தமிழகம் முழுவதும், பி.இ., விண்ணப்பம் வினியோகம், நேற்று துவங்கியது.
சென்னை, அண்ணா பல்கலையில், காலை, 6:30 மணிக்கே, மாணவர்கள் குவிந்தனர்.
சென்னை உள்ளிட்ட அனைத்து மையங்களிலும், மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பங்களை
வாங்க குவிந்ததால், முதல் நாள், 80,064 விண்ணப்பங்கள் விற்பனை ஆயின.
விண்ணப்பங்களை பெற, சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த
மாணவ, மாணவியர், ஆர்வத்துடன், காலை, 6:30 மணியில் இருந்து, அண்ணா
பல்கலையில் குவிந்தனர். காலையிலேயே, 200க்கும் அதிகமான மாணவர்கள் வந்ததால்,
உடனடியாக, விண்ணப்ப வினியோகம் துவங்கப்பட்டது.
அண்ணா பல்கலை துணைவேந்தர் காளிராஜ், பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட்
உதிரியராஜ் ஆகியோர், மாணவ, மாணவியருக்கு, விண்ணப்பங்களை வழங்கினர். அதிகமான
மாணவர் வருவர் என்பதால், 20, "கவுன்டர்"கள் திறக்கப்பட்டிருந்தன. ஆனால்,
அண்ணா பல்கலை எதிர்பார்த்த அளவிற்கு, மாணவர்கள் வராததால், 10 கவுன்டர்களில்
மட்டும், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.
மாணவர்கள், எந்த சிரமமும் இன்றி, விண்ணப்பங்களை பெற்றுச் சென்றனர்.
எஸ்.சி.,- எஸ்.டி., மற்றும் எஸ்.சி., அருந்ததியர் பிரிவு மாணவர்கள், 250
ரூபாயும், இதர பிரிவு மாணவர்கள், 500 ரூபாயும் செலுத்தி, விண்ணப்பங்களை
பெற்றனர்.
இதுகுறித்து, ரைமண்ட் உதிரியராஜ் கூறியதாவது: மாணவர் கூட்டம் அதிகமாக
வந்துவிட்டால், அவர்களை காக்க வைக்கக் கூடாது என்பதற்காக, 20 கவுன்டர்களை
திறந்தோம். ஆனால், அந்தளவிற்கு கூட்டம் இல்லை. இதனால், 10 கவுன்டர்களிடம்
மட்டும், விண்ணப்பங்களை வழங்கி வருகிறோம். கூட்டம் அதிகமாக வந்தால்,
கூடுதலாக உள்ள கவுன்டர்களில், விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
பகல் 1:00 மணி நிலவரப்படி, அண்ணா பல்கலையில், 10 ஆயிரம்
விண்ணப்பங்களும், மாநிலம் முழுவதும் சேர்த்து, 45 ஆயிரம் விண்ணப்பங்களும்
விற்பனை ஆகியுள்ளன. தேவையான அளவிற்கு, விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
எனவே, விண்ணப்பம் கிடைக்குமோ, கிடைக்காதோ என, பயப்படத் தேவையில்லை.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட, விண்ணப்பங்கள் வழங்கப்படும். மாணவர்கள்,
நிதானமாக வந்து பெற்றுச் செல்லாம். இவ்வாறு ரைமண்ட் உதிரியராஜ் கூறினார்.
மாலை வரை, 80,064 விண்ணப்பங்கள் விற்பனை ஆகியிருக்கலாம் என, பல்கலை
வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஆண்டு, எம்.இ., - இ.சி.இ., ஆகிய பிரிவுகளை,
மாணவர்கள் அதிகளவில் தேர்வு செய்தனர். இந்த ஆண்டும், இதே பிரிவுகளுக்குத்
தான், மவுசு அதிகமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை, வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி மோனிகா கூறுகையில்,
"இ.சி.இ., தான், எனது விருப்பம்" என்றார். திருவள்ளூர், வெங்டேஸ்வரா
மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் வினோத், எழில் ஆகியோர் கூறுகையில்,
"எம்.இ., அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கலாம் என, நினைக்கிறோம்"
என்றனர்.
பெரும்பாலான மாணவர்களின் விருப்பமாக, எம்.இ., மற்றும் இ.சி.இ.,
(எலக்ட்ரிகல் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்) பாடப் பிரிவுகள்
இருக்கின்றன. எனவே, இந்த பிரிவுகளில் உள்ள இடங்களே, முதலில் நிரம்பும் என,
எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...