நான் ஒரு பி.காம்., பட்டதாரி. விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல்
துறையில் ஓராண்டு பணிபுரிந்த அனுபவம் உண்டு. அதனால், அமெரிக்காவில்
எம்.பி.ஏ., (சந்தைப்படுத்துதல்) படிக்க விரும்புகிறேன். ஐந்தாண்டு பணி
அனுபவம் இருந்தால்தான் அமெரிக்காவில் எம்.பி.ஏ., படிக்க இடம் தருவார்களா?
அப்படியெனில், அங்குள்ள நல்ல பல்கலைக்கழகத்தில் நான் சேருவது எப்படி?
பதில்:
பெரும்பாலான அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் எம்.பி.ஏ., படிப்பில்
சேர்வதற்கு, குறைந்தபட்சம் 2 முதல் 3 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை. அத்துடன்
GMAT (Graduate Management Admission Test), TOEFL(Test of English as a
Foreign Language) மற்றும் IELTS (International English Language Testing
System) போன்ற தேர்வுகளின் மதிப்பெண்களும் தேவைப்படலாம். விண்ணப்ப
நடைமுறைகள் பற்றி மேலும் அறிய, காண்க: www.educationusa.info/5_steps_to_study
சந்தைப்படுத்துதல் பிரிவில் எம்.பி.ஏ., படிப்புகளை வழங்கும் கல்லூரிகள் பற்றி www.petersons.com
என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். தனிப்பட்ட பல்கலைக்கழகங்கள்
கூடுதல் தகுதிகளை எதிர்பார்க்கின்றனவா என்பதையும் கண்டறிந்து கொள்க.
அமெரிக்காவில் படிக்கச் சிறந்த பல்கலைக்கழகங்களைத் தேர்வு செய்வது
மற்றும் விண்ணப்ப நடைமுறைகள் தொடர்பான வழிகாட்டுதலுக்கு US USIEF (US-India
Educational Foundation) மையத்திலுள்ள Education USA பிரிவை நாடலாம்.
USIEF மையத்தை 04428574423/4134 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது usiefchennai@usief.org.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.
www.Facebook.com/EducationUSAChennai என்ற முகநூல் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம். கூடுதல் தகவலுக்கு காண்க: www.usief.org.in
கேள்வி: செவ்வாய்க்கிரகம் தொடர்பான ஆராய்ச்சியில் அமெரிக்கா எந்த அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது? பரட்டை, மதுரை
பதில்: விண்வெளி ஆய்வில், செவ்வாய்க்கிரக ஆராய்ச்சி
என்பது அற்புதமான பரந்த எல்லைகளைக் கொண்டது. அமெரிக்காவில், இந்த ஆய்வு
முயற்சிகள் தேசிய வானூர்தி வடிவமைப்பு மற்றும் விண்வெளி நிர்வாகம்
(NASA-National Aeronautics and Space Administration) என்ற அமைப்பின்
தலைமையில் மேற்கொள்ளப்படுகிறது. எனினும், அது, பன்னாட்டு ஒத்துழைப்பு
மற்றும் விஞ்ஞானிகளின் ஆதரவை உள்ளடக்கியது.
1965ல் மேரினர் 4 விண்வெளிக் கலம் மூலம் எடுக்கப்பட்டதுதான், உலகம்
அறிந்த, செவ்வாய்க்கிரகத்தின் மிக நெருக்கமான முதல் படமாகும். அது
செவ்வாய்க்கிரகத்தின் வித்தியாசமான பக்கத்தைக் காட்டியது. அதுவரை நாம்
அக்கிரகம் பற்றிக் கொண்டிருந்த பார்வைகளைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில்
அந்தப் படம் இருந்தது.
செவ்வாய்க் கிரகத்தை மிக நுணுக்கமாக அறிந்துகொண்டதாக நாம் உணரும்
ஒவ்வொரு வேளையிலும், புதிய கண்டுபிடிப்புகள், நடப்புக் கோட்பாடுகளை
மாற்றும் விதத்தில் அமைகின்றன.
முக்கியமான கேள்வி இதுதான்: செவ்வாய்க்கிரகத்தில் உயிரினங்கள் உள்ளனவா?
இதற்கு இதுவரை எந்தப் பதிலும் கிட்டவில்லை. ஆனால் தொடர்ச்சியான தேடல்,
கோள்கள் சார் அறிவியலிலும், துருவப் பனிப் படலங்கள் மற்றும் பிற வளிமண்டல
நீர் ஆதாரம் உள்ளிட்ட செவ்வாய்க்கிரகச் சூழல் ஆய்விலும் புதிய எல்லைகளைத்
திறந்திருக்கிறது. என்றோ ஒரு நாள், செவ்வாய்க்கிரகத்தில் மனித வாழ்க்கைகூட
சாத்தியப்படலாம்.
செவ்வாய் கிரகத்தில் மனிதர்களைக் குடியேற்றுவது தொடர்பான
சாத்தியக்கூறுகள் பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள். அமெரிக்காவின்
NASA அமைப்பும் இந்திய விண்வெளி ஆய்வு மையமும் (ISRO - Indian Space
Research Organization), செவ்வாய்க்கிரக ஆய்வுக்காக, இந்தியா இந்த ஆண்டு
அக்டோபரில் அனுப்பவிருக்கும் முதல் விண்கலத் திட்டத்திற்கு, தொலைத்தொடர்பு,
வழிகாட்டல், கண்காணிப்பு உள்ளிட்டப் பலநிலைகளில் ஒத்துழைப்பு அளிப்பது
தொடர்பான கூட்டு முயற்சிகளை மேற்கொள்வது பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தி
வருகின்றன.
இரு நாடுகளுக்கிடையே அதிகரித்து வரும் ஒத்துழைப்புகள் மூலம், விண்வெளி
ஆய்வில் புதுப்புது எல்லைகளை எட்ட முடியும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
கேள்வி: அமெரிக்க விடுதலைப் போராட்டத்தின் அடிப்படை
என்ன? அது அடிமைத் தனத்திலிருந்து விடுதலை பெறுவதா அல்லது
ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலை பெறுவதா? மேரி, பாளையம்கோட்டை
பதில்: முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்காவின்
வரையறைகளில் சுதந்திரம் பற்றிய கருத்தோட்டமும் அடங்கும். தனிநபர்
சுதந்திரம் என்பது அமெரிக்கச் சமூகத்தின் அதிமுக்கியமான இழையாகப் போற்றிப்
பாதுகாக்கப்படுகிறது. மிகத் தொடக்கக் காலங்களில், ஐரோப்பாவில் குடியேறிய
பலதரப்பட்ட மக்கள், தங்கள் காலனி ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலை பெறப்
போராடினார்கள்.
கடந்த 1770களில், ஐக்கிய அமெரிக்கக் குடியரசுகள் என்ற தனி நாட்டை நிறுவ,
பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடி அமெரிக்கர்கள் வெற்றி
கண்டனர். பின்னர், ஆப்பிரிக்க அமெரிக்கர்களை அடிமைப்படுத்தும்
பிரச்சினைக்கு எதிரான, கசப்பான உள்நாட்டுப் போரை அமெரிக்கர்கள் எதிர்கொள்ள
நேரிட்டது.
ஆப்பிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்கர்கள் அடிமைத்தளையிலிருந்து
மீண்டார்கள். அனைவரும் சுதந்திரம் பெற்றார்கள். 1900களில், மகளிரும்
ஆப்பிரிக்க அமெரிக்கர்களும் சம உரிமை கோரி தொடர்ந்து போராடினார்கள். 1920ல்
மகளிருக்கு வாக்களிக்கும் உரிமை அளிக்கப்பட்டது.
டாக்டர் மார்டின் லூதர் கிங் ஜூனியர் தலைமையில் சட்ட மறுப்பு இயக்கம்
நடந்தது. அதன் விளைவாக, 1964 உள்நாட்டு உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இது, ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மற்றும் இதர சிறுபான்மையினருக்கு எதிரான
சட்டப்பூர்வமான பிரிவினை மற்றும் பாரபட்சத்துக்கு முடிவு கட்டியது.
சுதந்திரம் சார்ந்த அமெரிக்காவின் கருத்தாக்கப் பயணம் தொடர்கிறது.
உள்நாட்டு உரிமைகள், பேச்சு சுதந்திரம், பலன்களில் அனைவருக்கும் சம உரிமை
போன்றவை தொடர்பான வழக்குகளை இன்றும் அமெரிக்க உச்சநீதி மன்றம் விசாரித்து
வருகிறது.
கேள்வி: அமெரிக்காவில் எம்.எஸ். படிக்க குறைந்தபட்டம்
40 லட்சம் ரூபாயாவது செலவாகும். பகுதி நேர வேலை பார்த்து அதன் மூலம்
கிடைக்கும் வருவாயில் மாணவர்கள் கல்விக் கட்டணம் கட்டுவது, அமெரிக்காவில்
சட்ட விரோதமானது. மேலும், எப்.1 விசா நேர்காணலின் போது, பகுதி நேர வேலை
பார்ப்போம் என்று மாணவர்கள் சொல்வதை விசா அதிகாரிகள் விரும்புவதில்லை.
ஆனால், படிக்கும் கல்வி நிறுவனத்திலேயே மாணவர்கள் பணிபுரிவதற்கான
வாய்ப்பும் இருக்கிறது என்று கேள்விப்பட்டோம். எந்த அளவுக்கு அது உண்மை?
அங்கு படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு, பகுதி நேர வேலை வாய்ப்போ அல்லது
கல்வி ஊக்கத் தொகையோ கிடைப்பதற்கான சாத்தியங்கள் என்ன? டி. மதன்குமார்,
சென்னை
பதில்: அமெரிக்காவில் படிக்க வரும் வெளிநாட்டு
மாணவர்கள், வாரம் 20 மணி நேரம், கல்லூரி வளாகத்திலேயே பகுதி நேர வேலை
பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள், கல்விக்
கட்டணத்தில் பாதி அல்லது முழுத் தொகையை ஈடு செய்யும் ஃபெல்லோஷிப் அல்லது
உதவித்தொகைத் திட்டங்களைக் கொண்டுள்ளன.
உதவித்தொகைத் திட்டம் என்பது, மாணவர்களுக்குப் பாடம் நடத்துவது, ஆய்வு,
சோதனைக்கூட மேற்பார்வை அல்லது கல்லூரி அலுவலகத்தில் வாரத்துக்கு 15 முதல்
20 மணி நேரம் வேலை பார்ப்பது ஆகியன. மாணவர்களுக்குக் கிடைக்கக் கூடிய
நிதியாதரவு பற்றிய தகவல்களை ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் இணையதளத்திலும்
கண்டறியலாம்.
ஸ்காலர்ஷிப் பற்றிய கூடுதல் தகவல் அறிய, காண்க:
https://www.educationusa.info/5_steps_to_study/graduate_step_3_make_your_budget.php
https://www.educationusa.info/5_steps_to_study/graduate_step_3_make_your_budget.php
அமெரிக்காவில் படிக்கச் சிறந்த பல்கலைக்கழகங்களைத் தேர்வு செய்வது
மற்றும் விண்ணப்ப நடைமுறைகள் தொடர்பான வழிகாட்டுதலுக்கு US USIEF (US-India
Educational Foundation) மையத்திலுள்ள EducationUSA பிரிவை நாடலாம். USIEF
மையத்தை 04428574423/4134 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது usiefchennai@usief.org.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். www.Facebook.com/EducationUSAChennai என்ற முகநூல் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம். கூடுதல் தகவலுக்கு காண்க: www.usief.org.in
கேள்வி: அமெரிக்கப் பிரதிநிதிகள் சபைக்கான
உறுப்பினர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பது குறித்து விளக்க
முடியமா? அருண், பெங்களூரு
பதில்: அமெரிக்க அரசியல் சாசனச் சட்டப்படி,
பிரதிநிதிகள் சபைக்கான உறுப்பினர்கள், இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும்
ஃபெடரல் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். நவம்பர் மாதத்தின்
முதல் திங்கட்கிழமைக்குப் பிறகு வரும் செவ்வாய்க்கிழமையில் இத் தேர்தல்
நடக்கும். அமெரிக்க அரசியல் சாசனமும் சட்டங்களும், ஒவ்வொரு மாகாணமும்
தங்களுக்கு உகந்தவாறு தொகுதிகள் சார்ந்து தேர்தலை நடத்த இடமளிக்கின்றன.
அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் ஒவ்வொரு உறுப்பினரும், அவர் சார்ந்த
மாகாணத்தின் நாடாளுமன்றத் தொகுதி (Congressional District) வாக்காளர்கள்
மூலமாகத் தேர்வு செய்யப்படுகிறார்கள். அவர்கள் இரண்டாண்டு காலத்துக்கு
அப்பதவியில் இருப்பார்கள்.
பிரதிநிதிகள் சபையின்,மொத்தமுள்ள 435 இடங்களுக்கும் ஒரே சமயத்தில்
தேர்தல் நடக்கும். ஒரு நாடாளுமன்றத் தொகுதி என்பது, ஒரு மாகாணத்திலுள்ள
குறிப்பிட்ட நிலப்பரப்பைக் குறிக்கும். பல மாகாணங்கள் ஒன்றுக்கு மேற்பட்டத்
தொகுதிகளைக் கொண்டுள்ளன.
நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு
தொகுதியிலும் வாக்காளர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரே அளவில் இருக்கும்.
பொதுவாக, அமெரிக்கப் பிரதிநிதிகள் சபைக்கான வேட்பாளர்கள், பிரதான அரசியல்
கட்சிகளைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள்.
முதற்கட்டத் தேர்தலில் (Primary election) அவர்கள் நியமனம்
செய்யப்படுவார்கள். சிறிய கட்சிகளின் வேட்பாளர்கள், தனிக் கட்சிகளுக்கான
விதி மற்றும் நடைமுறைகளின்படியும், சுயேச்சை வேட்பாளர்கள், சுயப்
பிரகடனத்தின் பேரிலும் நியமனம் செய்யப்படுவார்கள்.
தினமலர் வாசகர்களின் அமெரிக்கா குறித்த அனைத்துவிதமான
சந்தேகங்களுக்கும், அமெரிக்கத் துணைத் தூதரகம், சென்னை பதில் அளிக்கிறது.
ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறன்று வெளியாகும் இந்த பிரத்யேக பகுதிக்கு
உங்களது கேள்விகள் மற்றும் கருத்துக்களை உடனே அனுப்புங்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...