தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய தேர்வுகளில் நடந்த பல
குளறுபடிகளைத் தொடர்ந்து, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த
அறிவியல் தேர்விலும், குளறுபடி ஏற்பட்டது. கேள்வித்தாளில், ஒரு மதிப்பெண்
பகுதியில், விடையின் பாதி வார்த்தைகள், "மிஸ்சிங்' ஆனதால், இதற்குரிய
மதிப்பெண் வழங்கப்படும் என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில், தமிழ் இரண்டாம் தாள் கட்டுகள், ரயில் தண்டவாளத்தில் விழுந்ததில், 63 விடைத்தாள்கள், முற்றிலும் சேதம் அடைந்தன. மேலும், ஐந்து மதிப்பெண்களுக்குரிய விடைகளை நிரப்ப, வங்கி செலான் வழங்கவில்லை.விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில், ஆங்கிலம் முதற்தாள் விடைத்தாள் கட்டுகள் மாயமாயின. இதைத் தொடர்ந்து, கணித தேர்வில், "புளூபிரின்ட்'படி, கேள்விகள் இடம்பெறாததும், சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த குளறுபடிகள் வரிசையில், நேற்று நடந்த அறிவியல் தேர்விலும் எதிரொலித்தது.
"மிஸ்சிங்' ஆன விடை:
ஒட்டுமொத்த அளவில், தேர்வு எளிதாக இருந்ததாக மாணவ, மாணவியர் கருத்து தெரிவித்தனர். எனினும், ஒரு மதிப்பெண் கேள்வி பகுதியில், 14வது தமிழ்வழி கேள்விக்குரிய, "அப்ஜக்டிவ்' முறையிலான நான்கு விடைகளில், சரியான விடை, முழுவதுமாக அச்சிடப்பட்டு இருந்தது.ஆனால், ஆங்கில வழியில், அதே கேள்விக்கான விடை, முழுவதுமாக கேள்வித்தாளில் அச்சாகவில்லை. தமிழில், "மின்காந்த தூண்டல்' என்று, முழுவதுமாக அச்சாகி இருந்தது. ஆங்கில வழி கேள்வியில்,"எலக்ட்ரோ மேக்னட்டிக் இன்டக்ஷன்' என்ற விடையில், "எலக்ட்ரோ' என்ற வார்த்தை, "மிஸ்சிங்' ஆகி இருந்தது.விடையை நன்றாக தெரிந்த மாணவ, மாணவியர், சரியான விடையை எழுதியதாகவும், குழப்பம் அடைந்த மாணவர்கள், அந்த கேள்விக்கு, சரியான விடையை அளிக்கவில்லை என்றும், அறிவியல் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
ஒரு மதிப்பெண் வழங்க முடிவு:
இது
குறித்து, தேர்வுத்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, "இந்த பிரச்னை,
எங்களது கவனத்திற்கும் வந்துள்ளது. "கீ-ஆன்சர்' (கேள்விக்குரிய,
அதிகாரப்பூர்வமான விடைகள்) தயாரிக்கும்போது, 14வது கேள்விக்குரிய விடையை
எழுத முயற்சி செய்திருந்தாலே, அதற்குரிய ஒரு மதிப்பெண் முழுவதுமாக
வழங்கப்படும் என்ற உத்தரவு, விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு
வழங்கப்படும்' என, தெரிவித்தன.
மாணவர்கள் கருத்து :
இதற்கிடையே, அறிவியல் தேர்வு, எளிதாக இருந்ததாக, மாணவர்கள் கருத்து தெரிவித்தனர். திருவல்லிக்கோணி, இந்து மேல்நிலைப்பள்ளி மாணவர் இறையன்பு கூறுகையில்,""கணித பாடத்தை போல், அறிவியல் தேர்வு கடினமாக இருக்கும் என, நினைத்தேன். ஆனால், எதிர்பார்த்தை விட, தேர்வு சுலபமாக இருந்தது. அனைத்து வினாக்களும், சுலபமாக இருந்ததால், 60 மதிப்பெண்களுக்கு மேல் எடுப்பேன்,'' என்றார்.
இதே பள்ளி மாணவர் நிஜேந்திரராஜ் கூறுகையில்,""மற்ற தேர்வுகளை விட அறிவியல் தேர்வு சுலபமாக இருந்தது. பாட புத்தகத்தில் இருந்தே, அனைத்து கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளன. அறிவியல் தேர்வில், நண்பர்கள் உட்பட பலர் சதம் அடிப்போம்,'' என்றார்.
பெரிய காஞ்சிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி நதியா கூறுகையில்,""வினாத்தாள் எளிதாக இருந்தது. எனவே, 95 மதிப்பெண்கள் எடுப்பேன். எனது நண்பர்களும் வினாத்தாள் எளிதாக இருந்ததாக தெரிவித்தனர். கணிதத்தை விட அறிவியல் தேர்வு எளிதாக இருந்தது,'' என்றார்.
எனினும், கடலூர் மாவட்டத்தில், மூன்று மாணவர்களும், தி.மலை மாவட்டத்தில், நான்கு மாணவர்களும், "பிட்' அடித்து, பறக்கும்படை குழுவினரிடம் பிடிபட்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...