"பள்ளி தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள் போக்குவரத்து முறை
நவீனப்படுத்தப்படும்" என, கல்வி அமைச்சர் துறை அமைச்சர் வைகை செல்வன்
தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் - பாலகிருஷ்ணன்: தேர்வு விடைத்தாள்கள்,
தனியார் பேருந்து மற்றும் தபால்துறை மூலம் அனுப்பப்படுகிறது. மாணவர்களின்
எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயத்தில், கடைநிலை ஊழியர்களை பயன்படுத்தலாமா;
பொதுத் தேர்தல்களில் பின்பற்றும் முறை போன்று, வினாத்தாள் மற்றும்
விடைத்தாள்கள் கொண்டு செல்லப்பட வேண்டும்.
பலரும் கோரிக்கை: இதே போன்ற கோரிக்கையை, புதிய தமிழகம்
-கிருஷ்ணசாமி, காங்கிரஸ் - பிரின்ஸ், மனித நேய மக்கள் கட்சி -
ஜவாஹிருல்லா, இந்திய கம்யூனிஸ்ட் - குணசேகரன், தி.மு.க., - அன்பழகன்
ஆகியோர் முன்வைத்தனர்.
பள்ளி கல்வி துறை அமைச்சர் வைகை செல்வன் பதிலளித்து பேசியதாவது:
நாமக்கல், காமராஜர் மேல்நிலை பள்ளி, தேர்வு மையத்தில், மார்ச், 3ம் தேதி,
பிளஸ் 2 இயற்பியல் தேர்வு நடந்தது. கல்வி நிறுவன அலுவலக ஊழியர்கள், ஒரு
மதிப்பெண் வினாக்களுக்கான விடைகளை, தேர்வர்களுக்கு காட்ட முயற்சித்தனர்.
இதை அரசின் சிறப்பு பறக்கும் படை தடுத்துள்ளது. இந்த தேர்வு மையத்தில்
தேர்வெழுதிய, அனைத்து மாணவர்களின் விடைத்தாள்களும், அரசு தேர்வுகள்
இயக்கத்திற்கு கொண்டு வரப்பட்டு, தேர்வு துறை அலுவலர்கள் முன்னிலையில்,
மதிப்பீடு செய்யப்படும்.
இத்தேர்வு மையத்தில், அடுத்தடுத்த தேர்வுகள் நடக்க, தடை செய்யப்பட்டு
உள்ளது. தற்காலிகமாக, செல்லப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில், மாணவர்கள்
தேர்வெழுத உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தேர்வுகள் நடந்தன. இதுகுறித்து, முழு
விசாரணை நடத்த, டி.ஜி.பி., யிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதனால்,
பெற்றோர் மற்றும் மாணவர்கள் பயப்பட தேவையில்லை.
வினாத்தாள் குறைபாடு: மார்ச், 28ம் தேதி நடந்த, 10ம்
வகுப்பு தமிழ் இரண்டாம் தாளில், 38வது வினாவிற்கு மாணவர்கள் பதிலளிக்க
முயற்சி செய்தாலே, அதற்குரிய ஐந்து முழு மதிப்பெண்கள் வழங்கப்படும்.
அதேபோல், ஆங்கிலம் இரண்டாம் தாளில், பிரிவு ஒன்றில், வினா எண் 3ல்
கேட்கப்பட்ட வினாக்கான விடை தவறாக எழுதியிருந்தாலும், அதற்குரிய மதிப்பெண்
வழங்க விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு
அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
காணாமல் போனது: விடைத்தாள் கட்டுகள், ரயில்வே மெயில்
சர்வீஸ் மற்றும் பேருந்து வாயிலாக, விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு
அனுப்பி வைக்கப்படுகிறது. இம்முறை, 30 ஆண்டுகளுக்கும் மேலாக
பின்பற்றப்படுகிறது. மலைக்கோட்டை விரைவு ரயில், திருப்பத்தில் திரும்பும்
போது, இரண்டு வினாத்தாள் கட்டுகள் விழுந்துள்ளன.
விரிவான விசாரணைக்கு பின், நான்கு தபால் துறை அலுவலர்கள், "சஸ்பெண்ட்"
செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் சேதமடைந்த, தமிழ் இரண்டாம் தாள், 63
விடைத்தாள்களுக்கு, தமிழ் ஒன்றாம் தாளில் பெற்ற மதிப்பெண்கள் வழங்கப்படும்.
தேர்ச்சிக்குரிய மதிப்பெண் இல்லாத விடைத் தாள்களுக்கும், குறைந்த அளவு
தேர்ச்சிக்குரிய மதிப்பெண்கள் வழங்கப்படும்.
செஞ்சி சத்தியமங்கலம், மேல்பாப்பாம்பாடி மற்றும் ராஜா தேசிங்கு மெட்ரிக்
பள்ளி தேர்வு மையத்தில், தேர்வெழுதிய, 221 மாணவர்களின் விடைத்தாள்கள்
மாயமாகி உள்ளன. குடிபோதையில் இருந்த ஊழியரால், இரண்டு கட்டுகள்
தொலைக்கப்பட்டுள்ளன. இதில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள், வேலையிலிருந்து பணி
நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த இரண்டு சம்பவங்களிலும், தபால் துறையின் அலட்சிய போக்கே காரணம் என
தெரிய வந்துள்ளது. போக்கு வரத்தின் போது சேதமடைந்த மற்றும் காணாமல் போன
விடைத்தாள்களுக்கு, மதிப்பெண் வழங்கப்படும். மாயமாகி போன விடைத்தாளால்
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, மறு தேர்வு நடத்தலாமா என்பதை பரிசீலித்து
வருகிறோம்.
எதிர்காலத்தில், பள்ளி தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்கள் கொண்டு
செல்லும் போக்குவரத்து முறை நவீனப்படுத்தப்படும். இது தொடர்பாக,
முதல்வரிடம் ஆலோசித்து, விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...