Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிக் கல்வியோடு... கழனிக் கல்வியும்! வியக்க வைக்கும் விவேகானந்தா வித்யா வனம்!


         ''வாழ்க்கையைக் கற்றுக் கொடுப்பதற்கு பதிலாக, பாடப் புத்தகத்தை மட்டும் உருவேற்றும் கல்வி முறை, கல்வியில் சிறந்த மாணவர்களை வேண்டுமானால் உருவாக்கலாம். ஆனால், சிறந்த மனிதர்களை உருவாக்குவதில்லை.
 
           எங்கள் பள்ளி அப்படியல்ல, வாழ்க்கைக்குத் தேவையான விவசாயம், மூலிகைகள், இயற்கை... அத்தனை விஷயங்களையும் செய்முறையோடு கற்றுக் கொடுக்கிறது'' என பெருமையோடு சொல்கிறார்கள், திருச்சி, ஸ்ரீரங்கம் அருகே அமைந்துள்ள ஸ்ரீவிவேகானந்தா வித்யா வனம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் பெற்றோர்.

             நெடுக வளர்ந்த வாழைகளும், ஓங்கி உயர்ந்த தென்னை மரங்களும் வரவேற்க... பள்ளியில் நுழைந்தோம். முதலில், பள்ளிக்கு சுற்றுச்சுவரே இல்லை. அதற்கு அவசியமும் இல்லை. பின்னே, ஒரு தோட்டத்துக்குள்தானே பள்ளிக்கூடமே இருக்கிறது. அதனால், உயிர்வேலியாய் அமைந்துள்ள தோட்டம்தான் அங்கே பாதுகாப்பு! மரங்கள், அழகுச் செடிகள், மூலிகைகள் இவற்றுக்கு மத்தியில்தான் வகுப்பறைகள் அமைந்திருக்கின்றன. மின் விசிறியே இல்லாமல்... இயற்கைக் காற்று மட்டுமே மாணவர்களைத் தழுவிச் செல்கிறது.

                  வருங்கால சந்ததியை வலுவானவர்களாகவும், நோய் எதிர்ப்பு சக்தி மிக்கவர்களாகவும் உருவாக்கும்விதமாக, கூடுமான வரையிலும் செயற்கை விஷயங்களுக்கு இங்கே இடம் கொடுக்கப்படவில்லை. கைக்குத்தல் அரிசியில் சமைத்த உணவுகள்தான் மாணவர்களுக்குப் பரிமாறப்படுகிறது! பயிர் வைப்பது, பராமரிப்பது, அறுவடை செய்வது... என அனைத்துப் பணிகளையும் மாணவர்களே செய்கிறார்கள். விவசாய வேலையுடன் சமையலையும் கற்றுக்கொடுத்து, அடிக்கடி சமையல் போட்டியும் நடத்துகிறார்கள்.

           இதைப் பற்றியெல்லாம் பேசிய பள்ளியின், 'பசுமைப் படை’ ஒருங்கிணைப்பாளர் சுகுமாரன், ''மாணவர்களுக்காக, மாணவர்களால் மாணவர்களுக்கு’ என்கிற அடிப்படையில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மூலிகைகளை கொண்டு வந்து அவற்றை மாணவர்கள் மூலம் சிறப்பான முறையில் பராமரிக்கிறோம். ஒவ்வொரு மூலிகையின் பயனையும் அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறோம். தோட்டத்துக்கு வேலியாக சிறியா நங்கையை பயிரிட்டுள்ளதால், பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் அண்டுவதில்லை. ஆண்டுதோறும் மூலிகைக் கண்காட்சியை நடத்துகிறோம். அதைப் பல்வேறு பள்ளி மாணவர்கள் வந்து பார்வையிட்டு கற்றுக்கொண்டு போகிறார்கள். மரங்களை நடுதல், விவசாயம் சார்ந்த விழிப்பு உணர்வு... என அனைத்து விஷயங்களையும் முறையாகக் கற்றுக்கொடுக்கிறோம். அதோடு, மாணவர்களே அருகிலுள்ள கிராமங்களில் சுற்றுச்சூழல் குறித்து விழிப்பு உணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்கள்'' என்று பெருமையோடு குறிப்பிட்டார்.

                தொடர்ந்து பேசிய தலைமை ஆசிரியர் மாசிமலை, ''இப்போதைக்கு இரண்டு இடங்களில் மூலிகைத் தோட்டங்களும், பள்ளியின் பின்புறத்தில் 5 ஏக்கரில் காய்கறித் தோட்டமும் அமைத்துள்ளோம். அதில், முருங்கை, எலுமிச்சை, வாழை, கத்திரி, கொத்தவரை, வெண்டை, கீரை போன்றவற்றைப் பயிரிட்டுள்ளோம். நிலம் தயாரிப்பு, நடவு, களை எடுப்பு, பராமரிப்பு, அறுவடை... என அனைத்தையுமே மாணவர்கள்தான் செய்கிறார்கள். விவசாயத்துக்காக வாரம் ஒரு வகுப்பை ஒதுக்குகிறோம். அதனால், அனைத்து மாணவர்களும் விவசாயத்தைத் தெரிந்து கொள்கிறார்கள். இந்தத் தோட்டத்தில் கிடைக்கும் காய்களைத்தான் மாணவர்களுக்கு உணவாகக் கொடுக்கிறோம்'' என்றவர் நிறைவாக,

''தற்போதைய மாணவர்கள் டி.வி., இன்டர்நெட், ஃபேஸ்புக் என எங்கோ போய்க் கொண்டிருக்கிறார்கள். நமது நாகரிகத்துக்கு அடிப்படையான, உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் விவசாயத்தைப் பற்றியும், உழவர்களின் வேதனை பற்றியும் மாணவர்களுக்குத் தெரியாமல் போய் விடுகிறது. அதனால்தான் படித்தவர்கள் விவசாயம் செய்ய வருவதில்லை. அந்த நிலை மாறவேண்டும் என்ற எண்ணத்தில்தான் எங்கள் மாணவர்களை விவசாயம் அறிந்தவர்களாக உருவாக்குகிறோம். இப்படிப்பட்ட சூழலில் வளர்ந்து, பிற்காலத்தில் விவசாயத்தை விட்டுவிட்டு, இன்ஜினீயர்கள், டாக்டர்கள் என உருவானாலும், அவர்களும் இந்த சமூகத்துக்கு மிகுந்த பலன் தருபவர்களாக இருப்பார்கள் என்பது எங்களுடைய எதிர்பார்ப்பு. அடிப்படையில் தான் ஒரு விவசாயி என்பதை உணரும்போது... எந்தப் பணியிலுமே சிறப்பாக செயலாற்ற முடியும். சூழல் மீதும் அக்கறை கொண்டு செயலாற்ற முடியும்'' என்று மிகுந்த எதிர்பார்ப்போடு பேசிய தலைமை ஆசிரியர்,

             ''இப்படி விவசாயத்தை பள்ளிக்கூடத்திலேயே சொல்லித் தருவதால், வழக்கமான படிப்பு எந்த வகையிலும் இங்கே குறைவதில்லை. 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று, மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெறும் பள்ளிகளுள் ஒன்றாகத்தான் இருக்கிறது எங்கள் பள்ளி'' என்று தெம்பாகச் சொன்னார்!

மாணவ விவசாயிகளைப் பாராட்டி, விடைபெற்றோம்.




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive