Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

போதிய மாணவர்கள் இல்லை - விற்பனைக்கு வரும் தனியார் கல்லூரிகள்


           தமிழகத்தில், குறிப்பாக கோவை பிராந்தியத்தில், பல கல்லூரிகள் விற்பனை செய்யப்படவுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பொறியியல் கல்லூரிகள். மாணவர் பற்றாக்குறையே இதற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது.


          அதேசமயம், விற்பனைக்குள்ள கல்லூரிகளை வாங்குவதற்கும் குறைந்தளவிலான ஆட்களே முன்வருகிறார்கள். அதிகரிக்கும் நிர்வாக செலவுகள் மற்றும் பெருமளவு சரிந்துவிட்ட மாணவர் சேர்க்கை போன்ற காரணிகள், கல்லூரிகளின் விற்பனைக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. தமிழகம் முழுவதும், இத்தகைய பரிதாப நிலையில், குறைந்தபட்சம் 100 கல்லூரிகள் உள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

          கணக்கில்லாமல் ஆங்காங்கு முளைத்துவிட்ட பொறியியல் கல்லூரிகள் 
பலவற்றில், பாதியளவிற்கு கூட மாணவர்கள் சேர்வதில்லை. எனவே, வேறுவழியின்றி, அக்கல்லூரிகளை யாரிடமாவது தள்ளிவிடும் நிலை, அதன் நிறுவனர்களுக்கு ஏற்படுகிறது. இந்தவகையில், சில கலை-அறிவியல் கல்லூரிகளும் விற்பனைக்கு வருகின்றன. ஒரு கல்வி நிறுவனம் ரூ.50 கோடியிலிருந்து ரூ.100 கோடி வரை விலை பேசப்படுகிறது. கல்லூரி விற்பனை பற்றிய விளம்பரங்கள், ஏஜென்டுகள் மற்றும் புரோக்கர்களின் மூலமே செய்யப்படுகிறது. ஏனெனில், கல்வி நிறுவன உரிமையாளர்கள் தங்களின் சமூக மதிப்பை காத்துக்கொள்ளும் வகையில், இதில் நேரடியாக ஈடுபடுவதில்லை.

          இதுகுறித்து, ஒரு கல்வியாளர் கூறியதாவது: தமிழகத்தில், ஏறக்குறைய 100 பொறியியல் மற்றும் இதர கல்லூரிகள் விற்பனை செய்யப்படும் நிலையில் உள்ளன. ஏனெனில், அவற்றில் போதுமான மாணவர் சேர்க்கை இல்லை. மாணவர்கள் இன்றி, அவர்களுக்கு வருமானம் எப்படி கிடைக்கும் என்றார்.

           மேலும் ஒரு கல்வியாளர் கூறுவதாவது: ஒரு கல்வி நிறுவனத்தை நடத்துவதற்கான விதிமுறைகள் கடுமையாக இருக்கின்றன. எனவே, அவற்றை நடத்துவது அவ்வளவு எளிதாக இல்லை என்றார்.

               கடந்தாண்டு, ஒரு பெரிய கல்விக் குழுமம், கோவை பகுதியில் ஒரு கல்லூரியை விலைக்கு வாங்கியது. கல்லூரி கைமாறிய பிறகு, அதன் மாணவர் சேர்க்கை 50% என்ற நிலையிலிருந்து 70% என்ற அளவில் உயர்த்தப்பட்டிருப்பதாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும், அதிகரிக்கும் செலவுகள் மற்றும் மாணவர்களை சேர்ப்பதில் இருக்கும் சவால்கள் போன்றவற்றால், கல்வி நிறுவனத்தை நடத்துவது மிகவும் சிரமமான ஒன்று என்று அந்த வட்டாரங்களும் ஒப்புக்கொள்கின்றன.

           கடந்தாண்டு, தமிழகத்தில், சுமார் 45,000க்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு பொறியியல் இடங்கள் நிரம்பவில்லை மற்றும் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லையென்று, பல கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யப்போவதாக AICTE எச்சரித்து, 71 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அந்த கல்வி நிறுவனங்கள் பலவற்றில், 50% இடங்களைக்கூட மாணவர் சேர்க்கை மூலம் நிரப்ப முடியவில்லை.

          பிரபல கல்விப் பிராந்தியம் என்று பெயர்பெற்ற கோவை மண்டலம், இந்தப் பிரச்சினையால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த அட்மிஷன் சீசன் இறுதியில், இந்த மண்டலத்திலுள்ள 50,000 பொறியியல் இடங்களில், குறைந்தபட்சம் 10,000 இடங்கள் வரை காலியாக இருந்தன.

           பல கல்லூரிகள் விற்பனைக்கு வந்தாலும், அவற்றை வாங்குவதற்கு, பல பிரபல கல்விக் குழுமங்கள் தற்போதைக்கு தயாராக இல்லை. அந்த குழுமங்கள் கூறுவதாவது: எங்கள் கல்விப் பணியை விரிவுபடுத்தும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. எதிர்காலத்தில்தான் அதை மேற்கொள்ள முடியும். தற்போதைக்கு, எந்த புதிய கல்வி நிறுவனத்தையும், போதுமான சாத்தியக்கூறுகள் இன்றி, நாங்கள் வாங்க விரும்பவில்லை என்கின்றன.

           ஆனால், இதுதொடர்பாக ஒரு கல்வி நிலைய உரிமையாளர் கூறுவதாவது: பல நபர்கள், இந்த இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி, குறைந்த விலைக்கு ஒரு கல்லூரியை வாங்கி, கல்வித்துறையில் நுழைந்துவிடலாம் என்று நினைக்கின்றனர். சினிமா மற்றும் டிராவல் உள்ளிட்ட வணிகத்தில் அதிகம் சம்பாதித்த நபர்கள் இவ்வாறு நினைக்கின்றனர். ஆனால், இப்போதைய சூழலில், ஒரு கல்வி நிறுவனத்தை வாங்கி நடத்தி விடலாம் என்று நினைப்பது தற்கொலைக்கு சமம் என்றார்.

             AICTE -ஆல், தரமதிப்பீடு(accredition) பெற்ற கல்லூரிகளுக்கு அதிக மாணவர்கள் செல்வதால், மற்ற கல்லூரிகள், போதுமான மாணவர்களின்றி, கடும் நெருக்கடிக்கு ஆளாகின்றன. கடந்த 2012ம் ஆண்டில், தரமதிப்பீடு பெற்ற கல்லூரிகள் தங்கள் இடங்களை 180 வரை உயர்த்திக்கொள்ளலாம் என்று அனுமதியளித்த AICTE, அந்த அனுமதியை பிற கல்லூரிகளுக்கு 120 என்ற அளவில் நிர்ணயித்தது. இதன்மூலம், குறிப்பிட்ட கல்லூரிகளில் இடங்களின் எண்ணிக்கை தீடீரென அதிகரிக்க வழியேற்பட்டது. 2010ம் ஆண்டில், 1.5 லட்சம் இடங்கள் இருந்தன. ஆனால், 2012ம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 2.25 லட்சம் என்ற அளவிற்கு உயர்ந்தது.

                  மேலும், நிகர்நிலைப் பல்கலைகள், தங்களுடைய துறைகளை அதிகரித்துக் கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டன. இதனாலும், பிற கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில் பெரும் தேக்கம் ஏற்பட்டது. கோவைப் பிராந்தியத்தைப் பொறுத்தவரை, கேரளாவிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் அதிக மாணவர்கள் அங்கே வருவார்கள். ஆனால், தற்போது கேரள மாநிலத்திலும், தனியார் கல்வி நிறுவனங்கள் அதிகளவில் திறக்கப்பட்டு வருவதால், அங்கிருந்து வரும் மாணவர் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டது. கோவை மண்டலம் பாதிக்கப்பட இது ஒரு முக்கிய காரணம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive