Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குஜராத்தில் கல்விப் புரட்சி


           கல்வி கற்றவர்களின் எண்ணிக்கைதான் ஒரு நாட்டு வளர்ச்சியின் அளவுகோல். கடந்த பத்து ஆண்டுகளில் தொடக்கக் கல்வியிலிருந்து உயர் கல்விவரை குஜராத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களே இதற்குச் சான்று.  
 
             மோடியின் அரசு, ‘ஷாலா பிரவேஷ் மகோத்சவ்’ என்ற திருவிழாவை நடத்திவருகிறது. இது பள்ளிக்கூடங்கள் திறக்கும் முதல் நாளைத் திருவிழாவாகக் கொண்டாடுவதாகும்.இந்தத் திருவிழாவின் நோக்கம் என்னவென்றால், பள்ளியில் சேரும் வயது நிரம்பிய அனைத்துக் குழந்தைகளையும் தேடிப்பிடித்துப் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது. அதேபோல் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்திய மாணவ, மாணவிகளையும் கண்டுபிடித்து அவர்களை அந்தந்த வகுப்புகளில் சேர்த்து படிப்பைத் தொடரச்செய்வது ஆகும்.


           இத்திருவிழாவில் கல்வித்துறையினர் மட்டுமல்ல, அரசுத் தலைமைச் செயலர், துறைச் செயலர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட அனைத்து அரசு அதிகாரிகளும் ஈடுபடுகின்றனர். முதல்வர் நரேந்திர மோடியும் ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் இந்தத் திருவிழாவில் பங்கேற்கிறார்.

பெண் கல்வி:

அனைத்துப் பெண் குழந்தைகளையும் பள்ளியில் சேர்ப்பதற்காக ‘கன்யா கேலவாணி’ என்னும் இயக்கம் 2003ல் ஆரம்பிக்கப்பட்டது. மக்களைப் பார்த்து நரேந்திர மோடி, ‘நான் உங்களிடம் கேட்கும் பிச்சை ஒன்றே ஒன்றுதான். உங்கள் பெண் குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புங்கள்’ என்றார். அதோடு அவர் நின்றுவிடவில்லை. ஒவ்வோர் ஆண்டும், பள்ளிக்கூடம் திறக்கும்போது நரேந்திர மோடியே நேரில் சென்று பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புமாறு வலியுறுத்துகிறார். இதற்காக அவர் ஆண்டுக்கு ஆறு நாட்களை ஒதுக்குகிறார்.



பெண் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்காக, கன்யா கேலவாணி ரதம் ஒன்று கிராமம் கிராமமாகச் செல்கிறது. இது பெண் கல்வியின் அவசியத்தை உணர வைக்கிறது.


மோடியின் அதிரடி உத்தரவின்மூலம் மாநிலம் முழுதும், பள்ளிக்கூடங்களில் கழிப்பிட வசதிகள் போதுமான அளவுக்கு ஏற்படுத்தப்பட்டன.


வறுமைக் கோட்டுக்குக்கீழ் உள்ள பெண் குழந்தைகள் பள்ளியில் சேரும்போதே அவர்களுடைய வங்கிக் கணக்கில் பணம் போடப்படுகிறது. எட்டாம் வகுப்பை முடித்தவுடன், அல்லது பன்னிரெண்டாம் வகுப்பை முடித்தவுடன் அந்த மாணவிக்கு வட்டியுடன் சேர்த்துப் பணம் வழங்கப்படுகிறது.


பெண் கல்வித் திட்டத்துக்காகவே சிறப்பு நிதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நரேந்திர மோடிக்கு முதல்வர் என்ற முறையில் வழங்கப்படும் பரிசுப் பொருட்களை ஏலத்தில் விட்டு அதன் மூலம் கிடைக்கும் பணமும் இந்தப் பெண் கல்வித் திட்ட நிதியில் முழுவதுமாகச் சேர்க்கப்படுகிறது.


குஜராத்தில் பள்ளிக்கூடம் செல்லும் வயதை ஒரு குழந்தை எட்டிவிட்டால், அந்தக் குழந்தையைக் கட்டாயம் பள்ளிக்கூடத்துக்குக் கொண்டு சென்றுவிடுவார்கள். தப்பவே முடியாது. இடையில் நின்றாலும் விடுவதில்லை.


மருத்துவப் பரிசோதனை

குஜராத்தில் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை ஓர் இயக்கமாகவே நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஒரு வாரம், பள்ளிக்கூட சுகாதார வாரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இது மாநிலம் முழுதும் உள்ள அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


முதல் நாள், ‘சுத்தமாக இருப்பது எப்படி’ என்பதை வலியுறுத்தும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இரண்டாம் நாள், அடிப்படைச் சுகாதாரப் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. மூன்றாம் நாள் சத்தான உணவு பற்றிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதில் பல்வேறு போட்டிகளும் நடத்தப்படுகின்றன. மாணவ, மாணவிகளுக்கான சமையல் போட்டி முக்கியமானது ஆகும். இதன்மூலம் பள்ளியில் படிக்கும்போதே அவர்கள் நன்கு சமைக்கும் திறனையும் வளர்த்துக்கொள்ள முடிகிறது. அதோடு, அந்தப் பகுதியில் கிடைக்கும் உணவுப் பொருட்கள், காய்கறிகளைக் கொண்டு எப்படிச் சத்தான உணவைச் சமைப்பது என்பதும் சொல்லிக்கொடுக்கப்படுகிறது. நான்காம் நாள், மேம்பட்ட சுகாதாரப் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. ஐந்தாம் நாள், அதாவது இறுதி நாள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.


இந்தச் சுகாதார வார நிகழ்ந்ச்சியில் பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி பள்ளிக்கு வர முடியாத அப்பகுதிச் சிறுவர்களும் கலந்துகொள்கின்றனர். இதன்மூலம் அவர்களும் பயன் அடைவது இந்தத் திட்டத்தின் சிறப்பு ஆகும்.


மக்களின் பங்களிப்பு

அரசுப் பள்ளிக்கூடங்களைத் தவிர்த்து, தனியார் பள்ளிக்கூடங்களுக்குச் செல்வோர் முன்வைக்கும் ஒரே வாதம், தரம். இந்தப் பிரச்னையைத் தீர்க்க ‘குணோத்சவ்’ என்ற இயக்கத்தை 2009ல் தொடங்கினார் மோடி. மோடி, அவரது அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், 3000-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் ஆகியோர் இதில் அங்கத்தினர். இவர்கள் குஜராத்தில் உள்ள மொத்தம் 32,274 தொடக்கப் பள்ளிக்கூடங்களை ஆய்வு செய்ய ஆண்டுதோறும் மூன்று நாட்களைச் செலவிடுகின்றனர்.


இந்த ஆய்வின்போது, மாணவர்களின் வாசிப்புத் திறன், எழுத்துத் திறன், அடிப்படை அறிவியல், கணிதத் திறன் போன்றவை கவனிக்கப்படுகின்றன. இதன்மூலம் அப்பள்ளியின் தரம் மதிப்பிடப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படுகின்றன.


இந்த இயக்கம் எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது, இதில் இன்னும் மேம்படுத்தவேண்டியது ஏதேனும் உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ளும் பணியை ஒரு மூன்றாம் அமைப்பிடம் கொடுத்துள்ளனர். அவர்களும் இந்த இயக்கத்தின் போக்கைக் கண்காணித்து, தேவையான பரிந்துரைகளை வழங்கிவருகின்றனர்.



புதிய பல்கலைக்கழகங்கள்: 2

001-ம் ஆண்டு குஜராத்தில் 11 பல்கலைக்கழகங்களே இருந்தன. ஆனால் 2011-ம் ஆண்டில் 41 பல்கலைக்கழகங்களாக இது உயர்ந்து நிற்கிறது.ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை. உதாரணத்துக்கு, குழந்தைகள் பல்கலைக்கழகத்தை எடுத்துக்கொள்வோம். இந்தப் பல்கலைக்கழகத்தில், குழந்தை பிறப்புமுதல் அதனை ஒவ்வொரு நிலையிலும் எவ்வாறு அதனை வளர்க்கவேண்டும் என்பது தொடர்பான விரிவான படிப்புகளைச் சொல்லிக்கொடுக்கின்றனர். பல ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இதை 2009-ம் ஆண்டு நரேந்திர மோடி தொடங்கினார். இந்தியாவில் குழந்தைகளுக்கான பல்கலைக்கழகம் இது ஒன்றுதான் உள்ளது. உலக அளவில் மொத்தம் 4 பல்கலைகழகங்கள்தாம் உள்ளன. அதில் இதுவும் ஒன்று.



உலகம் முழுவதும், பெட்ரோல் சம்பந்தப்பட்ட படிப்புகளுக்குக் கடும் கிராக்கி உள்ளது. இத்தகைய படிப்பின் அவசியத்தையும் வேலை வாய்ப்பையும் புரிந்துகொண்ட நரேந்திர மோடி, ‘தீனதயாள் உபாத்தியாயா பெட்ரோலியப் பல்கலைக்கழகம்’ என்ற பல்கலைக்கழகத்தை காந்திநகரில் தொடங்கியுள்ளார். இங்கு பெட்ரோலியம் தொடர்பான அனைத்துப் படிப்புகளும் கற்பிக்கப்படுகின்றன.



ஐ.டி.ஐ. மாணவர்கள்:

முன்பெல்லாம் குஜராத்தில் ஐ.டி.ஐ படித்த மாணவர்களுக்கு வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது. அதற்கு முக்கியக் காரணம், ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்ற மாணவர்களின் அடிப்படைக் கல்வித் தகுதி, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களைவிடக் குறைவாகவே கணக்கிடப்பட்டது. அதாவது ஐ.டி.ஐ படிப்பதற்கு அடிப்படைக் கல்வித் தகுதியான 10-ம் வகுப்புத் தேர்ச்சியே, அவர்களின் கல்வித் தகுதியாக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனால் 12-ம் வகுப்புத் தேர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் அரசு வேலைக்கான தேர்வுகளை ஐ.டி.ஐ முடித்த மாணவர்கள் எழுத முடியாத நிலை இருந்தது.



10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் ஐ.டி.ஐ இரண்டு ஆண்டுகள் படித்தும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இணையாக இல்லாத நிலையை உணர்ந்த நரேந்திர மோடி, ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இணையானவர்கள் என்ற நிலையை ஏற்படுத்தினார். இதற்காக புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தார். இதன் மூலம், ஐ.டி.ஐ முடித்த மாணவர்களுக்குத் தொழில் சார்ந்த வேலைவாய்ப்பும் கிடைக்கும். 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் எழுதும் அரசு தேர்வுகளை எழுதி அதன்மூலமும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.



மேலாண்மைக் கல்வி நிறுவனம்:

அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம் போக மற்றுமொரு உலகத் தரம் வாய்ந்த மேலாண்மைக் கல்வி நிறுவனத்தை ஏற்படுத்த மோடி விரும்பினார். குஜராத்தில் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக அவர் இந்த முடிவை எடுத்தார். இதனால் ‘ஐ கிரியேட்’ என்ற புதிய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தை, குஜராத் தலைநகர் காந்திநகரில் ஏற்படுத்தினார்.



இன்போசிஸ் நாராயணமூர்த்தி, இந்தக் கல்வி நிறுவனத்தின் முதன்மை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை உருவாக்க 150 கோடி ரூபாயை குஜராத் அரசு ஒதுக்கியது என்றால், இந்தக் கல்வி நிறுவனத்தின் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்ளலாம். இந்தக் கல்வி நிறுவனத்தின் முக்கியப் பணி, தொழில்முனைவோரை ஊக்கப்படுத்துவது ஆகும்.


மனிதவளத்தில் பெருமளவு பின்தங்கியிருந்த குஜராத்தை மோடியின் பல்வேறு செயல்திட்டங்கள் முன்னேற்றப் பாதைக்குக் கொண்டுவந்துள்ளன. இனி வரும் ஆண்டுகளில் குஜராத் மனிதவளத்திலும் பெருமளவு முன்னேறும் என்பது தெளிவு.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive