கோவை மாநகராட்சி பள்ளிகளை ஒருங்கிணைக்கவும்,
மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தவும் பிரத்யேக சாப்ட்வேர்
நிறுவப்படுகிறது. இதன்மூலம், மாணவர்களின் கல்வித்தரத்தை வீட்டில் இருக்கும்
பெற்றோரும் தெரிந்து கொள்ளலாம்.
தனியார் பள்ளிகளில் மாணவர்களின் வருகை பதிவு,
கல்வித்திறன் போன்ற விபரங்கள் பெற்றோருக்கு "எஸ்.எம்.எஸ்" மற்றும்
"இ-மெயில்" மூலம் அனுப்பப்படுகிறது.இதனால், பள்ளி நிர்வாகம், மாணவர்
கண்காணிப்பு எளிதாகிறது. ஆனால்,அரசு பள்ளிகளுக்கு குழந்தைகள் சரியாக
செல்கிறார்களா, நன்றாக படிக்கிறார்களா என்ற விபரங்கள் பெற்றோர்களுக்கு
தெரிவதில்லை. தேர்ச்சி அட்டையை பார்த்து மட்டுமே தெரிந்து கொள்ளும் நிலை
உள்ளது.தனியார் பள்ளிகளை போன்று, அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் பற்றி
பெற்றோருக்கு தெரிவிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டால், எப்படி இருக்கும்
என, ஏங்காத பெற்றோர் இல்லை
.ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் இந்த ஆவலை
பூர்த்தி செய்யும் வகையில், கோவையில் மாநிலத்தில் முதல்முறையாக, மாநகராட்சி
பள்ளிகளுக்கு பிரத்யேக சாப்ட்வேர் அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கான
ஆலோசனை கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் மேயர், கமிஷனர் லதா ஆகியோர்
தலைமையில் நடந்தது.புதிய சாப்ட்வேர் மூலம், பள்ளி குழந்தைகளின் கல்வி திறனை
மேம்படுத்துவது பற்றி "எவரான் கல்வி நிறுவனம்" சார்பில்
விளக்கமளிக்கப்பட்டது. வரும் கல்வியாண்டில், கோவை ராமகிருஷ்ணாபுரம்
மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், புதிய சாப்ட்வேரை பரீட்சார்த்த
முறையில் நிறுவ முடிவு செய்யப்பட்டது.
"எவரான் கல்வி நிறுவனத்தின்"
துணைத்தலைவர் கிருஷ்ணகுமார் கூறியதாவது:"கல்வி நிறுவன ஆராய்ச்சி திட்டம்"
என்ற பெயரில், "கேம்பஸ் மேனேஜ்மென்ட் சொல்யூஷன்" எனும் சாப்ட்வேர்
அமைக்கப்பட்டுள்ளது.மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் பெறுவது, சேர்க்கை,
கட்டணம், கல்வி உதவித்தொகை, வருகைப்பதிவு, காலஅட்டவணை, ஆசிரியர்கள் நடத்திய
பாடங்கள், மாணவர்கள் எழுதிய தேர்வுகள், அதற்கான முடிவுகள் அனைத்தையும்
இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.ஒவ்வொரு பாடத்திற்கான வினாவங்கி,
விடைத்தாள், பாடத்திட்டம் போன்றவையும் பதிவு செய்யப்படும். பாடங்களில் உள்ள
சந்தேகங்களை கம்ப்யூட்டரின் உதவியுடன் தீர்வு காண்பது, மாதிரி தேர்வு
எழுதும் நடைமுறைகளை மேற்கொள்வது ஆகியவை இதில் சாத்தியம். மாணவர்எந்த
பாடத்தில் பலவீனமாக உள்ளான் என்பதை கண்டறிந்து, அதற்கேற்ப பயிற்சி அளிக்க
முடியும்.பள்ளியில் உள்ள ஆசிரியர்கள், அவர்களின் வருகைப்பதிவு உள்ளிட்ட
நிர்வாக தகவலும் பதிவு செய்யப்படும்.
இதன்மூலம், ஒவ்வொரு மாணவன்பற்றிய
விபரமும், பள்ளிகளின் ஒட்டுமொத்த புள்ளிவிபரத்தையும் இணையதளம் மூலம்
தெரிந்து கொள்ளலாம்.மாநகராட்சி இணையதளத்துடன், இந்த சாப்ட்வேர்
இணைக்கப்படும். மாணவர் பற்றிய விபரங்கள் பெற்றோருக்கு, "எஸ்.எம்.எஸ்"
மற்றும்"இ-மெயில்" மூலம் தெரிவிக்கப்படும். புதிய சாப்ட்வேர் மூலம்
கல்வித்தரம், நிர்வாகத்தரம் மேம்படும்.இவ்வாறு, கிருஷ்ணகுமார்
தெரிவித்தார்.கோவை மேயர் கூறுகையில், "மாநகராட்சி பள்ளிகளின் தரம், தனியார்
பள்ளிகளுக்கு இணையாக உயர்த்தப்பட்டு வருகிறது. பள்ளியில் குழந்தையை
சேர்ப்பது முதல் படித்து முடித்து வெளியில் செல்வது வரை, அவர்களின்
படிப்பு, நடத்தை உள்ளிட்ட அனைத்தையும், முன்னேற்றத்திற்கு தேவையான
வழிமுறைகள் அனைத்தையும் இதன்மூலம் அறிந்து கொள்ளலாம்.
கோவை ராமகிருஷ்ணாபுரம்
மேல்நிலைப்பள்ளியில் 1,200 மாணவர்கள் படிக்கின்றனர். அங்கு, எவரான்
நிறுவனத்தினர் இலவசமாக சாப்ட்வேர் நிறுவுகின்றனர். திட்டத்திலுள்ள குறைகள்
நிவர்த்தி செய்யப்பட்டு, மாநகராட்சியிலுள்ள 83 பள்ளிகளிலும் புதிய
சாப்ட்வேர் நிறுவி, 26 ஆயிரம் மாணவர்களின் கல்வித்தரம், பள்ளிகளின் தரம்
மேம்படுத்தப்படும். இது மாநிலத்தில் முன்மாதிரியான திட்டமாகும்" என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...