அண்ணா பல்கலை திருச்சி மண்டலத்தில் உள்ள , திருச்சி
பாரதிதாசன் தொழில்நுட்ப பயிலகம், அரியலூர், பண்ருட்டி, திருக்குவளை
பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா நேற்று
திருச்சியில் நடந்தது. விழாவில் 1,503 பேருக்கு பட்டங்களை வழங்கிய,
ஏ.ஐ.சி.டி.இ., உறுப்பினர் செயலர் ஐசக் பேசியதாவது:
நம் நாட்டில், மாணவர்களுக்கு அதிக அழுத்தம் இல்லாமல்,
பொறுமையாக படிக்கக் கூடிய கல்வி முறையே உள்ளது. அமெரிக்க கல்வி நிறுவனங்களை
போல், அதிக கெடுபிடி இல்லாத காரணத்தால், அங்கிருந்து பலர் இங்கே கல்வி
கற்க வருகின்றனர்.
நம் நாட்டில் உள்ள அனைத்து தொழில்நுட்ப வளங்களையும்,
ஆசிரியர்கள் கற்பிப்பதற்காக பயன்படுத்துவது கிடையாது. அதனால் தான்
தொழில்நுட்ப கல்வி என்பது இறங்கு முகத்தை சந்தித்து வருகிறது. மனித
வளத்தில் சீனாவிற்கு அடுத்தபடியாக இருந்தும், தொழில்நுட்ப ரீதியிலான
வளர்ச்சியை நாம் அடையாத நிலை உள்ளது.
இஸ்ரேலில் 77 லட்சம் மக்கள் தொகையாக இருந்தும்
தொழில்நுட்பத்தில் பல மடங்கு முன்னேற்றம் கண்டுள்ளது. அங்கு ஆராய்ச்சிகாக
மட்டும், 7 பல்கலைகள் உள்ளன. நம் நாட்டில் ஆராய்ச்சி மேற்கொள்ளும்
பல்கலைகள் இல்லாதது கவலை அளிக்கிறது.
அதேபோல், அனைத்து இடங்களிலும் ஊழல் நிறைந்து காணப்படுகிறது.
இதைக் கட்டுப்படுத்த இளம் பட்டதாரிகள், புதிய திட்டங்கள், ஆலோசனைகளுடன்
முன்வர வேண்டும். நாட்டின் வரலாற்றை இளம் பட்டதாரிகள் மாற்றி அமைக்கும்
வகையில், தைரியத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
தோல்வி ஏற்படும் என்ற அச்சத்தை தவிர்த்து, தைரியத்துடன்
செயல்படும் சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும். மோசமான ஒரு முதலாளிக்கு
கீழ் வேலை செய்ய நேரிட்டாலும், அவரிடமிருந்து நல்ல முதலாளியாக செயல்படுவது
எப்படி? என்பதை கற்றுக் கொள்ள வேண்டும்.
சமுதாயத்தில் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதை தேர்வு
செய்வது இளைய சமுதாயத்தின் கையில் தான் உள்ளது. இளம் பட்டதாரிகள் தொழில்
முனைவோராக உருவாகி, சக வகுப்பு மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்
கொடுக்கும் வகையில், மாணவர்களிடம் ஒற்றுமை இருக்க வேண்டும்.
மாணவர்களுக்கு இந்த சமுதாயம், நல்ல கல்வி, நல்ல பணி,
வாழ்வதற்கு ஏற்ற இடம் உள்பட பல வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
அதனால், அந்த சமுதாயத்திற்கு, சேவையாற்ற வேண்டிய கடமை மாணவர்களுக்கு
உள்ளது. இவ்வாறு ஐசக் பேசினார்.
விழாவிற்கு, சென்னை அண்ணா பல்கலை துணைவேந்தர் காளிராஜ்
தலைமை வகித்தார். 2012-2013ம் ஆண்டில் திருச்சி மண்டலத்தில் பயின்ற 1,865
பேர் பட்டம் பெற தகுதி பெற்றுள்ளனர். இதில் 135 பேர் தர வரிசை பட்டியலில்
இடம்பெற்றுள்ளனர். நேற்று நடந்த விழாவில், 1,503 பேர் பட்டம் பெற்றனர். 24
பேர் தங்க மெடல் பெற தகுதி பெற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...