டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், குரூப்-2,
குரூப்-4, வி.ஏ.ஓ., ஆகிய தேர்வுகளில், மீண்டும் தமிழ் மொழிக்குரிய
பாடத்திட்டங்கள், சேர்க்கப்பட்டுள்ளன. குரூப்-4, வி.ஏ.ஓ., தேர்வுகளில்
மீண்டும், தமிழில் இருந்து, 100 கேள்விகள் கேட்கப்பட உள்ளன. இதற்கான
அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகிறது.
போட்டித் தேர்வு: தேர்வாணைய தலைவராக நடராஜ் பதவி வகித்தபோது, போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களை, தற்போதைய காலத்திற்கு தகுந்தாற்போல் மாற்றி அமைத்தார்.
பழைய பாடத்திட்டத்தின் கீழ், குரூப்-2 மற்றும் அதிகமான தேர்வர்கள் பங்கேற்கும் வி.ஏ.ஓ., மற்றும் குரூப்-4 தேர்வுகளில், தமிழ் மொழிப் பாடத்தில் இருந்து, அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டு வந்தன.பாடத்திட்டம் மாற்றப்பட்ட போது, குரூப்-2 தேர்வில், தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடத்திட்டம், முற்றிலும் நீக்கப்பட்டன. இதற்கான, 200 கேள்விகளும், பொது அறிவு பாடத்திட்டங்களுக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்டன.
"ஆப்டிடியூட்" என்ற புதிய பகுதியும், இதில் சேர்க்கப்பட்டது.பல லட்சக்கணக்கான தேர்வர் பங்கேற்கும், குரூப்-4 தேர்வில், மொழித்தாள் பகுதி கேள்விகள் எண்ணிக்கை, 100ல் இருந்து, 50 ஆக குறைக்கப்பட்டது. குறைக்கப்பட்ட கேள்விகள், "ஆப்டிடியூட்" பகுதிக்கு ஒதுக்கப்பட்டது. இதேபோல், வி.ஏ.ஓ., தேர்விலும், மொழிப்பாட கேள்விகள் (தமிழ் அல்லது ஆங்கிலம்), 100ல் இருந்து, 30 ஆக குறைக்கப்பட்டன.
புதிதாக, கிராம நிர்வாகம் மற்றும், "ஆப்டிடியூட்" பகுதிகள் சேர்க்கப்பட்டன. தேர்வாணையம் மேற்கொண்ட இந்த புதிய நடவடிக்கைக்கு, கருணாநிதி, ராமதாஸ் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்வில், தமிழ் மொழிக்கான முக்கியத்துவத்தை, குறைக்கக் கூடாது என்றும், இதனால், கிராமப்புற தேர்வர்கள், கடுமையாக பாதிக்கப்படுவர் என்றும், அவர்கள் தெரிவித்தனர்.
ஆலோசனை: இந்நிலையில், கடந்த மாதம் 27ம் தேதி, சட்டசபையில், கல்வி அமைச்சர் வைகைச் செல்வன் பேசுகையில், "தேர்வாணைய தேர்வுகளில், மீண்டும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக, தேர்வாணையத்திற்கு கடிதம் எழுதி உள்ளோம்" என, தெரிவித்தார்.
"அரசின் ஆலோசனை குறித்து, பரிசீலனை செய்து வருகிறோம்" என, தேர்வாணைய தலைவர் நவநீதகிருஷ்ணனும், அப்போது தெரிவித்திருந்தார். கடந்த மாத இறுதியில், இது தொடர்பாக, தேர்வாணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் நடந்த கூட்டத்திலும், தமிழ் பாடத்திற்கு, பழையபடி உரிய முக்கியத்துவம் அளிப்பது குறித்து, விவாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தேர்வாணைய வட்டாரங்கள் கூறுகையில், "பழைய பாடத்திட்டத்தில், மொழிப்பாடத் திட்டங்களுக்கு, எத்தகைய முக்கியத்துவம், எத்தனை கேள்விகள் இருந்தனவோ, அவற்றை, அப்படியே மீண்டும் சேர்க்க, ஆலோசிக்கப்பட்டு உள்ளது. எனினும், அடுத்த வாரத்தில் நடக்கும் மற்றொரு கூட்டத்தில், இறுதி முடிவு எடுக்கப்பட்டு, உடனடியாக அறிவிக்கப்படும்" என தெரிவித்தன.
மனம் மாறியது ஏன்?: பழைய பாடத்திட்டங்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என, பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்தது குறித்து, தேர்வாணைய முன்னாள் தலைவர் நடராஜ் சிறப்பு பேட்டி, "தினமலர்" நாளிதழில், மார்ச், 20ம் தேதி வெளியானது.
அப்போது அவர் கூறுகையில்,"வி.ஏ.ஓ., பணிக்குச் செல்பவர்களுக்கு, தமிழ் இலக்கணம் மிகவும் அவசியமா; அல்லது, கிராம நிர்வாகத்தைப் பற்றியும், ஆறு, ஏரிகள், நில அமைப்புகள் ஆகியவை குறித்து அறிந்துகொள்ள வேண்டியது முக்கியமா?&' என, கேள்வி எழுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வி.ஏ.ஓ., பணிக்கு வருபவர்கள், கிராம நிர்வாகத்திறனை பெறுவது, மிகவும் அவசியம். இதற்காகத் தான், புதிய பாடத்திட்ட பகுதி சேர்க்கப்பட்டது. அதுவும், தமிழ் வழியில் தான் சேர்க்கப்பட்டன.மேலும், புதிய பாடத்திட்டம் குறித்து, தமிழக அரசிடம் ஆலோசிக்காமல், நடராஜ் வெளியிட்டு இருக்க மாட்டார்.
அப்படியிருக்கும்போது, அப்போது அனுமதி அளித்த தமிழக அரசு, இப்போது திடீரென, மனம் மாறியது ஏன்? "தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் இல்லை" என, அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும், புதிய பாடத்திட்டம், கிராமப்புற படித்த இளைஞர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தினால், அது, அரசியல் ரீதியாக, தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சம் தான், தமிழக அரசு, பின்வாங்கியதற்கு காரணம் என, கூறப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...