புவதில்லை? இவற்றை இன்னும் கொஞ்சம் ஆராய்வோம். இதனால் சமுதாயத்தில்
ஏற்பட இருக்கிற சிக்கல்கள் - இடர்பாடுகள் என்ன?
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...