தொலைநிலை கல்வி நிறுவனங்களுக்கு, அதிகார எல்லையை நிர்ணயித்து, தொலைநிலை
கல்வி குழு அறிவித்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தொலைநிலை கல்வி முறையில் நடக்கும் ஊழலைக் களையவே, இந்நடவடிக்கை
எடுக்கப்படுகிறது என, தொலைநிலை கல்விக் குழு காரணம் கூறுவதை, கல்வியாளர்கள்
ஏற்க மறுக்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள சென்னை, மதுரை காமராஜர், பாரதியார், பாரதிதாசன்,
அண்ணாமலை போன்ற கலை அறிவியல் பல்கலைக் கழகங்களோடு, அண்ணா பல்கலை போன்ற
தொழில்நுட்ப பல்கலைக் கழகங்களும், தொலை நிலை கல்வியை அளித்து வருகின்றன.
உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி படிப்புகளை முடித்தவர்கள், தொலைநிலை
கல்வி மூலம், இளங்கலை பட்டங்களையும், அதைத் தொடர்ந்து முதுகலை
பட்டங்களையும் பயிலுகின்றனர். இதுதவிர, பட்டயம், முதுநிலை பட்டய
வகுப்புகள், சான்றிதழ் வகுப்புகளும், தொலைநிலை கல்வி மூலம்
அளிக்கப்படுகிறது.
மதுரை காமராஜர் பல்கலை, 1971ம் ஆண்டு முதல் தொலை நிலை கல்வியை
துவங்கியது. இதைத் தொடர்ந்து, சிதம்பரம் அண்ணாமலை பல்கலை, சென்னை பல்கலை
போன்ற பல்கலைக் கழகங்கள், தொலை நிலை கல்வியைத் துவங்கின. பி.ஏ., - எம்.ஏ.,
போன்ற கலை தொடர்பான பட்ட படிப்புகளோடு, பி.எஸ்சி., - எம்.எஸ்சி., போன்ற
அறிவியல் பட்டப்படிப்புகளையும் தொலைநிலை கல்வி அளிக்கிறது.
மேலும், சில சிறப்பு பிரிவுகளின் முதுகலை பட்டயப் படிப்புகளையும்
அளிக்கிறது. சட்டம் தொடர்பான பி.ஜி.எல்., பட்டப் படிப்பையும் வழங்குகிறது.
நேரடி வகுப்புகள் மூலம், உயர்கல்வி பெற முடியாதவர்கள், தொலைநிலை கல்வி
மூலம், 10, 2, 3 என்ற முறையில், கல்வி பெறுகின்றனர். மேலும், உயர்கல்வி
கற்போர் அனைவருக்கும், நேரடி வகுப்புகள் மூலம், கல்வி அளிக்க, அரசால்
முடியாத நிலையில், தொலைநிலைக் கல்வியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளும், கடந்த
காலங்களில் எடுக்கப்பட்டுள்ளது.
தனியார் உயர்கல்வி நிலையங்களுக்கு, அனுமதி அளிக்கும் மாநில அரசின்
கொள்கை முடிவால் கூட, உயர்கல்வி பயிலும் அனைவருக்கு கல்வி அளிக்க முடியாத
நிலையே நிலவுகிறது. தனியார் கல்வி நிறுவனங்கள், வேலைவாய்ப்பு என்ற
அடிப்படையில், சில முக்கிய பட்டப் படிப்புகளையே நடத்தி வருகின்றன.
இந்நிலையில், அனைத்து தரப்பு பட்டப் படிப்புகளையும் வழங்கும், ஒரு கல்வி
நிறுவனமாக தொலைநிலை கல்வி உள்ளது. பணியில் உள்ளவர்கள், கல்லூரிக்குச்
சென்று கல்வி பெற முடியாத ஏழைகள் போன்றோருக்கு, தொலைநிலை கல்வி
வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தைத் தாண்டி பணிக்கு
செல்பவர்கள், குடிபெயர்ந்து விடுபவர்கள் போன்றோருக்கு, தமிழ் வழியில் பயில,
தொலைநிலைக் கல்வி முக்கிய பங்காற்றுகிறது.
இந்நிலையில், தொலைநிலை கல்வியை, மாநில எல்லைக்குள் சுருக்கும் வகையில்,
தொலைநிலை கல்விக் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது. கவுன்சிலின், 40வது
கூட்டம், 2012 ஜூலை, 8ம் தேதி நடந்துள்ளது. இதில், பல்கலைக்கழக மானிய குழு
அறிவுறுத்தலின் படி, தொலைநிலைக் கல்வி குறித்து எடுக்கப்பட்ட முடிவுகள்:
* மத்திய அரசின் பல்கலைக் கழகங்கள், அவற்றின் சட்ட, திட்டங்களுக்கு
உட்பட்டு, தொலை நிலைக் கல்வியை அதன் எல்லைக்குள் நடத்த வேண்டும். மாநில
அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக் கழகங்கள், அவற்றின் சட்ட,
திட்டங்களுக்கு உட்பட்டு, மாநில எல்லையைத் தாண்டாமல், தொலை நிலைக் கல்வியை
அளிக்க வேண்டும்.
* நிகர்நிலை பல்கலை கழகங்கள், மத்திய அரசு நிர்ணயிக்கும் எல்லைக்குள்,
தொலைநிலைக் கல்வியை வழங்க வேண்டும். தனியார் கல்வி நிலையங்கள், அவை அமைந்
துள்ள பகுதிக்குள் தொலைநிலை கல்வியை நடத்தலாம். தொலைநிலை கல்வி
நிலையங்களின் மையங்களை, பிற இடங்களில் அமைக்கும் போது, பல்கலையின்
ஊழியர்கள் கட்டுப்பாட்டில், அவை இருக்க வேண்டும். தனியாருக்கு முகமை
அடிப்படையில், மையங்களை அளிக்கக் கூடாது. இவ்வாறு தொலை நிலை கல்வி
கவுன்சிலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கவுன்சிலின் முடிவு, தமிழகத்தைத் தாண்டியுள்ளவர்களுக்கு, பெரும் இடியாக
அமைந்துள்ளது என, கல்வியாளர்கள் கூறுகின்றனர். தொலைநிலை கல்வி முறையிலோ,
அவை நடத்தும் மையங்களிலோ முறைகேடும் நடக்குமானால், அதை ஒழுங்குபடுத்த,
நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டு, தொலைநிலை கல்வி முறையையே
முடக்குவது போல, நடவடிக்கை எடுப்பது முறையல்ல என்கின்றனர்.
தொலை நிலைக் கல்விக்கு எல்லையை நிர்ணயித்துள்ளதற்கு, கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவர்களின் கருத்து:
சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் திருவாசகம்:
தொலைதூர கல்வி நிறுவனங்கள், ஒரே பாடத் திட்டத்தை கொண்டிருப்பதில்லை. இடம்
பெயர்ந்தோர், பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள், விரும்பிய படிப்புகளை படிக்க
முடியாத நிலை ஏற்படுகிறது.
நேரடி கல்வியில் படிக்க முடியாத பல அரிய படிப்புகளை தொலைதூர கல்வி
நிலையங்கள் மூலம் பெற முடியும். குறுகிய நடவடிக்கைகள், மாணவர்களின் படிப்பை
பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது. நாட்டில் உள்ள படித்துள்ளோரில்,
பாதிக்கும் மேற்பட்டோர் தொலைநிலை கல்வி நிலையங்களில் படிப்பை
முடித்தவர்கள்.
தற்போது, தொலைதூர கல்வி நிறுவன படிப்பிலும் பல்வேறு புதுமைகளை புகுத்தி
வருகின்றனர். "சிடி, பென்டிரைவ், டேப்லெட்" போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள்
மூலம், மாணவர்களுக்கு பாடங்கள் வழங்கும் திட்டம் அறிமுகமாகியுள்ளது.
வகுப்புகளுக்குச் சென்று பயிலும் முறையில், உலகின் எந்த மூலையில்
உள்ளவரும் கல்வி பெற முடியும். ஆனால், தொலைதூர கல்வியில் படிப்பதற்கு,
எல்லை வரையறுத்துள்ளது வருந்தத்தக்கது.
வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில், இதுபோன்ற எந்தவித கட்டுப்பாடுகளும்
இல்லை. கல்வி மையங்கள் சரியாக இயங்கவில்லை என்றால், அதை முறைப்படுத்த
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமே தவிர, கல்வி மையங்களை முடக்க நினைப்பது தவறு.
அகில இந்திய பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர் கூட்டமைப்பு தேசிய செயலர் ஜெயகாந்தி:
தமிழக பல்கலைக் கழகங்களின் கல்வி மையங்கள், வெளிமாநிலம், வெளிநாடுகளில்
தனியார் கட்டுப்பாட்டின் கீழ் அமைத்துள்ளன. பாடம் நடத்தாமல், தேர்வுகளை
நடத்தாமல், தேர்வு தாள்களை கொடுத்து, வீட்டிலிருந்த படியே தேர்வுகள் எழுதி
வர சொல்கின்றனர்.
பல இடங்களில், தேர்வு எழுதாமலே தேர்ச்சி பெற செய்வது போன்ற முறைகேடுகள்
நடக்கின்றன. தரமான கல்வியை மாணவர்கள் பெறவும், கல்வி மைய முறைகேடுகளை
களைவும் நடவடிக்கை எடுப்பதை வரவேற்கிறோம்.
அதே நேரத்தில், தொலை நிலை கல்விக்கு எல்லை நிர்ணயிப்பதை ஏற்க முடியாது.
உள்நாட்டு பல்கலைக்கு எல்லை நிர்ணயிக்கும்போது, வெளிநாட்டு, பல்கலைகளை
நாட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...