Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

1000 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் : தமிழக முதல்வர்


         பள்ளிகளைத் தரம் உயர்த்தி, அதற்கேற்ப ஆசிரியர்களை பணியமர்த்த புதிதாக 1000 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
 


              தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ்  தமிழக முதல்வர்  ஆற்றிய உரையில், மக்கள் தொகை 300 பேர் கொண்ட குடியிருப்பு பகுதிகளில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குள் ஒரு தொடக்கப்பள்ளி அமைய வேண்டும் என்ற அடிப்படையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 54 குடியிருப்பு பகுதிகளில் தொடக்கப் பள்ளிகள் இல்லாதது கண்டறியப்பட்டுள்ளது. இந்த 54 குடியிருப்புப் பகுதிகளிலும் புதிய தொடக்கப் பள்ளிகள் அமைக்கப்படும் என்பதையும், அப்பள்ளிகளுக்கு தேவைக்கேற்ப ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும்.

உயர்நிலைப் பள்ளிகளை பொறுத்த வரையில், 5 கிலோமீட்டர் தொலைவிற்குள் ஓர் உயர்நிலைப் பள்ளி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், மத்திய அரசால் நிதி உதவி அளிக்கப்படாத நிலையிலும், மாணவர்களின் நலன் கருதி, மாநில நிதியிலிருந்து 2013-2014 ஆம் கல்வியாண்டில் 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமையாசிரியர் பணியிடம் வீதம் 50 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு  5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 300 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.

இதே போன்று, 2013-2014 ஆம் கல்வியாண்டில் 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்பதையும், அவற்றுக்கு ஒரு தலைமையாசிரியர் பணியிடம் வீதம் 100 தலைமையாசிரியர் பணியிடங்கள் மற்றும் பள்ளி ஒன்றுக்கு ஒன்பது முதுகலை ஆசிரியர் பணியிடம் வீதம் 900  முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 1000 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.

                   தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சார்ந்த தொழிலாளர்கள் பணிநிமித்தம் இடம்பெயர்ந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தங்களது குடும்பங்களுடன் தற்காலிகமாக குடியேறுகின்றனர். இவ்வாறு இடம்பெயர்ந்த  6081 தொழிலாளர்களின் குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தக் குழந்தைகளுக்கு கல்வி பெறும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தரும் நல்நோக்குடன் “இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி வசதி அளிக்கும்  திட்டம்” என்ற புதிய திட்டம் நடப்பாண்டு முதல் செயல்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன்படி, இடம் பெயர்ந்து வந்த தொழிலாளர்களின் குழந்தைகள் அவர்தம் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள பள்ளிகளில் முறையாக சேர்க்கப்படுவர். இவர்களுக்கு அவர்களது தாய் மொழியும் கற்பிக்கப்படும். இதன் மூலம்  அரசுக்கு தோராயமாக  4 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

              மாணவ – மாணவியருக்காக வழங்கப்படும் அனைத்து பொருள்களையும் கொள்முதல் செய்து விநியோகிக்கும் பணி இனி வருங்காலங்களில் தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு வழங்கப்படும் என்பதையும், தமிழ்நாடு பாடநூல் கழகம் கொள்முதல் ஒருங்கிணைப்பு மையமாக செயல்பட ஏதுவாக “தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்”  என பெயர் மாற்றம் செய்யப்படும்.

             நடப்பாண்டு முதல் மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறும் மாணவ-மாணவியருக்கு உதவி புரியும் வகையில், இதற்கென முதன் முறையாக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

            மத்திய – மாநில அரசுகளின் நிதி உதவியுடன் 44 பெண்கள் விடுதிகள் கட்டுவதற்கு 2009-2010 ஆம் ஆண்டு ஆணையிடப்பட்டது. இருப்பினும், ஒப்பளிக்கப்பட்ட தொகை இவ்விடுதிகள் கட்ட போதுமானதாக இல்லை என்கின்ற காரணத்தினால், இந்தப் பணிகள்  மேற்கொள்ளப்படவில்லை. மத்திய – மாநில அரசுகளின் நிதி உதவியுடன் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதைக் கருத்தில் கொண்டு, கூடுதல் நிதியை அளிக்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொள்ள உத்தரவிட்டேன். மத்திய அரசிடமிருந்து சாதகமான பதில் வராத சூழ்நிலையில், விடுதிகள் கட்டத் தேவைப்படுகின்ற கூடுதல் நிதியான  31 கோடியே 46 லட்சம் ரூபாயை மாநில அரசின் நிதியிலிருந்து உடனடியாக ஒதுக்கீடு செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள 13 மாவட்டங்களில் 44 ஒன்றியங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள மாணவ-மாணவியரின் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக 2012-13 ஆம் ஆண்டு  26 மாதிரி பள்ளிகள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கிராமப்புற மாணவர்களுக்கு பயனளிக்கக்கூடிய இந்த மாதிரி பள்ளிகளை தரமுடன் உடனடியாக கட்டி முடிக்க கூடுதல் நிதி உதவி தேவைப்படுவது எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, இதற்கென 38 கோடியே  44 லட்சம் ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive