மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயம் (யு.பி.எஸ்.சி.,) நடத்தும்,
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பணிகளுக்கான, சிவில் சர்வீஸ் முதல்
நிலைதேர்வு, நேற்று நடந்தது. இத்தேர்வை, தமிழகத்தில் இருந்து, 30 ஆயிரம்
பேர் எழுதினர். விண்ணப்பித்தவர்களில், 40 சதவீதம்பேர், ஆப்சென்ட் ஆயினர்.
நேர்முகத் தேர்வுக்குப் பின், தகுதி வாய்ந்தோர், படி நிலை அடிப்படையில்,
பல்வேறு பணியிடங்களுக்கு, தேர்வு செய்யப்படுகின்றனர். இந்தாண்டில், மத்திய
அரசுப் பணிகளில் காலியாக உள்ள, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 1,000
பணியிடங்களுக்கான, முதல் நிலைதேர்வு, நேற்று நடந்தது.
இதில், இந்திய வனப் பணியில் (ஐ.எப்.எஸ்.,) காலியாக உள்ள, 80
இடங்களுக்கும், முதல் முறையாக தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்விற்காக,
தமிழகத்தில், 30 ஆயிரம் பேர் உட்பட, நாடு முழுவதும், 7 லட்சம் பேர்
விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களுக்கான, முதல் நிலைதேர்வு, நேற்று இந்தியா முழுவதும் நடந்தது.
தமிழகத்தில், 96 மையங்களில் நடந்த தேர்வுகளில், சென்னையில், 21 ஆயிரம்
பேர், மதுரையில், 9,000 பேர் என, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்
பங்கேற்றனர். புதுச்சேரியில், எட்டு மையங்களில், 2,900 பேர் தேர்வு
எழுதினர்.
ஒவ்வொரு ஆண்டும், இத்தேர்விற்காக, தமிழகத்தில் இருந்து, 20
ஆயிரத்திலிருந்து, 25 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்ற நிலையில், இந்தாண்டு,
30 ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
நேற்று நடந்த, முதல் நிலை தேர்வில், இந்திய அரசியல் சாசனம், கணிதம்,
பொருளாதாரம், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களிலிருந்து, பொது அறிவு,
திறனாய்வு ஆகிய இரு பிரிவுகளின் கீழ், தலா, 200 மதிப்பெண்களுக்கு
கேள்விகள் கேட்கப்பட்டன.
தற்போது நடந்துள்ள, முதல் நிலை தேர்வு முடிவுகள், ஆகஸ்ட் மாதத்தில்
வெளியாக உள்ளன. இதில், கலந்து கொண்டு தேர்வு எழுதியவர்களில், 12 ஆயிரம்
பேர், முதல் கட்டமாக தேர்வு செய்யப்படுகின்றனர். அவர்களுக்கு, டிசம்பர்
மாதம், முதன்மை தேர்வு நடத்தப்படுகிறது.
முதன்மை தேர்வு முடிவுகளின் அடிப்படையில், ஒரு பதவிக்கு, இருவர் அதாவது,
1:2 என்ற விகிதத்தில், 2,000 பேரும், கூடுதலாக, 200 பேரும் என, 2,200 பேர்
தேர்வு செய்யப்பட்டு, நேர்காணலுக்கு அழைக்கப்படுகின்றனர். நேர்காணல்
முடிந்த பின், அவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில், பணிகளுக்கு
தேர்வு செய்யப்பட்டு, பயிற்சிக்காக அனுப்பப்படுகின்றனர்.
இதற்கிடையில், இந்தியா முழுவதும் விண்ணப்பித்த, 7 லட்சம் பேரில், 2.5
லட்சம் பேரும், தமிழகத்தில், தேர்வெழுதிய, 30 ஆயிரம் பேரில், 40 சதவீதம்
பேரும் அதாவது, 12 ஆயிரம் பேரும், "ஆப்சென்ட்" ஆகியுள்ளதாக தகவல்
கிடைத்துள்ளது.
மாநில அரசு நடத்தும் தேர்வுகளை விட, மத்திய அரசின் தேர்வுகள் மிகவும்
கடினமாக இருப்பதால் தான், இதுபோன்ற, "ஆப்சென்ட்" பிரச்னை எழுந்து உள்ளது.
இதுகுறித்து, பயிற்சி மைய மேலாளர் ஒருவர் கூறியதாவது: மாநில அரசு
நடத்தும் தேர்வுகளில், "நெகட்டிவ்" மதிப்பெண் கிடையாது; ஆனால், சிவில்
சர்வீஸ் தேர்வில், "நெகட்டிவ்" மதிப்பெண் உள்ளது.
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும், தேர்வுகளுக்காக தயாராகுபவர்கள்,
பாடங்களை மனப்பாடம் செய்து, அதைக்கொண்டு எழுதி விடலாம். ஆனால், மத்திய அரசு
தேர்வுகளில், கேட்கப்படும் கேள்விகளுக்கு, எளிதில் பதிலளிக்க முடியாது.
யு.பி.எஸ்.சி.,யின் பாடத்திட்டங்களும், மிகவும் கடினமானதாக இருக்கிறது.
விருப்ப பாடத்தை கண்டிப்பாக எடுத்து படித்து, தேர்வெழுத வேண்டும் என்று,
கட்டாயம் இருப்பதால், பலரும் தவிர்க்கின்றனர்.
பெரும்பாலும், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக வேண்டும் என்று விரும்புகின்றனர்.
ஆனால், அவர்களுக்கு,தேர்வு விதிமுறைகள், உள்ளிட்டவை தெரியவில்லை.
இதனால்,தேர்வு எழுதுவதை தவிர்க்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில்,தேர்வு எழுதிய சென்னையைச் சேர்ந்த சரண்யா கூறும்போது,
பொது அறிவு, திறனாய்வு ஆகிய இரண்டு தேர்வுகளுமே எளிமையாகவும் இல்லை; அதே
சமயத்தில் கடினமாகவும் இல்லை. இந்த தேர்வுகளை எளிதாகக் கடந்து விட்டேன்.
முதன்மை தேர்வு, மிகவும் கடினமாக இருக்க வாய்ப்புள்ளது" என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...