"எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான
மதிப்பெண் தர வரிசை பட்டியல், ஜூன் முதல் வாரம் வெளியிடப்படும்" என,
மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை குறித்து, மருத்துவக்
கல்வி மாணவர் சேர்க்கை தேர்வுக் குழு செயலர், சுகுமார் கூறியதாவது:
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., பட்டப் படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை
கலந்தாய்வு விண்ணப்பங்களை, வரும் மே, 9ம் தேதி முதல், 18ம் தேதி வரை,
அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு பல் மருத்துவக்
கல்லூரியில், பெறலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மே, 20ம் தேதிக்குள் சமர்பிக்க
வேண்டும். மொத்தம், 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளன. விண்ணப்ப
கட்டணம், 500 ரூபாய் செலுத்துவதில் இருந்து, எஸ்.சி., - எஸ்.டி., -
எஸ்.சி.ஏ., பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
www.tnhealth.org, www.tn.gov.in
ஆகிய இணையதளங்களிலும், மே 9ம் தேதி முதல், விண்ணப்பங்களை பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம். விண்ணப்ப கட்டணத்தை செலுத்தும் முறை உள்ளிட்ட விவரங்களை,
குறிப்பிட்ட இணைய தளங்களில் பெறலாம்.
பொறியியல் கலந்தாய்வு துவங்குவதற்கு முன், எம்.பி.பி.எஸ்., -
பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நடத்த வேண்டும். இதன்
முதல்கட்டமாக, ஜூன் முதல் வாரத்தில், மருத்துவப் படிப்பு மாணவர்
சேர்க்கைக்கான, மதிப்பெண் தரவரிசை பட்டியலை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு, சுகுமார் கூறினார்.
285 கூடுதல் எம்.பி.பி.எஸ்., இடங்கள்?: திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியை, இந்த ஆண்டு துவங்க, இந்திய மருத்துவ கவுன்சிலிடம் (எம்.சி.ஐ.,) அனுமதி கோரப்பட்டுள்ளது.
மேலும், சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி
ஆகியவற்றில் உள்ள, எம்.பி.பி.எஸ்., இடங்களை, தலா, 250 ஆக உயர்த்துவது
குறித்து, இக்கல்லூரிகளில், சமீபத்தில், எம்.சி.ஐ., குழு ஆய்வு நடத்தியது.
ஆய்வு முடிவுகள், கல்லூரி நிர்வாகங்களுக்கு சாதகமாக வந்தால், இந்த ஆண்டு, 285 எம்.பி.பி.எஸ்., இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...