ஐ.நா.சபையை அசர வைத்த சென்னை மாணவி
ஐக்கிய நாடுகள் சபையில் குழந்தைகள் மற்றும் பெண்களின் நலனுக்காக குரல் கொடுத்து வந்திருக்கிறார் பார்வைத் திறனற்ற மாற்றுத் திறனாளி மாணவி சொர்ணலட்சுமி
சென்னை லிட்டில் பிளவர் கான்வென்ட்டில் ஒன்பதாம் வகுப்பில் படித்து வருகிறார் சொர்ணலட்சுமி (வயது 13). பார்வைத் திறனற்ற மாற்றுத் திறனாளி அவர். தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தில் குறையாத தங்கம். சென்னை அருகே உள்ள பழைய பெருங்களத்தூரில் இருக்கும் இவரது இல்லத்திற்குச் சென்று சொர்ணலட்சுமியை சந்தித்துப் பேசினோம். மடை திறந்த வெள்ளமென சொர்ணலட்சுமியிடமிருந்து பதில்கள் வந்து விழுந்தன. தமிழிலும் ஆங்கிலத்திலும் தெலுங்கிலும் சரளமாக உரையாடுகிறார். தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களின் குழந்தைகள் பாராளுமன்றத்தின் பிரதமராக இருக்கிறார். அதனாலேயே, இவருக்கு ஐ.நா. சபையில் பேசுவதற்கான வாய்ப்புக் கிடைத்துள்ளது.
பெண்களின் நிலைமை குறித்து ஆராய்வதற்கான ஐக்கிய நாடுகள் சபை ஆணையத்தின் கூட்டம் நியூயார்க்கில் ஐ.நா. சபை அரங்கில் நடைபெற்றது. சர்வதேச மகளிர் தினத்தன்று நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் பல நாடுகளிலிருந்து 250க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சொர்ணலட்சுமி பங்கேற்றார். அங்கே பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை எப்படி ஒழிப்பது என்பது குறித்து விவாதித்தார்கள். அந்தக் கூட்டத்தில் மாணவி சொர்ண லட்சுமியின் குரல் தனித்து ஒலித்தது. அக்கூட்டத்தில் நான் குழந்தைகள் பாராளுமன்றம் குறித்துப் பேசினேன். தேனி மாவட்டத்தில் 15 வயது நிரம்பிய மாணவி ஒருவருக்கு திருமணம் செய்ய நிச்சயித்து விட்டார்கள். இதனை அறிந்த குழந்தைகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அம்மாணவியின் பெற்றோரைச் சந்தித்து, இது சட்டப்படி குற்றம், இப்படிச் செய்யக்கூடாது என எடுத்துரைத்திருக்கின்றனர். அதனை அவர்கள் சட்டை செய்யவில்லை. பின்னர் குழந்தைகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தையும், அங்குள்ள வார்டு கவுன்சிலரையும் அணுகி, அம்மாணவியின் திருமணத்தை தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். இதுபோன்ற குழந்தைகள் பாராளுமன்றத்தை ஒவ்வொரு நாட்டிலும் நிறுவினால், அவர்களின் உதவியுடன் இதுபோன்ற வன்முறைகளை தடுக்க முடியும் என்று நான் ஆங்கிலத்தில் சரளமாக பேசி முடித்ததும் அரங்கத்தில் இருந்தவர்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பி பாராட்டினார்கள்" என்று மனம் நெகிழ்கிறார் சொர்ணலட்சுமி.
இச்சந்திப்பில் இரண்டு முக்கிய நபர்களைப் பற்றி சொல்ல வேண்டும். காந்தியின் கொள்ளுப் பேத்தியான எலா காந்தியை சந்தித்தேன். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத்தந்தது. பின்லாந்து நாட்டின் ஐ.நா. பிரதிநிதியாக வந்திருந்த ஜோர்மா பவ்டுவை சந்தித்தேன். அவர் எனது பேச்சைக் கேட்டு மிகவும் பாராட்டினார். அதுமட்டுமின்றி, குழந்தைகள் பாராளுமன்றத்தை பின்லாந்திலும் அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப் போகிறேன் என்று என்னிடம் கூறினார். அங்கு இருந்த வரை பல கூட்டங்களில் கலந்து கொண்டேன். ஜூலியா லீ என்ற கொரிய மாணவி எனக்கு தோழியாகக் கிடைத்தார்" என்று அமெரிக்க அனுவபங்களை நம்மிடம் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தார்.
இந்தியாவில் முதன்முதலாக, நாகர்கோவிலில் குழந்தைகள் பாராளுமன்றத்தை கடந்த 1998-இல் தொடங்கியவர் அருட்தந்தை எட்வின். உலகில் குழந்தைகளுக்காக செயல்படும் அமைப்புகளில் சிறந்த அமைப்பு என, 2009-இல் யுனிசெப் வழங்கும் ‘சான் மெரினோ-யுனிசெப் விருதை’ தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலக் குழந்தைகள் பாராளுமன்றம் வென்றிருக்கிறது. இப்போது, தமிழகத்தில் 6 ஆயிரம் குழந்தைகள் பாராளுமன்றங்கள் இயங்கி வருகின்றன.
சென்ற ஆண்டு, தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி குழந்தைகள் பாராளுமன்றத்தின் நிதி அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது தானே புயலால் இருமாநிலமும் சிதைந்து போயிருந்தது. அதற்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அப்போது என் மனதில் ஒரு திட்டம் உருவானது. அதற்கு ‘ஒன் ருப்பீ கேம்பென்’ எனப் பெயரிட்டேன். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 2 முதல் 8-ஆம் தேதிவரை, ‘ஜா ஆஃப் கிவிங்’ வாரம் கொண்டாடப்படும். அப்போது வசதியுள்ளவர்கள் தங்களிடமிருக்கும் பொருளோ, பணமோ எதுவாக இருந்தாலும் இல்லாதவர்களுக்கு கொடுப்பார்கள். அந்த வாரத்தை நான் இந்த கேம்பெனிற்கு பயன்படுத்திக் கொண்டேன்.ஒருவரிடம் போய் நிவாரண நிதியாக 50 ரூபாய், 100 ரூபாய் கொடுங்கள் என்றால், தர யோசிப்பார்கள். ஆனால் ஒரு ரூபாய் என்றால், மாணவர்களால் கூட, கொடுக்க முடியும். அதுமட்டுமின்றி, ஒவ்வொருவரின் பங்களிப்பும் இதில் இருக்கும். அதன்படி அந்த வாரத்தில், மாநிலம் முழுவதும் உள்ள எங்களது குழந்தைகள் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து தினம் ஒரு ரூபாய் வீதம், 7 நாட்கள் வசூல் செய்து ரூ.7,000 நிதியாகத் திரட்டினேன். அதை இரு மாணவர்களின் படிப்புச் செலவிற்கு கொடுத்தேன். பள்ளி செல்லும் மாணவர்களுக்குத் தேவையான பேப்பர், பேனா, பென்சில் போன்றவற்றை வாங்கிக் கொடுத்திருக்கிறேன். எனது செயல்பாட்டுக்காகத்தான் இந்த ஆண்டிற்கான பிரதமராக என்னைத் தேர்வு செய்தார்கள். அதனால்தான் ஐ.நா. சபை செல்லும் வாய்ப்பும் கிடைத்தது" என்கிறார் அவர்.
பிறக்கும்போதே கண்பார்வையை இழந்தவர் சொர்ணலட்சுமி. இவரது அப்பா துரைக்கண்ணு ரவியும் (தனியார் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் உதவி மேலாளர்), அம்மா லட்சுமி தேவியும் சொர்ணலட்சுமிக்கு தன்னம்பிக்கையையும், உலக அறிவையும் கொடுத்து வளர்த்துள்ளனர். மகளுக்காக தனது வெளிநாட்டுப் பணிகளை உதறிவிட்டு, இங்கேயே இருக்கிறார் அவரது அப்பா. விவேகானந்தரை ரோல்மாடலாகக் கொண்டுள்ள சொர்ணலட்சுமியின் எதிர்கால லட்சியம் ஐ.ஏ.எஸ். ஆகி, மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்பதுதான். கீ போர்டு வாசிப்பது, பாடல் பாடுவது, சதுரங்கம் விளையாடுவது என தனது திறமைகளை வளர்த்துக் கொண்டிருக்கும் இந்தத் தன்னம்பிக்கை லட்சுமி, படிப்பிலும் படுசுட்டி.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...