Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அறிவுசார் பூங்கா திட்டத்தை தரமணிக்கு மாற்ற ஆலோசனை: பள்ளி கல்வித் துறை முடிவு


            கல்வித் துறை அலுவலகங்கள் மற்றும் கோட்டூர்புரம் நூலகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, "அறிவுசார் பூங்கா" கட்டடத்தை, சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் கட்டுவதற்கு பதிலாக, தரமணியில் கட்டுவது குறித்து, பள்ளி கல்வி துறை, ஆலோசித்து வருகிறது. டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள பல்வேறு கட்டடங்களை இடித்தால், பழமை வாய்ந்த பல கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

         கடந்த, 2012-13ம் ஆண்டு, பட்ஜெட் கூட்ட தொடரில், "சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில், கல்வி துறை அலுவலகங்களை ஒருங்கிணைத்து, அறிவுசார் பூங்கா கட்டடம் கட்டப்படும்" என, அறிவிக்கப்பட்டது. பின், சென்னை, கோட்டூர்புரத்தில் இயங்கி வரும், அண்ணா நூற்றாண்டு நூலகமும், இந்த கட்டடத்திற்கு மாற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. 

              டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள பள்ளி கல்வித் துறை இயக்குனர் அலுவலக கட்டடம், அங்குள்ள நூலகம், கூவம் ஆற்றை ஒட்டியுள்ள கட்டடங்கள், பொதுப்பணி துறை வசம் உள்ள, தொன்மை வாய்ந்த கட்டடங்கள் பட்டியலில் உள்ளன. இருப்பினும், பள்ளி கல்வி இயக்குனர் கட்டடம் உள்ளிட்ட, நல்ல நிலையில் உள்ள பல கட்டடங்களை தரைமட்டமாக்கி விட்டு, அறிவுசார் பூங்கா கட்டடத்தை கட்ட, திட்டமிடப்பட்டு இருந்தது. 

               இதில், கல்லூரி சாலையை ஒட்டியுள்ள சம்பத் மாளிகை கட்டடம், 10 தளங்களை கொண்டது. இந்த வளாகம் கட்டப்பட்டு, 23 ஆண்டுகளே ஆன நிலையில், இதையும் இடிப்பதற்கு திட்டம் இடப்பட்டது. இந்த கட்டடத்தை இடித்தால், பக்கத்தில் உள்ள பள்ளி கல்வி இயக்குனர் அலுவலக கட்டடம், சேதம் அடையும் என, பொதுப்பணி துறை சார்பிலும், சி.எம்.டி.ஏ., தரப்பிலும், எடுத்து கூறப்பட்டு உள்ளதாக தெரிகிறது. 

              தொன்மையான கட்டங்கள் சேதம் அடைந்தால், தொல்லியல் துறையின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியது வரும் என்றும், அரசிடம் சுட்டி காட்டப்பட்டது. மேலும், 10 தளங்களை கொண்ட சம்பத் மாளிகை கட்டடம், எம்.ஜி.ஆர்., ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகும். இந்த கட்டடத்தை இடித்தால், அரசியல் ரீதியாகவும், ஆளும் அ.தி.மு.க., விற்கு எதிர்ப்புகள் வரும் என்றும், கூறப்பட்டுள்ளது.

                இதற்கும் மேலாக, கடந்த வாரம் வாஸ்து நிபுணர் ஒருவர், டி.பி.ஐ., வளாகத்தை பார்வையிட்டு விட்டு, "வாஸ்துப்படி, இங்கே புதிய கட்டடம் கட்டுவது சரிப்பட்டு வராது" என, தெரிவித்து உள்ளார். இவை எல்லாம், இப்போது தான், தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதனால், அதிர்ச்சி அடைந்த தமிழக அரசு, பள்ளி கல்வி துறை அதிகாரிகளை அழைத்து, "இவ்வளவு பிரச்னைகள் இருப்பதை, முன்கூட்டியே ஏன் தெரிவிக்கவில்லை" என, கடிந்து கொண்டதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

            இதன் காரணமாக, அறிவுசார் பூங்கா திட்டத்தை, டி.பி.ஐ., வளாகத்திற்கு பதிலாக, தரமணிக்கு மாற்றுவது குறித்து, தற்போது ஆலோசனைகள் நடந்து வருவதாகவும், துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive