"சுட்டெரிக்கும் வெயிலால் தாகத்தில்
தவிக்கும் பறவைகளுக்கு, தண்ணீர் கொடுத்து உதவுங்கள்," என, இயற்கை
ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வெள்ளை அரிவாள் மூக்கன், மீன்கொத்தி, மைனா, நீர்காகம்,
சிட்டுக்குருவி, பாம்புதாரா, தேன்சிட்டு, சின்னான், சிவப்பு மூக்கன்,
சாம்பல் நாரை என 300க்கும் மேற்பட்ட பறவையினங்கள் உள்ளன. நீர் நிலைகள்,
மரங்கள் அடர்ந்த பகுதி, குளம், குட்டைகளில் இப்பறவைகள் வாழ்கின்றன.
சில மாதங்களாக கோடை வெயிலின் தாக்கத்தால், தண்ணீர்
இருப்பிடத்தை தேடி பறவைகள் பறந்து அலைகின்றன. சுட்டெரிக்கும் வெயிலால்
மனிதர்கள் மட்டுமின்றி, பறவைகளும் தாகத்தால் வாடுகின்றன; பறவைகளுக்கு,
தண்ணீர் கொடுத்து உதவுங்கள் என இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.
"ஓசை" அமைப்பு தலைவர் காளிதாஸ் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள பறவையினங்கள் தண்ணீர் பருகும் நேர
அட்டவணையை குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. பொதுவாக, மூன்று மணி நேரத்துக்கு
ஒருமுறை தண்ணீர் குடிக்கும் பறவைகள் அதிகம். குளம், குட்டை பகுதிகளில்
இரவில் தங்கும் பறவைகள், காலையில் இரை தேடி வெளியே செல்லும்போது தண்ணீர்
குடிக்கின்றன.
தற்போது குளம், குட்டை நீர்நிலைகளில் தண்ணீர்
வற்றிவிட்டதால், அருகில் உள்ள வீடுகள், தோட்டங்களை நோக்கி வருகின்றன.
பறவைகள், குருவிகள் மிக சிறிதளவே தண்ணீர் பருகுகின்றன; நாம் பயன்படுத்தும்
குடிநீரில் சிறிதளவை வாய் அகன்ற பாத்திரங்களில், காலியாக உள்ள இடங்களில்
எவ்வித இடையூறும் ஏற்படுத்தாத வகையில் வைத்து விட்டால், பறவைகள் வந்து
குடித்துச் செல்லும்.
பறவைகளுக்கு தாகம் தீர்ப்பது, பறவையினங்கள் உயிர்வாழ
உதவியதாய் அமையும்; மொட்டை மாடியில், வீட்டு முற்றத்தில், வீட்டின்
முன்பகுதிகளில் சிறிதளவு தண்ணீர் வைத்து, பறவைகளின் தாகம் தீர்க்கலாம்,
என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...