அனாதை குழந்தைகளின் படிப்புக்கு உதவுவதற்காக, கல்லூரி பேராசிரியர்
ஒருவர், ஊர் ஊராக சென்று, பொது மக்களின் ஷூ, செருப்புகளுக்கு பாலிஷ் போட்டு
நன்கொடை சேகரிக்கிறார்.
சபாரி உடை அணிந்து பாலிஷ் போடும் பணியில் ஈடுபட்ட அவர், "நான் உங்கள்
செருப்புகளை துடைக்கிறேன். நீங்கள் ஏழை குழந்தைகளின் கண்ணீரை துடையுங்கள்"
என்ற வாசகம் அடங்கிய பேனரை வைத்திருந்தார்.
குழந்தைகளின் கல்வி கண் திறக்க நிதி சேகரிப்பது பற்றி அவர் கூறியதாவது:
சிறு வயதிலிருந்தே, மற்றவர்களுக்கு உதவ வேண்டும், என்ற எண்ணம் எனக்கு
உண்டு. சென்னை லயோலா கல்லூரியில், பி.ஏ., தமிழ் படித்த போது,
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதற்காக, பகுதி நேரமாக வேலைகள் பார்த்தேன்.
கேட்டரிங் முதல், கவுரவ ஆசிரியர் பணி என, இருபதுக்கும் மேற்பட்ட பணிகளை
பகுதி நேரமாக செய்து, மூன்று சக்கரசைக்கிள், செயற்கை கால் போன்றவற்றை
வாங்கி, உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து வழங்கினேன்.
கடந்த, 1998 முதல், 2004ம் ஆண்டு வரை, மாற்றுத்திறனாளிக்கான சேவை
செய்தேன். அப்போது, ஆதரவற்ற அனாதை குழந்தைகளுக்கும், சிறப்பான கல்வி
கொடுக்க வேண்டும், என்ற எண்ணம் மேலோங்கியது.
அதையடுத்து, பாடியநல்லூர் மருதுபாண்டியர் நகரிலிருந்த என் தந்தையின்
நிலத்தில், கருணைக் கரங்கள் மற்றும் பள்ளியை துவக்கினேன். தற்போது, ப்ரீ
கேஜி முதல், ஐந்தாவது வகுப்பு வரை, 170 ஆதரவற்ற, அனாதை குழந்தைகள்
படிக்கின்றனர்.
பள்ளியில் பணிபுரியும், எட்டு ஆசிரியர்களுக்கு சம்பளம், மின் கட்டணம்,
பராமரிப்புச் செலவு என, மாதந்தோறும், 20 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது.
நன்கொடை என்று பிரபலங்களிடம் கையேந்துவதை விட, பொதுமக்களின் பங்களிப்பை
பயன்படுத்த வேண்டும், என்று நினைக்கிறேன்.அதனால் தான், பொதுமக்கள் அதிகம்
கூடும் இடங்களில் அமர்ந்து, அவர்களின் ஷூ, செருப்புகளை பாலிஷ் செய்து,
நன்கொடை வசூலிக்கிறேன்.
பாலிஷ் செய்வதற்கு, பொதுமக்கள் கொடுப்பதை வாங்கிகொள்கிறேன். இவ்வாறு,
அவர் கூறினார். அவருடைய உதவும் எண்ணத்துக்கும், உறுதுணையாக இருக்க
நினைப்பவர்கள், 98848 69566 என்ற மொபைல் போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...