ஏற்கெனவே பட்டம் பெற்றவர் இன்னொரு பட்டம்
பெறுவதற்காக ஓராண்டு காலம் மட்டுமே படித்திருந்தால் அந்த ஓராண்டில் பெறும்
பட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு உயர் நீதிமன்றம்
இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஒரு பாடத்தில் மூன்று ஆண்டு காலம் படித்து பட்டம் பெறுபவர்கள், பணி வாய்ப்பு மற்றும் பதவி உயர்வு போன்ற காரணங்களுக்காக இன்னொரு பாடத்தில் பட்டம் பெறும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அத்தகைய கூடுதல் பட்டங்கள் பெறுவதற்காக ஓராண்டு மட்டுமே பயில்வதற்கான வாய்ப்புகளை பல்கலைக்கழகங்கள் வழங்கி வருகின்றன. இந்நிலையில் இந்த ஓராண்டு கால பட்டம் தொடர்பாக சிலர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தார்.
அதில், ஏற்கெனவே
மூன்றாண்டு காலம் படித்து ஒரு பாடத்தில் பட்டம் பெற்றவர், இன்னொரு
பாடத்தில் கூடுதல் பட்டம் பெறுவதற்காக ஓராண்டு காலம் மட்டுமே
படித்திருந்தால், அந்த ஓராண்டில் பெற்ற பட்டம் செல்லாது என்று நீதிபதி
கூறியிருந்தார்.இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி உளுந்தூர்பேட்டையைச்
சேர்ந்த ஆர்.பிரமகுமாரி, ஆர்.விஜயலட்சுமி உள்ளிட்ட சிலர் உயர்
நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். மூன்றாண்டுகள்
படித்து ஒரு பட்டம் பெற்ற பிறகு, ஓராண்டு மட்டுமே படித்து கூடுதல் பட்டம்
பெற யு.ஜி.சி. விதிமுறைகளில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
யு.ஜி.சி.
விதிமுறைகளின்படி ஓராண்டு படித்து ஒருவர் கூடுதல் பட்டம் பெற்றிருந்தால்,
அதே பாடத்தில் முதுநிலைப் பட்டப் படிப்பில் சேர அவருக்கு தகுதியுண்டு.
முதலில் மூன்று ஆண்டு காலம் படிக்கும்போது இடம்பெறும் அதே பாடங்கள்,
கூடுதல் பட்டப் படிப்பிலும் இடம்பெற்றிருந்தால் அந்தப் பாடங்களைப் பயிலத்
தேவையில்லை. இவ்வாறு பெறும் கூடுதல் பட்டத்தை வேலைவாய்ப்புக்காகவும், பதவி
உயர்வுக்காகவும் தனி நீதிபதியின் இந்த தீர்ப்பு வரும் வரை தமிழக அரசு
அனுமதித்து வந்துள்ளது.ஆகவே, ஓராண்டில் பெறும் கூடுதல் பட்டம் செல்லாது
என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில்
அவர்கள் கோரியுள்ளனர்.
இந்த மனு நீதிபதிகள் எலிபி தர்மாராவ்,
எம்.விஜயராகவன் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் புதன்கிழமை
விசாரணைக்கு வந்தது. அப்போது தனி நீதிபதியின் தீர்ப்பை செயல்படுத்த
இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...