ஆசிரியர் தகுதித் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து வகையான போட்டித் தேர்வுகளையும் எளிதாக ஆசிரியப் பயிற்சி பெறும் மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் பி.எட்., எம்.எட். பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கெ.விஸ்வநாதன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் பி.எட்., எம்.எட். பட்டதாரிகளின் தேர்ச்சி விகிதம் கவலையளிக்கக் கூடியதாக இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு, பி.எட்., எம்.எட். பாடத் திட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவருவது குறித்து, சென்னையில் ஏப்ரல் 17-ஆம் தேதி கருத்துப்பட்டறை நடத்தப்பட்டது. இதையொட்டி, எனது தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், தென் மாநிலங்களில் இருந்து சிறந்த கல்வியாளர்கள், அறிஞர்கள் பங்கேற்று, பாடத் திட்டங்களில் கொண்டுவர வேண்டிய கருத்துகளைத் தெரிவித்து, விவாதங்கள் நடைபெற்றன.
இதனடிப்படையில், இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப ஆசிரிய மாணவர்கள் சிறந்த கல்வியைப் போதிக்கிற வகையிலும், தகுதித் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து வகையான போட்டித் தேர்வுகளையும் எளிதாக எதிர்கொண்டு வெற்றிபெறும் வகையிலும், பி.எட்., எம்.எட். பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை விரைவில் பல்கலைக்கழக வலைதளத்தில் வெளியிடப்படும். இதன்மூலம் பல்வேறு அறிஞர்கள், கல்வியாளர்கள் கருத்துகள் அறியப்படும். அவர்கள் கூறும் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு, தரமான வகையில் புதிய பி.எட்., எம்.எட். பாடத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.
தற்போதைய பாடத்திட்டத்தின்கீழ் பயின்றுவரும் ஆசிரிய மாணவர்கள் மற்றும் ஏற்கெனவே பி.எட்., எம்.எட். பட்டங்கள் பெற்றவர்களையும் தற்போதைய கல்விச் சூழலுக்கு ஏற்ப தயார்படுத்தும் வகையில் உலகளாவிய கருத்தரங்கம் ஜூன் மாதம் சென்னையில் நடத்தப்படும்.
இதில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், தைவான், சீனா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தலைசிறந்த கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள் பங்கேற்று கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், புதிய கற்பித்தல் முறையை கற்பிக்கவும், புதிய தொழில்நுட்பங்களின் அடிப்படையில் கற்பித்தல் முறைகளை பின்பற்றவும் இதுபோன்ற பன்னாட்டு கருத்தரங்குகள் உறுதுணையாக இருக்கும்.
தொலைநிலைக் கல்வி இயக்ககம்: ஆசிரியக் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி இயக்ககம் உருவாக்குவதற்கு ஆட்சிமன்றக் குழு அனுமதி வழங்கியுள்ளது. இதனடிப்படையில், 3 மாதத்தில் முதல்கட்டமாக கல்வி உளவியல் துறை, கல்வி தத்துவ இயல் துறை, கல்வி நுட்பவியல் துறை, கல்வி மேம்பாட்டுத் துறை, கல்வி ஏற்பாடு மற்றும் மேம்பாட்டுத் துறை, விழுமக் கல்வித் துறை ஆகிய 6 துறைகளுடன் தொலைநிலைக் கல்வி இயக்ககம் துவக்கப்படவுள்ளது. இதற்கான பேராசிரியர்கள், இணை மற்றும் உதவிப் பேராசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர்.
தனியார் கல்லூரி மாணவருக்கும் உதவித்தொகை: தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கும் அரசு கல்வி உதவித்தொகை வழங்கி உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழக வலைதளத்தில் அரசு உதவியுடன் தொடங்கப்பட்டுள்ள வலைநூலகத்தில் கல்வியியல் பாடப் புத்தகங்கள் அனைத்தும் இடம்பெற்றிருக்கும்.
விருப்பமுள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகத்தை அணுகினால் இந்த வலைதளத்தைப் பயன்படுத்தி வகுப்புகள் நடத்திக் கொள்ள முடியும் என்றார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...