"அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., வகுப்புகள்
துவங்குவது குறித்து, தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது" என,
பள்ளிக்கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் அறிவித்தார். சட்டசபையில், நேற்று
பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதம்...
தே.மு.தி.க., - சுபா: கள்ளர் சீரமைப்பு
பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, கலந்தாய்வு மூலம், பணியிட மாறுதல்
வழங்குவதில்லை. மற்ற துறை ஆசிரியர்களைப் போல், அவர்களுக்கும், கலந்தாய்வு
நடத்தி, பணியிட மாறுதல் வழங்க வேண்டும்.
வைகைச் செல்வன் - பள்ளிக்கல்வி அமைச்சர்: இந்த கோரிக்கையை, அரசு பரிசீலனை செய்து வருகிறது. விரைவில், நடவடிக்கை எடுக்கப்படும்.
சுபா: தனியார் பள்ளிகளில், கடந்த அக்டோபர்,
நவம்பர் மாதங்களில், மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டது. அரசு
விதிமுறைகளுக்கு மாறாக செயல்படும் பள்ளிகள் மீது, நடவடிக்கை எடுக்க
வேண்டும். அங்கன்வாடி மையங்களை, மழலையர் பள்ளிகளாக மாற்றி, அங்குள்ள
குழந்தைகளுக்கு, ஆங்கிலவழி கல்வியை வழங்க, அரசு முன்வர வேண்டும்.
அமைச்சர்: எல்.கே.ஜி., வகுப்புகளை துவங்க
வேண்டும் என, எம்.எல்.ஏ., கூறுகிறார். இது, நல்ல ஆலோசனை. இத்திட்டம்,
அரசின் பரிசீலனையில் உள்ளது.
சுபா: ஆசிரியர் தகுதித் தேர்வில், எஸ்.சி., -
எஸ்.டி., பிரிவு தேர்வர்களுக்கு, தகுதி மதிப்பெண்களை குறைக்க வேண்டும்.
மாநில அரசுகள், இந்த தகுதி மதிப்பெண்களை குறைத்துக் கொள்ளலாம் என, தேசிய
ஆசிரியர் கல்விக் குழுவும் தெரிவித்துள்ளது.
அமைச்சர்: தரமான ஆசிரியர்களை நியமனம் செய்தால்
தான், தரமான கல்வியை, மாணவர்களுக்கு வழங்க முடியும். எனவே, 60 சதவீத
மதிப்பெண்களை, தகுதித்தேர்வில் பெற வேண்டும் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுபா: தேசிய குழந்தைகள் நல உரிமை ஆணையத்தின்
தலைவர் சாந்தா சின்கா, பள்ளிகளில், பாலியல் குற்றங்களை தடுக்க, பள்ளிகள்
தோறும், புகார் பெட்டிகள் அமைக்க வேண்டும் என, தெரிவித்திருந்தார். இந்த
விஷயத்தில், அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
அமைச்சர்: பள்ளிகளில், புகார் புத்தகங்கள்
உள்ளன. பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவரை, "சஸ்பெண்ட்" செய்யாமல்,
"டிஸ்மிஸ்" நடவடிக்கையே எடுக்கிறோம்.
முதல்வர் ஜெயலலிதா: பள்ளிகள்தோறும், "சைல்டு
ஹெல்ப் லைன்" என்ற திட்டத்தின் மூலம், தொலைபேசி சேவை, ஏற்கனவே
அமல்படுத்தப்பட்டுள்ளது. இது, கட்டணமில்லா தொலைபேசி. மாணவர்கள், இதில்
புகார் செய்தால், உடனே, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக
நடவடிக்கை எடுப்பர். இவ்வாறு விவாதம் நடந்தது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...