Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

காளான்களைப்போல் முளைக்கும் பொறியியல் கல்லூரிகள்: உயர் நீதிமன்றம் அதிருப்தி


            காளான்களைப் போல் முளைக்கும் ஏராளமான பொறியியல் கல்லூரிகளால் பொறியியல் கல்வியின் தரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் சாடியுள்ளது.
 
 
           சென்னை கோடம்பாக்கத்தில் இயங்கி வந்த தனியார் பயிற்சி நிறுவனம் ஒன்று, பொறியியல் பட்டதாரிகளுக்கு சாப்ட்வேர் தொடர்பான பயிற்சி அளித்து, பிரபல நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு ரூ.45 ஆயிரம் முன் பணம் செலுத்த வேண்டும் என்றும், பயிற்சியின் முடிவில் அந்தத் தொகை திருப்பித் தரப்படும் என்றும் விளம்பரம் செய்தது. இதனை நம்பி ஏராளமானோர் அந்த நிறுவனத்தில் சேர்ந்துள்ளனர்.

          ஆனால், பட்டதாரிகளிடம் பணத்தைப் பெற்றுக் கொண்ட பயிற்சி நிறுவன நிர்வாகிகள், நிறுவனத்தை மூடிவிட்டு சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக 139 பட்டதாரிகள் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அந்தப் பயிற்சி நிறுவனத்தின் நிர்வாகி சுப்பிரமணி நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார்.

          இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பொறியியல் பட்டதாரிகளில் ஒருவரான சி.நரேஷ்குமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், பொறியியல் பட்டம் பெற்றும் வேலை கிடைக்காமல் அவதியுறும் பொறியியல் பட்டதாரிகளின் இன்றைய நிலையை இந்த வழக்கு உணர்த்துகிறது என்று கூறியுள்ளார்.

          இது குறித்து அவர் அண்மையில் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியுள்ளதாவது:

          ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பொறியியல் படிப்பை முடித்து வெளியே வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் வேலை அளிப்பதற்கான ஏற்பாடு இங்கு இல்லை.

           தமிழ்நாட்டில் மட்டும் 2012-ம் ஆண்டில் பொறியியல் கல்லூரிகளில் 58 ஆயிரம் இடங்கள் காலியாகவே இருந்தன. இந்த ஆண்டு 60 ஆயிரம் இடங்கள் மாணவர்கள் இல்லாமல் காலியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. நிலைமை இப்படி இருக்கும்போது மேலும் பல புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு இந்த ஆண்டு ஏ.ஐ.சி.டி.இ. அனுமதி அளிக்கவுள்ளது. இதனால் காலி இடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

             ஏ.ஐ.சி.டி.இ. இயந்திரத்தனமாக செயல்பட்டு புதிய கல்லூரிகளுக்கு அனுமதி அளித்து வருவதால் காளான்களைப்போல் கல்லூரிகள் உருவாகின்றன. கல்வியாளர்கள், கொடையாளர்களால் நடத்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் இன்று அரசியல்வாதிகள், வியாபாரிகள், மதத் தலைவர்கள், சினிமா நடிகர்களால் நடத்தப்படுகின்றன. பல கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு பணப் பரிமாற்றம் நடைபெறும் தொழிலாக பொறியியல் கல்லூரிகள் மாறி விட்டன.

               பொறியியல் பட்டதாரிகள் என்பவர்கள் ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களைப் போன்றவர்கள் அல்ல. இந்த நாட்டின் முன்னேற்றத்துக்கான சொத்துகள். ஆனால், இன்று படிப்புக்காக பெரும் தொகையை கல்லூரிகளுக்கு செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதற்காக பெற்றோர் வங்கிகளில் கடன் பெற்று தங்கள் பிள்ளைகளை கல்லூரிகளில் சேர்க்கின்றனர். ஆனால் படிப்பு முடித்து வேலை கிடைக்காததால் மாணவர்களும், பெற்றோர்களும் கடனை அடைக்க முடியாமல் தவிக்கின்றனர். கல்லூரிகளில் அளிக்கப்படும் கல்வியின் தரம் மிகவும் மோசமாக உள்ளது.

          இந்தச் சூழலில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் ஏ.ஐ.சி.டி.இ. ஆகியவை சில கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது.

          1980-ம் ஆண்டு முதல் மாநில வாரியாக பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை, 2000-ம் ஆண்டிலிருந்து மாநிலம் வாரியாக கல்லூரிகளில் நிரப்பப்பட்ட இடங்கள் மற்றும் காலியாக இருந்த இடங்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டும் படிப்பை முடித்து வெளியில் வரும் மாணவர்களின் எண்ணிக்கை, புதிய பொறியியல் கல்லூரிகளுக்கான அனுமதியை ஏ.ஐ.சி.டி.இ. ஏன் நிறுத்தி வைக்கக் கூடாது, மாநிலத்தில் ஏற்கெனவே 525 பொறியியல் கல்லூரிகள் இருக்கும்போது புதிய கல்லூரிகள் வேண்டாம் என்று ஏன் தமிழக அரசு கூறக் கூடாது, பொறியியல் கல்வியின் தற்போதைய நிலையை ஆராய்ந்து, தரத்தை உயர்த்துவதற்காக ஒரு நிபுணர் குழுவை மத்திய அரசு ஏன் அமைக்கக் கூடாது போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் தனது உத்தரவில் கூறியுள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive