அறியாமையையும், வறுமையையும் ஒழிக்கக் கூடிய கருவி, கல்வி. மனிதர்களுக்கு
எப் படிப்பட்ட கல்வி கொடுக்கப்பட வேண்டும் என்பது பற்றி, சுவாமி
விவேகானந்தர் சொல்லும் பொழுது, "மனிதர்களை, மனிதப் பண்புகளை உருவாக்கக்
கூடிய கல்வியே தேவை; வெறும் வயிற்றுக்குச் சோறிடும் கல்வி தேவையில்லை'
என்பார்.
கல்வி என்பது, சேவை மட்டுமல்ல, சமூகத்திற்கு ஏற்றாற் போல், மாணவர்களை உருவாக்குவதுமாகும். மாறி வரும் உலகில், மாணவர்களை உலகத் தரத்திற்கு ஏற்றாற் போல உருவாக்க வேண்டும். கற்பது ஒருவரது தலையாய கடமை. ஒரு நாட்டின் எதிர்காலம், அந்த நாட்டின் படித்தவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே உள்ளது.ஒருமுறை ரஷ்யாவுக்குச் சென்ற, மறைந்த முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு, அன்றைய ரஷ்ய அதிபர் குருஷேவிடம், "நீங்கள் உங்கள் நாட்டு இளைஞர்களுக்கு என்ன அறிவுரை வழங்குகிறீர்கள்' என்றதும், "மூன்று அறிவுரை' என்றார். "படியுங்கள், படியுங்கள், படியுங்கள்' என்பது தான் அது.
விவேகானந்தரைச் சந்தித்த இளைஞன், "இந்த நாட்டுக்காக ஏதாவது நல்லது செய்ய ஆசைப்படுகிறேன். என்ன செய்ய வேண்டும் என, நீங்கள் வழிகாட்ட வேண்டும்' என்றான். அதற்கு சுவாமிஜி, "நன்றாகப் படி. அதுவே, நீ இந்த நாட்டுக்குச் செய்யும் மிகப் பெரிய சேவை' என்றார். தொண்டாக இருந்த கல்வி, என்று தொழிலாக மாறியதோ, அன்றிலிருந்து துயரத்தின் ஆரம்பம் ஆனது. மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் வரவு, கல்வியில் மீண்டும் உயர்வு, தாழ்வு என்ற பேதத்தை ஏற்படுத்தியதோடு, தரமான கல்வி பெற பணமும் காரணியானது. அங்கு பெறும் கல்வியே தரமானது என, சமூகமும், கற்பிதம் செய்து கொண்டது.
கல்விக் கூடங்கள், பாடங்களைப் புரிய வைப்பதற்குப் பதில், மனனம் செய்யக் கற்றுக் கொடுத்தன. சிந்திப்பதற்கான தளம் அறவே அற்றுப் போனது. இதனால், மூளைச் சலவை செய்யப்பட்ட மாணவர்கள், அதிகமாக உற்பத்தியாயினர். சீரான கல்வி என்பதற்குப் பதில், செறிவற்ற, தரமற்ற, எதிர்காலவியலைத் திட்டமிடாத, சுயகாலில் நிற்பதற்குத் திராணியில்லாத, சிந்தனைக்கும், புத்துருவாக்கத்திற்கும் வழி வகுக்காத வெற்றிடக் கல்வியே, தரமான கல்வி என, திணிக்கப்பட்டன.மதிப்பெண்கள் மட்டுமே மாணவனை உன்னதப்படுத்தும் என்ற கருத்துரு உருவாக்கப்பட்டதன் விளைவு, புறவழிகளைத் தேடும் முயற்சியில் கல்வி நிர்வாகங்களையும், மாணவர்களையும், ஆசிரியர்களையும், பெற்றோரையும், ஈடுபடச் செய்தன.
பிள்ளைகளின் எதிர்காலமே தங்களுக்கு ஜீவாதாரம் என, நம்பிய பெற்றோர், இப்படி விளம்பரப்படுத்திய கல்வி நிறுவனங்களைத் தேடி, பணக்கட்டுகளுடன் படையெடுத்தனர். கல்வி நிறுவனங்கள் கல்வி சொல்லிக் கொடுக்கிறோம் என்ற போர்வையில், இரவென்றும் பகலென்றும் பாராமல், சுதந்திரங்களை எல்லாம் பறித்து, படிப்பு என்ற பெயரில் மாணவர்களைக் கசக்கிப் பிழிந்தனர். இதனால், கல்வியின் மீது நாட்டம் என்பதற்குப் பதில், மன இறுக்கமும், மன உளைச்சலுமே மாணவர்களுக்கு மிஞ்சின.
சமீப காலமாக, பள்ளிக் கல்வித் துறை, களங்கப்பட்டு நிற்பதைக் காண முடிகிறது. வினாத்தாள் தயாரிப்பதிலிருந்து, விடைத்தாள் திருத்துவது வரை, ஏகக் குளறுபடி. பாடத் திட்டம் எது என்பது கூட தெரியாமல் பயிற்றுவிக்கப் படுகின்றனர்.மாறியுள்ள பாடங்களை நடத்த ஆசிரியர்களும் முன்வரவில்லை. மாதா, பிதா, குரு, தெய்வம் என்று மரியாதைக்குரியவராகக் கருதப்படும் ஆசிரியர்களுள் சிலர், மதுபானம் அருந்தி கல்விக் கூடம் வருவதும், ஒழுக்கமற்ற முறையில் மாணவியருடன் நடந்து கொள்வதும், மாணவர்களைக் கொடூரமாகத் தண்டிப்பதும், நடைமுறை வழக்கங்களாகிப் போயின.
கல்வியை வியாபாரப் பொருளாக்குவதற்குத் துணைபோதல், தனிப் பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து சம்பாதிக்க நினைத்தல், மாணவர்களின் திறமையைப் பாராட்டத் தவறல், பொறுப்பற்ற தன்மை போன்றவை, மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்குத் தடைக் கற்கள் ஆயின.கல்வி என்பது ஒரு கூட்டு முயற்சி. இதில் அரசு, கல்விக்கூட நிர்வாகம், ஆசிரியர், மாணவர், பெற்றோர் என, ஒவ்வொருவரும் அவரவருக்கான பங்கை உணர்ந்து செயல்பட்டால் தான், கல்வி உன்னதம் கொள்ளும்.
கல்விக்கூட நிர்வாகம், இலகுவாகப் பணம் சம்பாதிக்கும் இடம் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் பாடத்தைப் புரிய வைப்பதோடு மட்டுமல்லாமல், வாழ்வியல் கல்வியையும், மாணவர்களுக்குப் புகட்ட வேண்டும். அடுத்த தலைமுறையினருக்கு அடித்தளம் அமைக்கும் சமூக விஞ்ஞானி, தான் என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.பெற்றோர், தங்கள் பிள்ளைகள் எப்படியாவது அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற மனோநிலையை மாற்றி, வாழ்க்கைக் கல்வியைப் பெறுவதே பயனுள்ளது என்ற மன நிலையைப் பெற வேண்டும். இந்த நாட்டுக்கும், வீட்டுக்கும் பயன்படும் கல்வியைபெறுவதே நோக்கம் என, மாணவர்கள் படிப்பைத் தொடர வேண்டும்.
அரசும், கல்வித் துறையும் கல்வித் திட்டங்கள் உருவாக்கத்திலிருந்து செயல்படுத்துவது தொடங்கி, தரமான மாணவனை இந்நிலத்திற்கு நல்குவதே தலையாய கடமை என்பதைப் பொறுப்புடன் உணர்ந்து கொள்ள வேண்டும்.கல்வி என்பது கடைச்சரக்கல்ல, கற்பதும், கற்பிப்பதும், வாழ்வின் உன்னதம் என்பதை அனைவரும் உணர்வது காலத்தின் தேவை.
இ-மெயில்: tamilsreekumar@gmail.com
:- முனைவர் எஸ்.ஸ்ரீகுமார் - சமூக ஆர்வலர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...