Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

டி.என்.பி.எஸ்.சி புதிய சிலபஸ் - வார இதழ் செய்தி


            இந்தியாவை ஆங்கிலேயர் ஆட்சி செய்தபோது மாவட்ட வருவாய் மற்றும் நிர்வாகத்தை கவனித்து கொள்ள ஐ.சி.எஸ் பதவியை உருவாக்கினர். அதாவது இன்றைய ஐ.ஏ.எஸ் பணிக்கு முன்னோடி. அன்றைய ஐ.சி.எஸ் தேர்வு இன்றைய சிவில் சர்வீசஸ் தேர்வு போன்று முழுமையான போட்டித்தேர்வாகும். அந்த தேர்வை ஆங்கிலேயர் போல இந்தியரும் எழுதலாம்.
 
 
          இருந்தாலும் இந்தியர் இந்த தேர்வில் வெற்றிப்பெறவோ ஐ.சி.எஸ். பணியில் சேரவோ ஆங்கில அரசு விரும்ப வில்லை. அதை கடுமையாக தடுக்கும் முயற்சியில் பாடத்திட்டத்தை மாற்றி அமைத்தார்கள். அதன்படி ஐசிஎஸ் தேர்வு சிலபஸில் லத்தீன் மொழி இலக்கியத்தை வைத்து இந்தியர்கள் தேர்ச்சி பெறுவதை குறைத்தனர்.

              இதன் மூலம் இந்தியர்கள் ஐ.சி.எஸ். தேர்வில் வெற்றி பெறுவதை வஞ்சகமாக தடுக்கப்பட்டது. இருப்பினும் இதையும் மீறி சத்யேந்திரநாத் தாகூர் (ரவீந்திரநாத் தாகூரின் சகோதரர்) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஐ.சி.எஸ். தேர்வில் வெற்றிப்பெற்றது தனி கதை.

               இதேபோல தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் மருத்துவ படிப்பு படிக்க வேண்டுமானால் கட்டாயம் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஆங்கில ஆட்சியில் நிர்வாகத்தி லிருந்த பிரமணர்களால் நடைமுறையாக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் பிற்படுத்தப்பட்டவர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் மருத்துவ கல்வி பயில முடியாமல் தடுக்கப்பட்டனர். 1923-இல் நீதி கட்சி ஆட்சியில் முதல்வராக இருந்த பனகல் அரசர் மெட்ராஸ் யுனிவர்சிட்டி சட்டம் - 1923 கொண்டுவந்தார்.

           "மருத்துவம் என்பது அறிவியல்பூர்வமானது இதற்கு சமஸ்கிருதம் தெரிய வேண்டும் என்பதற்கு என்ன சம்பந்தம். பிராமணரல்லதோர் மருத்துவ கல்வி படிக்க தடுக்கும் இந்த சமஸ்கிருதம் புகுத்தல் அடியோடு நீக்கப் படுகிறது என பிராமண அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி கல்வி திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தினார்.


           அதே வழிமுறையை தான் இப்போதும் பின்பற்றி கிராமப்புற இளைஞர்களும் அதிலும் முக்கியமாக அரசு பள்ளிகளில் பயின்றவர்கள் உயர் அரசு பணிகளில் சேர முடியாமல் தடுக்கும் விதமாக இன்று டி.என்.பி.எஸ்.சி, தேர்வுகளில் புதிய பாடத்திட்டத்தை உருவாக்கியுள்ளனரோ என்ற சந்தேகம் வருகிறது. இந்த புதிய பாடத்திட்டத்தில் தமிழ் மொழி திறனை குறைத்து தமிழ் வழியில் படித்த கிராமபுற இளைஞர்கள் தடுக்கப்படுவதாக தெரிகிறது. ஆக வரலாற்றின் நிகழ்வுகள் மாறினாலும் வரலாற்றின் உள்ளடக்கம் என்றும் மாறுவதில்லை.

             இன்று இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைந்துவருகிறது. இந்த வேகமான வளர்ச்சிக்காக இந்திய சந்தைகள் மற்றும் தொழில்களில் அன்னிய முதலீடுக்கு வழிசெய்து கொடுக்கப்படுகிறது.

          இதற்காக இந்திய கல்வி முறை முழுக்க முழுக்க ஆங்கில கல்வி முறையாக மாற்றியமைக்கப்படுகிறது.

           இதற்கேற்பவே அரசு துறைகளிலும் அரசு பணியாளர் களையும் ஆங்கில அறிவு அவசியமாக்கப்படுகிறது.

              இதன்படி தான் தமிழ் மொழி திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறது. தமிழ் ஆட்சி மொழி அந்தஸ்து திட்டமிட்டு குறைக்கப்படுகிறது. தமிழ் மொழியின் சிறப்பு திட்டமிட்டு ஒழிக்கப்படுகிறது. இதுதான் இந்த புதிய டி.என்.பிஎஸ்.சி சிலபஸ் மாற்றத்தில் ஒளிந்திருக்கும் தகவல். 
 
*  தரமான சிலபஸ் என்பது என்ன?

              டி.என்.பி.எஸ்.சி புதிய சிலபஸை தரமாக தயாரித்துள்ளதாகவும், இனி இந்த மாதிரி தரமான பணியாளர் தான் தமிழக அரசுக்கு தேவை என்ற வாதம் எனக்குசிரிப்புதான் வருகிறது. தரம் என்பது என்ன?

இன்றைக்கு தமிழக அரசு ஊழியர்கள் மீது பொதுமக்களுக்கு இருக்கும் வேதனையே அரசு பணியாளர்களிடம் பணி பொறுப்பு குறைந்துவிட்டது, மக்களுக்கானசேவை செய்யவே நம்மை அரசு பணியில் அமர்த்தி யுள்ளது என்ற எண்ணம் அரசு அதிகாரிகளிடம் இல்லை, சுய ஒழுக்கம் குறைந்து வருகிறது என்பதாகும். ஆக முதலாவது ஒவ்வொரு அரசு பணியாளர்களுக்கும் அடிப்படையில் தேவையானது சுய ஒழுக்கம், மக்கள் சேவை, பணியில் பொறுப்பு, பணியில் நேர்மை ஆகியவையே. கணிணி அறிவு, மொழி அறிவு, அறிவுக் கூர்மை எல்லாம் இரண்டாவதுதான். எந்த ஒரு அரசு பணியாளரிடம் கம்ப்யூட்டர் அறிவிலோ, மொழி அறிவிலோ சிறு குறை இருந்தாலும் சரி செய்துவிடலாம். இதற்காக அரசு யாரையும் தற்காலிக பணிநீக்கம் செய்வதில்லை. ஆனால் நேர்மை தவறி நடந்து கொண்டால் பணி நீக்கமே கூட செய்யப்படுவதுண்டு.
 
ஆக அடிப்படையானது எது?.

நேர்மையான அரசு பணியாளர்கள் அதிகரிக்கும் போதுதான் அரசு நிர்வாகம் சிறந்த நேர்மையான அரசு நிர்வாகமாக செயல்படும். வெறும் கம்ப்யூட்டர், கணித அறிவு மட்டும் தரமான பணியாளர்களை உருவாக்கும் என்ற வாதம் அர்த்தமற்றது. புதிய பாடத்திட்டத்தில் சமுதாயபற்று, மக்கள் சேவை, ஒழுக்கம் சார்ந்த பாடத் திட்டங்களை ஏன் சேர்க்க கூடாது?

* பொதுத் தமிழை நீக்கியது மூலம் அரசுப் பணியில் கோப்புகளை கையாளுவதில் தமிழ் மொழித்திறன் தேவை இல்லையா?

அனைத்து டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளிலும் (குரூப் -4 மட்டும் பொதுத்தமிழ் பாடம் குறைக்கப்பட்டுள்ளது) முக்கியமாக கிராம நிர்வாக அலுவலர் தேர்விலும் பொதுத் தமிழ் பாடம் நீக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக கிராமங்களில் பணிபுரிய தமிழ் மொழித் திறனே மிக முக்கியமானது என்பது நடைமுறை உண்மை.

உதாரணமாக யாரைவிடவும் ஒரு கிராம நிர்வாக அலுவலர்தான் மக்களுடன் நேரடி தொடர்பில் இருப்பவர். மக்களுக்கும் அலுவலருக்கும் இடையே உள்ள தகவல் தொடர்பு முழுக்க முழுக்க தமிழே. பொது மக்களின் விண்ணப்பங்கள், சான்றிதழ்கள், நில ஆவணங்கள், வரி பற்றிய விவரங்கள் என அனைத்தும் தமிழ் மொழியே நடைமுறையில் இருக்கும் போது, நாளைய கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிய இருப்பவர்களின் தமிழ் மொழித்திறன் தேவையில்லையா? பத்தாம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட வி.ஏ.ஒ பணிக்கு தமிழ் மொழித்திறன் அதிகம் தேவைப்படும்போது. சிலபஸிலிருந்து பொது தமிழை அடியோடு நீக்கியதன் நோக்கம் என்ன?

* வி.ஏ.ஓ தேர்வு சிலபஸில் அடிப்படை கிராம நிர்வாகம் பற்றிய பாடம் தேவையா?

புதிய வி.ஏ.ஓ சிலபஸில் அடிப்படை கிராம நிர்வாகம் பற்றிய பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. இதனை மேலோட்டமாக பார்த்தால் சிறந்த பாடத்திட்டம் போல தெரியலாம்.

ஆனால் இது குழப்பத்தின் உச்சம். எந்த ஒரு போட்டித் தேர்விலும் பொதுவான கல்வி பாடத்திட்டங்களையே வைத்து தேர்வு நடத்தப்படும். தேர்வில் வெற்றிப்பெற்று பணியில் சேர்ந்த பின்னர்தான் அந்த பணிக்கான பயிற்சியை தமிழ்நாடு பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர் திருத்தத்துறை மூலம் வழங்கி பணியிடம் ஒதுக்கப்படுவது மரபு. இப்போது வி.ஏ.ஓ தேர்விலேயே அடிப்படை கிராம நிர்வாகம் படிக்க வேண்டுமானால் தமிழ்நாடு பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறையின் பணி என்ன?.

தமிழகத்தில் இன்னும் பத்தாயிரம் கிராம நிர்வாக அலுவலர்கள் தேவை இருக்க இப்படி கிராம நிர்வாக அலுவலர் பணியை கடினமாக்க வேண்டியதன் அவசியம் என்ன? ஓய்வு பெற்ற வருவாய் அலுவலர்களே திணறும் இந்த பாடத்திட்டத்தை பத்தாவது கல்வி தகுதி கொண்ட தேர்வில் கேட்கப்படுவது நியமானதுதானா?

* நவீன இந்திய வரலாறும் கலாச்சாரமும் பாடத்திட்டத்தின் நோக்கம் என்ன?

"பண்டைய இந்திய வரலாற்றை நன்கு தெரிந்து கொண்டால் தான் தற்போதைய சமூக வளர்ச்சியை அரசியல் கருத்துகளை நன்கு புரிந்து கொள்ள முடியும். வரலாற்றை பாதியில் படித்தால் குழப்பம் தான் வரும். தெளிவான புரிதல் கிடைக்காது' என இந்தியவின் மிக சிறந்த வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், "வரலாறும் வக்கிரங்களும்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தற்போது டி.என்.பி.எஸ்.சி அனைத்து தேர்வுகளின் பாடத்திட்டத்திலும் இந்திய வரலாறு முழுப் பாடத்தையும் நீக்கிவிட்டு, நவீன இந்திய வரலாறு மற்றும் இந்திய கலாச்சாரம் என்ற பாடத்தை மட்டும் சேர்த்துள்ளனர்.



இந்திய வரலாறு மூன்று பிரிவுகளை கொண்டது. 1. பண்டைய இந்திய வரலாறு 2. மத்திய இந்திய வரலாறு, 3. நவீன இந்திய வரலாறு. முதல் இரண்டையும் தவிர்த்துவிட்டு நவீன இந்திய வரலாறு மட்டும் படித்தால் வரலாற்றின் போக்கை ரொமிலா தாப்பர் கூறியது போல புரிந்து கொள்ளவோ தெரிந்து கொள்ளவோ முடியாது. அப்படியிருக்க அறிவியல் பாடங்களை முழுமையாக சிலபஸில் சேர்த்துள்ள போது, வரலாற்றில் இந்த வஞ்சனை செய்தது ஏன்? பண்டைய இந்திய வரலாற்றின் மூலம் சிந்து சமவெளி நாகரிகமும் ஆரியர் வருகையும், மத்திய இந்திய வரலாற்றின் மூலம் முஸ்லீம் மன்னர்களின் ஆட்சியும் இன்றைய இளைஞர்கள் படிக்க வேண்டிய அவசியம் இல்லை என டி.என்.பி.எஸ்.சி கருதுகிறதா? இந்துத்துவா கருத்தியலை போல இந்திய கலாச்சாரம் என்ற புதிய பாடத்தை இந்த சிலபஸில் புகுத்தப்பட்டதன் நோக்கம் என்ன?

* தமிழ் இலக்கியம், தமிழ் மொழி வரலாறு, தமிழ் இலக்கணம் நீக்கப்பட்டதேன்?

உலகில் தமிழ் சமூகத்தின் மிக முக்கிய அடையாளமும் தனித்துவமான சிறப்பும் உடையவை தமிழ் மொழி வரலாறு, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம். இவையே தமிழின் உயிர். இவையே தமிழின் சிறப்பு. இதற்காகவே தமிழ் செம்மொழி என அங்கீகரிக்கப்பட்டது.

ஆனால் இவ்வளவு முக்கியத்துவம் மிக்க இம்மூன்றும் டி.என்.பி.எஸ்.சி புதிய சிலபஸில் தந்திரமாக நீக்கிவிட்டு, தமிழர் வழிபாடுகள் மற்றும் சடங்குகள்; தமிழர் சமயமும் பண்பாட்டு நெறிமுறையும்: சைவம், வைணவம்; தமிழர் வாழ்க்கை: சாதி,சமயம், பெண்கள், அரசியல்; ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் தரப்பட்டதன் மூலம் தேர்வாளர் களிடமிருந்து எதை எதிர்பார்க்கிறீர்கள்? இவை எல்லோருக்கும் தெரிந்த தகவல்தானே. ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் படிக்க வேண்டிய தமிழ் இலக்கியம், தமிழ் மொழி வரலாறு, தமிழ் இலக்கணத்துக்கு முக்கியத்துவம் தராதது ஏன்?

* தனி நபர்களுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

தமிழகத்தில் தமிழுக்கு தொண்டு செய்தவர்கள், தமிழக சீர்திருத்தவாதிகள், கவிஞர்கள், புலவர்கள், மொழி அறிஞர்கள், சமூகநீதிக்காக போராடியவர்கள், பெண்கள் முன்னேற்றத்திற்காக போராடியவர்கள், என ஏராளமான முக்கியத்துவம் பெற்றவர்கள் இருக்க பொது அறிவு சிலபசில் குறிப்பிட்ட சில தனி நபர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டதேன். முக்கியமாக பண்டிட் ரவிசங்கர், எம்.எஸ்.சுப்புலட்சுமி, ருக்மணி, ஜே.கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டதேன்?

நிற்க, இவர்களையெல்லாம் பார்க்கும்போது பெருமைப்படவைக்கும் விஷயம் உதயசந்திரன் ஐ.ஏ.ஸ். பொறியியல் பட்டப்படிப்பு படித்திருந்தாலும் ஆங்கில இலக்கியங்கள் தொடர்ந்து படிக்கும் பழக்கம் இருந்தாலும் தமிழின் வளர்ச்சிக்காக பாடுபட்ட உத்தமர். 80 வருட டி.என்.பி.எஸ்.சியில் வரலாற்று சிறப்புமிக்க மாற்றங்களை திட்டமிட்டு நடைமுறைப்படுத்தியவர்.

தமிழ் மொழியை மேன்மைபடுத்த பொதுதமிழ் பாடத்தில் தரமான வினாக்களையும், அதிகளவிலான வினாக்களையும் கேட்கும் தேர்வுகளை மிக சிறப்பாக நடத்திக் காட்டியவர். அவர் உருவாக்கித்தந்த சிறந்த சீர்திருத்தத்தில் தான், இன்றைய தேர்வாணையம் நிமிர்ந்து நிற்கிறது. ஆனால் தேர்வாணையத்தின் சமீபத்திய போக்கு ஆரோக்கியமானதாக இல்லை.

கடந்த தேர்வுகளில் பணி நியமனங்களில் நடந்த இடஒதுக்கீடு குளறுபடி, நீதிமன்ற வழக்குகள், புதிய தலைவராக நவநீதகிருஷ்ணன், புதிய சிலபஸ் என உள்ளது. இதற்கிடையில் டி.என்.பி.எஸ்.சி புதிய பாடத்திட்டத்தை மாற்றி பொது தமிழ் பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு படிக்கும் இளைஞர்கள் தேர்வாணையம் முன்பு போராட்டம் நடத்தினர். புதிய பாடத்திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தலைவர், செயலாளரை நேரில் பார்த்து கேட்டுள்ளனர். ஏனோ தமிழகத்தில் அண்மை காலங்களாகடி.என்.பி.எஸ்.சி தேர்வு, ஆசிரியர் தகுதி தேர்வு, கூட்டுறவு தேர்வு ஆகியவற்றில் குளறுபடிகள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் தமிழக இளைஞர்கள் மிகவும் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.

அதிகாரிகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்களா என பொறுத்திருந்து பார்ப்போம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive