Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நோய் அல்ல குறைபாடு: இன்று உலக ஆட்டிசம் தினம்


              ஆட்டிசம் என்பது, குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு. இது பற்றி பெரும்பாலான பெற்றோர்கள் கண்டு கொண்டாலும், சரியான நேரத்தில் டாக்டரை அணுகுவதில்லை.
 
               இக்குறைபாடு உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஏப்., 2ம் தேதி உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

கண்டுகொள்வது எப்படி?

* ஆறு மாதங்களாகியும் தாய் முகம் பார்த்து சிரிக்காமல் குழந்தை இருத்தல்
* தாயின் கண்களை நேருக்கு நேர் பார்க்காமல் இருத்தல்
* 12 மாதங்களான பின்பும் மழலைச் சப்தங்கள் செய்யாமலிருந்தல்
* ஒரே இடத்தில் அமர்ந்திருத்தல்
* 18 மாதங்களில் பேசினாலும் ஒரே சப்தத்தையோ, சொல்லையோ திரும்ப திரும்பச் சொல்லுதல்
* 18 - 24 மாதங்களில் மற்ற குழந்தைகளோடு சேர்ந்து விளையாடாமல், தனியாகவே இருத்தல்
* கைகளை உதறிக் கொண்டே இருத்தல்
* ஒரு பொருளையோ, நபரையோ சுட்டிக்காட்ட இயலாமை
* கதை கேட்பதில் விருப்பமின்மை
* தூக்கமின்மை, தூங்கும் நேரம் குறைவு
* கீழே விழுந்து காயம் ஏற்பட்டாமல் வலியை உணராதிருத்தல்

              இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று குழந்தைகளிடம் இருந்தாலும் தாமதிக்காமல் குழந்தை நல மருத்துவரிடம் ஆலோசனை கேட்க வேண்டும். ஆரம்பத்திலேயே சிகிச்சைகள் பெற வேண்டும். குழந்தை பிறந்த 24 மாதங்களில் பரிசோதனை செய்தால், குழந்தைக்கு ஆட்டிசம் உண்டா, இல்லையா என்பதை அறியலாம்.

                  மதுரையில் ஆட்டிசம் விழிப்புணர்வுக்காக "வேள்வி&' அமைப்பை நடத்தி வரும் பேராசிரியர் பரசுராம் ராமமூர்த்தி (96555 73751, parasuram.ramamoorthi@gmail.com) கூறும்போது, "ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கும் பயிற்சி அளித்து, சரி செய்ய முடியும். அவர்களது தனித்திறமைகளை கண்டறிந்து, சுயதொழில் கற்றுத்தரலாம். ஆட்டிசம் என்பது நோய் அல்ல. அது ஒரு வகை மனநிலை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்," என்கிறார்.

20 லட்சம் பேர்

             உலகளவில் ஆட்டிசம் குறைபாடால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. அமெரிக்காவில் 150 பேரில் ஒருவருக்கு இந்த குறைபாடு உள்ளது என ஒரு ஆய்வு கூறுகிறது. இந்தியாவில் 20 லட்சம் பேர் ஆட்டிசம் குறைபாடு உள்ளவர்களாக இருக்கின்றனர்.

                "ஆட்டிசம்" குழந்தைகளுக்கு ஆதரவு தரலாமே! பெற்றோர், பயிற்றுனர்கள் ஆதங்கம்

இன்று "ஆட்டிசம்" தினம். இக்குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து விவரிக்கிறார், மதுரையை சேர்ந்த குழந்தைகள் வழிகாட்டு மனநல டாக்டர் ப்ரீத்தி.

ஆரம்பத்தில் கண்டறிந்தால் குணப்படுத்தலாம்

                இவர்கள் பிறக்கும் போது நார்மலாக இருப்பர். தலைநிற்பது, நடப்பது எல்லாம் இயல்பாக இருக்கும். ஆனால் தாயின் முகம் பார்ப்பதில்லை. மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதில்லை. பேச்சுத்திறன் குறைவாக இருக்கும். 2 வயதுக்குள் இவர்களை அடையாளம் கண்டு கொண்டால், தொடர் பயிற்சியின் மூலம் குணப்படுத்துவது எளிது. சில பெற்றோர் குழந்தை பேசாததை கண்டு கொள்ளாமல், "டிவி" முன் உட்காரவைத்து, தங்கள் வேலைகளைச் செய்கின்றனர்.

                          இதனால் குழந்தையின் பழகும் திறன் ரொம்பவும் குறைந்து விடும். அடைத்து வைக்காமல், பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். ஒவ்வொரு விஷயத்தையும் நேரில் அழைத்துச் சென்று புரிய வைக்க வேண்டும். மூளையை ஒருங்கிணைப்பதில் ஏற்படும் பிரச்னை தான் இதற்கு காரணம். இதை கவனிக்காமல் விட்டால் இளம் பருவத்தில் நிறைய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இது மூளை வளர்ச்சி, மனவளர்ச்சி குறைபாடில்லை என்பதை பெற்றோர், சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும்.

             "ஆட்டிசம்" குழந்தைகளால் பெற்றோர்களுக்கு ஏற்படும் பிரச்னையும், வேதனையும் கொஞ்சமல்ல... இதோ இங்கே பகிர்ந்து கொள்கின்றனர்.

அதிகரித்து வரும் "ஆட்டிசம்"

              ஆண்டவர், சிறப்பு பயிற்றுனர், ஸ்பார்க் மையம்: இந்தியாவில் 33 ஆண்டுகளில் 40 லட்சம் பேருக்கு, இக்குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இக்குழந்தைகள் அதிகரித்து வருகின்றனர். மாத்திரைகளால் இதை குணப்படுத்தி விடலாம் என்று யாராவது சொன்னால், பெற்றோர் நம்பக்கூடாது.

                  இது நோய் அல்ல. குறைபாடு தான். மற்ற குழந்தைகளோடு பழகவிடுவது தான் சிறந்த பயிற்சி. நம்மைவிட திறமை வாய்ந்தவர்கள் என்பதால், அவர்களின் விருப்பத்தை கண்டறிந்து அதில் பயிற்சி அளிக்க வேண்டும். ஒரு மாணவருக்கு ஒருஆசிரியர் என்ற முறையில் தொடர் பயிற்சி அளித்தால், நல்ல நிலைக்கு வருவார்கள்.

பள்ளியை விட்டு விரட்டினர்
          சுகந்தி, குடும்பத்தலைவி: என் 2வது மகன் திலக் பாலாஜிக்கு ஆறு வயதாகிறது. பேச்சு தாமதமானதால் பயிற்சிக்கு அழைத்து வந்தோம். பிள்ளைக்காக, வேலையை விட்டு விட்டேன். தொடர் பயிற்சிக்கு பின், இப்போது பரவாயில்லை. ஆனால் பள்ளியில் சேர்த்து விட்டால், வெளியே ஓடுகிறான் என்று விரட்டி விட்டனர். என் மகனை திரும்பவும் சிறப்புப் பயிற்சிக்கு அழைத்துச் செல்கிறேன். சொல்லிக் கொடுத்தால் நன்றாக படிப்பான். ஆனால் பள்ளியில் புறக்கணிப்பது வேதனையாக இருக்கிறது. என் மகனும், மற்ற குழந்தைகள் போல, நன்றாக படிக்க வேண்டாமா?

                     சண்முகசுந்தரி, குடும்பத்தலைவி: சரவணகுமார் 3வது பையன். இப்போ 8 வயசாகுது. மூணு வயசுல தான், பேசாம இருந்தது, நேருக்கு நேரா பார்க்கமா இருந்ததை கண்டுபிடிச்சோம். இப்ப ஒன்றரை வருஷமா பயிற்சிக்கு கூட்டிட்டு வர்றேன். சொல்றதை புரிஞ்சுக்குறான். பொருட்களை எடுக்கத் தெரியுது. மூத்த பசங்க ரெண்டு பேரும், இவனை நல்லா பார்த்துக்குறாங்க. ஆனா பஸ்சில கூட்டிட்டு போனா ஓடிட்டே இருப்பானு, சத்தம் போடுறாங்க. சிலசமயம் பஸ்சை விட்டு இறங்கச் சொல்வாங்க. என் பையனை, நாங்க சந்தோஷமாக வளர்க்குறோம். ஆனா மத்தவங்க புறக்கணிக்கறதை தாங்க முடியல.

சமுதாய அங்கீகாரம் இல்லையே

               ராணி சக்கரவர்த்தி, மனோதத்துவ நிபுணர், ரக்ஷனா குழந்தைகள் வழிகாட்டு மையம்: 15 ஆண்டுகளாக "ஆட்டிசம்" குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கிறேன். அரசு வழங்கும் அடையாள அட்டையில் கூட, இவர்களை "மனவளர்ச்சி குன்றியோர்" என்றே சான்றிதழ் வழங்குகின்றனர். உண்மையில் இவர்களுக்கு மனவளர்ச்சி, நம்மை விட சிறப்பாக இருக்கும்.

             இதை யாரிடம் சொல்லி புரிய வைப்பது? "ஆட்டிசம்" குழந்தைகளுக்கு என, தனி குறைபாடுகள் உள்ளன. மிக வேகமாக, துறுதுறுவென இருப்பதால், மற்றவர்கள் இக்குழந்தைகளை இடைஞ்சலாக நினைக்கின்றனர். அவர்களின் தேவையை அழகாக எடுத்துச் சொல்லும் திறமை படைத்தவர்கள். பேசத் தெரியாவிட்டாலும் பசிக்கிறது என்றால், தட்டை காண்பிக்கத் தெரியும். அந்தளவுக்கு நுட்பமானவர்கள்.

                            இவர்களை மனவளர்ச்சி குறைந்தவர்களாக சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. பள்ளிகளில் ஆசிரியர்கள் கூட இவர்களை புரிந்து கொள்வதில்லை. தாமதமாக கற்றுக் கொள்ளும் இவர்களை, "மூளை வளர்ச்சியில்லை" என்று கேலி செய்கின்றனர்.சிலநேரம் அரசுப் பள்ளிகளில் கூட, இவர்களை அனுமதிப்பதில்லை. இக்குழந்தைகளை தனிமைப்படுத்தினால், நிலைமை மோசமாகும். மற்ற மாணவர்களை பார்த்து பார்த்து, தங்களை மாற்றிக் கொள்ளும் இயல்பு உள்ளது.

               எனவே, இவர்களை பள்ளிகளில் சேர்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும். பொது இடங்களில் எதையாவது பிடித்து இழுப்பது போன்ற செயல்களைச் செய்யும் போது, "பிள்ளைய வளர்த்த லட்சணத்தைப் பார். இவ்வளவு திமிரா" என, மற்றவர்களின் பார்வையில் ஏளனத்துக்கு ஆளாகின்றனர். பக்கத்து வீட்டு குழந்தைகளை கூட, இவர்களுடன் விளையாட விடுவதில்லை.

                             பள்ளியிலும், சமுதாயத்திலும், அக்கம், பக்கத்திலும் ஏளனத்திற்கு ஆளாகும் இவர்களுக்குத் தேவை போதிய பயிற்சி. அதுவும் இரண்டு வயதுக்குள்ளாகவே. அரசு சான்றிதழிலும் "ஆட்டிசம்" அடையாள அட்டை வழங்க வேண்டும். சாதாரண பள்ளிகளில் இவர்களும் பயில வேண்டும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive