Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆளுமைத் திறனை வளர்க்கும் நூல்கள்: தமிழ் பல்கலை துணைவேந்தர்


              "ஒரு மனிதனின் ஆளுமைத் திறனை வளர்க்கும் வல்லமையும், நெறிப்படுத்தும் தன்மையும், உள்ளத்தில் தன்னம்பிக்கை ஊட்டி தளர்ச்சியை போக்கி, உயர்வை தரும் சக்தி நூல்களுக்கு உள்ளது.
 
         எனவே நூல்களை வாசிக்கும் பழக்கம் அவசியம்," என தஞ்சை தமிழ் பல்கலை துணைவேந்தர் திருமலை பேசினார்.

தஞ்சையில், அரண்மனைக்கு செல்லும் வழியில் கீழராஜா வீதியிலுள்ள தமிழ் பல்கலையின் பதிப்புத்துறையில் நூல்களுக்கு, 50 சதவீத விலை தள்ளுபடி சலுகை அறிவிப்பு விழா நடந்தது. விழாவில் துணைவேந்தர் திருமலை தலைமை வகித்து பேசியதாவது:

"தஞ்சை தமிழ் பல்கலையின் பதிப்புத்துறையில் இதுவரை, 465 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பதிப்புத்துறைக்கு முதலில் நிதிச்சிக்கல் நிலவியது. துணைவேந்தராக பொறுப்பேற்றதும், தனியாக இத்துறையை பிரித்து, நிதியை கையாள தனி வங்கி கணக்கு துவங்கப்பட்டது. தற்போது, 20 லட்சம் ரூபாய் வங்கியில் இருப்பு உள்ளது. இதன்மூலம் பதிப்புத்துறை நடவடிக்கைளை திறம்பட கொண்டு வழியேற்பட்டுள்ளது.

இதேபோல நூல்களை முன் வெளியீட்டு திட்டத்தில் வெளியிட, ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. நூல்களுக்கு நாம் தரும் விலை என்பது தாள், மைக்கு தரும் விலை தானே தவிர, உண்மையில் நூலுக்கு தருவது அல்ல. புத்தகங்கள் விலை மதிப்பே இல்லாதவை. புத்தகம் தான் ஒரு மனிதனை நெறிப்படுத்தும். வாழ்க்கையில் தளர்வுறும் சமயத்தில் தன்னம்பிக்கை ஊட்டும். ஆளுமை திறனை வளர்க்கும்.

ஈராக் அதிபர் சதாம் உசேன், அமெரிக்கா நாட்டின் உளவுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது, அவரிடம் உண்மையை வரவழைக்க அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். எவ்வளவோ விசாரித்தும் சதாம் உசேனிடம் தகவல் ஏதும் பெற முடியவில்லை.

இந்நிலையில் சிறையில் சதாம் உசேன் இருக்கும் சமயத்தில், அவர் என்ன விரும்பி கேட்கிறார்? என கூறும்படி, காவலரிடம் அதிகாரி கேட்டுக்கொண்டார். அதன்படி ஒரு மாதத்துக்கு பின், சதாம் உசேன் காவலரை அழைத்து, ஆங்கில நாவலாசிரியர் எர்னஸ்ட் ஹெமிங் வே எழுதிய, "ஓல்டுமேன் அண்ட் த சி" எனும் புத்தகத்தை வாங்கி வரும்படி கூறியுள்ளார். இதைத் தெரிந்து கொண்ட அதிகாரி, சதாம் உசேனிடம் இனி உண்மையை பெற முடியாது. அவர் மேலும் போராட தயாராகி விட்டார் என்பது, அவர் விரும்பி கேட்ட புத்தகத்தின் மூலம் தெரிந்து விட்டது என, உயரதிகாரிகளுக்கு அளித்தார்.

இத்தகைய புத்தகம், தமிழில் "கடலும், கிழவனும்" எனும் தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் கிழவன், சுறா மீனை படகில் கட்டி கரைக்கு இழுத்து வருகிறான். இப்படி வரும் வழியில் இறந்த சுறா மீனை, பிற மீன்களை தின்ன முயற்சிக்கின்றன. இதை குத்தீட்டியால் கிழவர் தடுக்கிறார்.

பின் கரைக்கு திரும்பிய பின், சுறாமீன் தலை மற்றும் கட்டப்பட்ட பகுதியை தவிர பிற உடல் பாகங்கள் அனைத்தும் மீன்களால் தின்னப்பட்டு இருந்ததை கிழவர் பார்த்தார். அப்போது, வானத்தை பார்த்து, வழக்கம்போல என்னை அதிர்ஷ்டம் பற்றிக்கொண்டது போலுள்ளது என, கிழவர் கூறி விட்டு, குடிசையை நோக்கி வலைகள், குத்தீட்டியுடன் புறப்பட்டார் என, கதை சம்பவம் விவரிக்கிறது. இதன்மூலம் மறுநாளும் கிழவர் மீன்பிடிக்க கடலுக்கு புறப்படுவார் என, நம்பிக்கையை படிக்கும் வாசகர்களுக்கு ஊட்டுகிறது.

எனவே புத்தகம் வாசிக்கும் பழக்கம் வாழ்க்கையை வளப்படுத்தும். அதனால் வாசிக்கும் பழக்கம் அவசியம். இதை ஊக்கப்படுத்தும் வகையில், பதிப்புத்துறை மூலம் தமிழ்ப் புத்தாண்டு தினமான இன்று முதல், வரும், 28ம் தேதி வரை 15 நாட்களுக்கு, 50 சதவீதம் தள்ளுபடி விலையில், புத்தக விற்பனை நடக்கிறது. இதை வாசகர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கடந்தாண்டு தள்ளுபடி விற்பனையில், இரண்டு லட்சத்து, 80 ஆயிரம் ரூபாய் மூலம் வருவாய் கிடைத்தது. நடப்பாண்டு, மூன்று லட்சம் ரூபாய் புத்தக விற்பனை வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பதிப்புத்துறைக்கு என, தனி வலைதளம் ஏற்படுத்தப்படும். அதில், நூல்களின் விபரம் தரப்படும்." இவ்வாறு துணைவேந்தர் பேசினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive