வரும் கல்வி ஆண்டில், பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், இம்மாதம், 22ம் தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளன. இதற்காக, 2.5 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.
பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி, மும்முரமாக நடந்து வருகின்றன. 8.5 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ள இந்த தேர்வின் முடிவுகள், மே இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக, மே 10ம் தேதி முதல், 15ம் தேதிக்குள் வெளியிடப்படுகின்றன. கடந்த ஆண்டு மட்டும், வழக்கத்திற்கு மாறாக, மே 22ம் தேதி வெளியிடப்பட்டன. பள்ளிகள் திறப்பதில் கால தாமதம் ஏற்பட்டதன் காரணமாக, எல்லாமே தள்ளிப்போயின.
இந்த ஆண்டு அதுபோல் நடக்காது என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, மே 15ம் தேதிக்குள், தேர்வு முடிவை வெளியிட்டுவிடுவோம் என, துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு (ஏ.ஐ.சி.டி.இ.,), நாடு முழுவதும், ஆகஸ்ட் 1ம் தேதி, பொறியியல் வகுப்புகள் துவங்க வேண்டும் என, தெரிவித்துள்ளது. ஆனால், தமிழகத்தில், செப்டம்பர் முதல் தேதி தான், வகுப்புகள் துவங்குகின்றன. ஜூலை இறுதி வரை, கலந்தாய்வு நடப்பது தான், இதற்கு காரணம். ஏ.ஐ.சி.டி.இ., வழிகாட்டுதலின்படி, இந்த ஆண்டு, ஆகஸ்ட் 1ம் தேதியில், முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கும் வகையில், அனைத்து நடவடிக்கைகளும், முன்கூட்டியே எடுக்கப்பட உள்ளன.
2.5 லட்சம் விண்ணப்பங்கள் : கடந்த ஆண்டு, 2 லட்சத்து 28 ஆயிரத்து 964 விண்ணப்பங்கள், விற்பனை ஆகின. இந்த ஆண்டு, கூடுதலாக, 20 ஆயிரம் விண்ணப்பங்கள் வரை, தேவைப்படலாம் என, அண்ணா பல்கலை எதிர்பார்க்கிறது. எனவே, 2.5 லட்சம் விண்ணப்பங்களை அச்சிடப்பட்டுள்ளன.
அண்ணா பல்கலை வட்டாரம் கூறியதாவது: இம்மாதம், 22ம் தேதி முதல், விண்ணப்பங்களை வழங்க திட்டமிட்டுள்ளோம். இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வு முடிவு, ஒருசில நாட்கள், முன்னதாகவே வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், கால அவகாசம் கிடையாது. 22ம் தேதி முதல், மே 15 வரை வழங்கலாம் என, திட்டமிட்டுள்ளோம். எனினும், இந்த கால அட்டவணை, ஒரு சில நாட்கள் முன்னதாகவோ, சில நாட்கள் தள்ளிப்போகவோ நேரிடலாம். மாணவர்கள், விண்ணப்பங்கள் மூலமாகவும், "ஆன்-லைன்' மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இரண்டு லட்சம் இடங்கள் : கடந்த ஆண்டு, கலந்தாய்வு துவங்கிய நேரத்தில், 1.73 லட்சம் இடங்கள், கலந்தாய்வு ஒதுக்கீட்டில் இருந்தன. பின், 30க்கும் மேற்பட்ட புதிய கல்லூரிகளுக்கு, ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி கொடுத்ததன் காரணமாக, கலந்தாய்வு இடங்கள், மேலும் சிறிது அதிகரித்தன. எனினும், 1 லட்சத்து 20 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பின. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பவில்லை.
இந்த ஆண்டு, 2 லட்சம் இடங்கள், கலந்தாய்வு மூலம் நிரப்ப கிடைக்கும் என, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன. வழக்கம்போல், இந்த ஆண்டும், 50 ஆயிரம் இடங்கள் வரை, காலி ஏற்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. கலந்தாய்வு துவங்கியதும், முதலில், அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும், கிண்டி பொறியியல் கல்லூரி மற்றும் பல்கலையின் உறுப்பு கல்லூரிகளில் உள்ள இடங்கள் மள, மள என, நிரம்பி விடுகின்றன.
அதன்பின், சென்னையைச் சுற்றியுள்ள முன்னணி கல்லூரிகளைத் தான், மாணவர்கள் தேர்வு செய்கின்றனர். மாநிலத்தின் கடைகோடிகளில் உள்ள கல்லூரிகள், போதிய உள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் வேலைவாய்ப்பு வசதிகள் இல்லாத கல்லூரிகளை, மாணவர்கள், சீண்டுவதில்லை. இந்த ஆண்டு, கணித தேர்வு, கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இதனால், "சென்டம்' சரியவும் வாய்ப்பு இருப்பதாக, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளதால், "கட்-ஆப்' மதிப்பெண்களும், குறைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...