Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 தேர்வில் சாதித்த குழந்தை தொழிலாளர்கள்


       ஒரு காலத்தில் படிக்க வழியின்றி, கூலி வேலைக்கு சென்ற குழந்தை தொழிலாளர்கள், தற்போது பிளஸ் 2 தேர்வில், 1,000 மதிப்பெண் எடுத்து, சாதனை படைத்துள்ளனர். இவர்கள், பொறியியல், மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என, காத்திருக்கின்றனர்.
 
         சிவகாசியைச் சேர்ந்த மாரீஸ்வரன், சேலத்தைச் சேர்ந்த நந்தகோபால், பிளஸ் 2வில், 1,097 மற்றும் 1,110 மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்கள், சிவகாசி பட்டாசு தொழிற்சாலையிலும், கயிறு திரிக்கும் குழந்தை தொழிலாளியாக இருந்தபோது, தொழிலாளர் நலத்துறையால் மீட்கப்பட்டவர்கள்.

சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளால், ஆயிரக்கணக்கான குழந்தை தொழிலாளர்கள் உருவானதை அடுத்து, 1987ல், மத்திய, மாநில அரசு உதவியோடு, "தேசிய குழந்தை தொழிலாளர் சிறப்பு திட்டம்" கொண்டு வரப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், தீப்பெட்டி, பட்டாசு தொழிற்சாலை, செங்கல் சூளை, ரைஸ் மில், பீடி கம்பெனி, ஓட்டல் ஆகிய இடங்களில் வேலை செய்யும் குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட, 15 மாவட்டங்களில் செயல்படும், 341 சிறப்பு பயிற்சி மையங்களில் கல்வி பயில்கின்றனர்.

மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்கள், எந்த வகுப்பில் பள்ளிப் படிப்பை கைவிடுகின்றனரோ, அதிலிருந்து இரண்டு ஆண்டுகள், இந்த சிறப்பு பயிற்சி மையங்களில் கல்வி கற்கின்றனர். பின், மற்ற மாணவர்களுடன் இணைந்து, சாதாரண பள்ளியில் படிப்பை தொடர்கின்றனர். படிக்கும் காலத்தில் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, மாதம் 150 ரூபாயும், கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு, 500 ரூபாயும் உதவித் தொகை தரப்படுகிறது. மேலும், மதிய உணவு, விடுதி வசதி, பஸ் பாஸ் என, அனைத்து உதவிகளும் வழங்கப்படுகின்றன.

இத்திட்டத்தின் கீழ், 70 ஆயிரம் குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், மூன்று பேர் மருத்துவப் படிப்பையும், 82 பேர் பொறியியல் படிப்பையும் மேற்கொள்கின்றனர்.

இந்தாண்டு, பிளஸ் 2 தேர்வில், 504 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், 30 மாணவர்கள், 1,000க்கும் மேலும், 50 மாணவர்கள், 950க்கும் மேலும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

பட்டாசு தொழிற்சாலை குழந்தை தொழிலாளி மாரீஸ்வரன்:

சிவகாசியில், பட்டாசு தொழிற்சாலையில, விவரம் தெரிஞ்சதில இருந்து, எட்டு வயது வரை, வேலை செஞ்சேன். ஒரு நாள், எங்க அம்மா, இலவச படிப்பு சொல்லித் தர்றாங்கன்னு ஸ்கூல சேர்த்து விட்டாங்க. அதுவரைக்கும் நான் பள்ளிக்கே போனதில்லை. ஒன்பது வயசுல தான், முதன் முதலாக ஸ்கூல பாத்தேன். கஷ்டப்பட்டு படிச்சு, பிளஸ் 2ல, 1,097 மார்க் வாங்கி இருக்கேன்; பொறியியல் படிப்பிற்கும் விண்ணப்பிச்சுருக்கேன்.

கயிறு திரித்த குழந்தை தொழிலாளி நந்தகோபால்:

வீட்டுல கஷ்டத்தால, 10 வயசு வரைக்கும் கயிறு திரிக்கிற தொழில் செஞ்சுட்டு இருந்தேன். அப்பா, அம்மாவும் கூலி வேலை தான் செய்யுறாங்க. அவங்களுக்கு படிப்பு பத்தி விழிப்புணர்வு இல்லை. தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் வந்து, என்னை பள்ளியில் சேர்ந்து படிக்க வைச்சாங்க. பிளஸ் 2வில், 1,110 மார்க் வாங்கியிருக்கேன். பொறியியல் படிப்பில சேர உள்ளேன்.

தையல் வேலை செய்த நித்யா:

அப்பா உடல் நலம் சரியில்லாததால், ஆறாவது படிப்பை பாதியில நிறுத்திட்டேன். அப்புறம், அம்மா கூட, தையல் வேலைக்கு உதவியா இருந்தேன். நான் படிக்காம வீட்டுல இருக்குறத பார்த்த தொழிலாளர் நலத்துறை அதிகாரிங்க, என்னை பள்ளியில் ஏழாவதுல சேர்த்தாங்க.

பிளஸ் 2ல, 1,108 மார்க் வாங்கியிருக்கேன். அடுத்து, பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பிச்சிருக்கேன்.

நெசவு தொழிலாளி முத்துகுமார்:

வீட்டுல கஷ்டம் காரணமாக, மூன்றாம் வகுப்பு படிக்கும் போது பாதியில நின்னுட்டேன். நெசவு வேலை செஞ்சுட்டு இருக்கும் போது, என்னை நான்காவது படிக்கச் சொல்லி, பள்ளியில் சேர்ந்து விட்டாங்க. குடும்ப கஷ்டம் ஒரு பக்கம் இருந்தாலும், கஷ்டப்பட்டு படிச்சேன். பிளஸ் 2ல, 1,024 மார்க் வாங்கியிருக்கேன். இப்ப, பொறியியல் படிக்கப் போறேன்.

நெசவு தொழிலாளி வினிதா:

எங்க அப்பா, நான்காவது படிக்கும் போது, இறந்துட்டாரு. அதனால, வீட்டுல கஷ்டம்ன்னு என்னை மேல படிக்க வைக்கல. அம்மா கூட, நெசவு தொழில் செய்ய உதவியாக இருந்தேன். என்னை மறுபடியும், ஐந்தாவது படிக்க, ஸ்கூல சேர்த்து விட்டாங்க. பிளஸ் 2ல, 1,033 மார்க் எடுத்திருக்கேன். எனக்கு, பி.காம்., பி.சி.ஏ., படிக்கணும்ன்னு ஆசை. மேல படிக்க வசதி இல்லை.

இம்மாணவர்களுக்கு, உதவி செய்ய விரும்புவோர், 044 - 2432 6205 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive