Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு குளறுபடிகளை நீக்க என்ன வழி?


           பாதிப்புகளை சீர்செய்ய, அரசு பல நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், எதிர்காலத்தில், இதுபோல நடக்காமல் இருக்க, தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் வேண்டும் என, கல்வியாளர்கள் குரல் கொடுக்கின்றனர். அவர்களின் கருத்துக்கள் இதோ:
 
 
          அனந்த கிருஷ்ணன், முன்னாள் துணைவேந்தர், அண்ணா பல்கலை: தேர்வு முறைகளில், சீர்திருத்தங்கள் கொண்டு வந்தால் தான், இதுபோன்ற குளறுபடிகளை முற்றிலும் களைய முடியும். தற்போது, பள்ளிக் கல்வித் துறையில், தேர்வுகளை நடத்த தனித் துறை உள்ளது. இத்துறையை, தனி தேர்வு ஆணையமாக மாற்றவேண்டும்.

             தேர்வு நடத்துவதற்கு, உரிய பயிற்சிகளை, ஆணையத்தின் அதிகாரிகள், ஊழியர்களுக்கு அளிக்க வேண்டும். அரசியல் கலப்பு இல்லாத, உயர்ந்த பட்ச ஆணையமாக, தேர்வு ஆணையம் இருக்க வேண்டும். தற்போதுள்ள, தேர்வு துறை அதிகாரிகளின் கவனக்குறைவு, அலட்சிய போக்குகள், மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்குகிறது.

            பொதுத் தேர்வு என்பது, இன்றைய போட்டி உலகில், மிக முக்கியமான ஒன்று. இளைஞர்களின் எதிர்காலத்தை, நிர்ணயிக்கும் நிலையில், பொதுத் தேர்வுகள் அமைந்துள்ளன. கஷ்டப்பட்டு, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர். மாணவர்களோடு, பெற்றோரும் சேர்ந்து மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.

            இந்நிலையில், பொதுத் தேர்வுகளை மிகுந்த எச்சரிக்கையுடன் நடத்த வேண்டும். அதற்கு, தனி ஆணையம் மிக முக்கியமானது.மேலும், வினாத் தாள்கள் அமைப்பு முறை, விடை அளிக்கும் முறை ஆகியவற்றிலும் மாற்றங்கள் தேவை. இதோடு, விடைத் தாள் திருத்தும் முறையிலும் மாற்றங்கள் அவசியம். விடைகளை, ஓரிரு ஆசிரியர்களைக் கொண்டு தயார் செய்யாமல், பல ஆசிரியர்களிடம் விடைகளைப் பெற்று, பொதுவான விடைகளை உருவாக்க வேண்டும்.

              இவற்றை, மேலெழுந்தவாரியாக செய்யாமல், அடிப்படையிலிருந்து செய்யவேண்டும். ஆன்-லைன் போன்ற, நவீன தேர்வு முறைகளை நடத்தலாம் என, ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், அதற்கான வசதிகள் மற்றும் கணினி அறிவு, மாணவர்கள் மத்தியில் இல்லை.

              ஜெயபிரகாஷ் காந்தி, கல்வியாளர்: பொதுத்தேர்வு வினா தாள்கள் மற்றும் விடைத்தாள்களை தேர்வு மையங்களுக்கு எடுத்துச் செல்ல, வங்கிகளுக்கு பணம் கொண்டு செல்லும் வாகனங்களைப் போல சிறப்பு வாகனங்களை பயன்படுத்த வேண்டும். இதற்கு, போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

                  தபால் மூலம், வினா மற்றும் விடைத்தாள்கள் அனுப்புவதை முழுமையாக நிறுத்த வேண்டும். விடைத் தாள்களை, "ஸ்கேன்" செய்து, ஆசிரியர்களுக்கு அளித்து, திருத்தும் முறையை, அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்தது. ஆனால், இதற்கு கூடுதல் காலம் பிடிப்பதோடு, செலவும் அதிகரிக்கிறது. "ஸ்கேன்" செய்யும் விடைத் தாள்களை திருத்துவதிலும், ஆசிரியர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இதனால், இம்முறையை அண்ணா பல்கலைக் கழகம் கைவிட்டது.

            இந்நிலையில், இப்போதைக்கு, வினா மற்றும் விடைத் தாள்களை,  பாதுகாப்பாக கொண்டு செல்ல, சிறப்பு வாகனங்களை அமர்த்துவது தான், தேர்வுத்துறை முன் உள்ள, உடனடித் தீர்வு. காணாமல் போன, கிழிந்துபோன விடைத் தாள்களுக்காக, உடனடியாகத் தேர்வு நடத்த முடியாது.

                   ஒரு தேர்வு நடத்த, 21 நாள்களுக்கு முன், "நோட்டீஸ்" அளிக்க வேண்டும். எனவே, முதல் தாளின் மதிப்பெண்ணை இரண்டாம் தாளுக்கு அளிப்பதாக, அரசு எடுத்துள்ள முடிவை, தற்போதைக்கு வரவேற்று தான் ஆக வேண்டும். தேர்வு முறையில், நவீன முறைகளை அறிமுகம் செய்வதன் மூலம், இதுபோன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்படுத்த முடியும் என்கின்றனர்.

             ஆனால், "ஆம்", "இல்லை" போன்ற கேள்விகளுக்கும், "டிக்" செய்யும் கேள்விகளுக்கு வேண்டுமானால், ஆன்-லைனில் தேர்வு எழுத முடியும். கட்டுரைகள் போன்ற நீண்ட பதில்களை எழுதும் தேர்வுகளை, ஆன்-லைனில் எழுத முடியாது.

              இளங்கோவன், தலைவர், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கம்: பொதுத் தேர்வுகளில் நடந்து வரும் குளறுபடிகளுக்கு, முழுக்க முழுக்க கல்வித்துறை தான் காரணம். தேர்வு முறைகளில் நடக்கும் ஊழல்களால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. காணாமல் போன, கிழிந்து போன விடைத்தாள்களுக்கு, மற்றொரு தேர்வின் மதிப்பெண்ணை அளிப்பதாக, அரசு அறிவித்துள்ளது.

                  ஒரு தாழ்த்தப்பட்ட மாணவன், 10ம் வகுப்புத் தேர்வில், மாவட்ட அளவில் முதலிடம் பெற்றால், பிளஸ் 2 படிப்பை, அவர் எந்த பள்ளியில் படிக்க விரும்புகிறாரோ, அங்கு படிக்கலாம். கல்விச் செலவை அரசே ஏற்கிறது. இந்நிலையில், காணாமல் போன, கிழிந்துபோன விடைத் தாள்களால், தாழ்த்தப்பட்ட மாணவர் பாதிக்கப்பட்டால், யார் பொறுப்பேற்பது? தேர்வு மையங்கள் அமைப்பதில், பெரும் லஞ்சம் விளையாடுகிறது.

               தனியார் பள்ளிகளின் வசதிக்கேற்ப, பணம் பெற்றுக் கொண்டு, தேர்வு மையங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதில், அரசியல் தலையீடு மிக அதிகம். ஒரு மையத்தின் விடைத்தாளை, தபால் மூலம் அனுப்புவதால், பெரும் செலவு அரசுக்கு ஏற்படுகிறது. இத்தொகையில், தனி வாகனம் அமைத்து, ஒவ்வொரு மையத்திலிருந்தும், விடைத்தாள்களைத் திரட்டி, தமிழகத்தில், எந்த மூலையில் விடைத்தாள் திருத்தும்
மையம் அமைக்கப்பட்டாலும், கொண்டு செல்ல முடியும். பாதுகாப்பாகவும்
இருக்கும்.

              இந்நிலையில், தேர்வு முறையில் உள்ள, பழங்காலத்து நடைமுறைகளை மாற்றி, அடிப்படை சீர்திருத்தங்களை கொண்டு வரவேண்டும். தேர்வு மையங்கள் அமைப்பதில், கடும் விதிகளை பின்பற்ற வேண்டும். எம்.பி., - எம்.எல்.ஏ., உள்ளாட்சி தேர்தல்களை எப்படி நடத்துகிறார்களோ, அதுபோல, பொதுத்தேர்வுகளையும் நடத்த வேண்டும்.

              பிரின்ஸ் கஜேந்திர பாபு,பொது செயலர், பொது பள்ளிக்கான மாணவர் மேடை: 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், விடைத் தாள்கள் காணாமல் போனது, கிழிந்து போனது ஆகிய காரணங்களுக்காக, ஒரு தேர்வின் மதிப்பெண்ணை, காணாமல் போன விடைத் தாளுக்கான தேர்வுக்கு அளிப்பதை ஏற்க முடியாது. மறு தேர்வு நடத்த, பள்ளிக் கல்வித் துறைக்கு இருக்கும் சோம்பேறித் தனத்தையே இது காட்டுகிறது.

             இலக்கியம் தொடர்பான பாடத்தில், ஒரு மாணவன் ஆர்வமுடன் இருப்பான். இலக்கணம் தொடர்பான பாடம் அவனுக்கு எட்டிக்காயாகக் கூட இருக்கலாம். இந்நிலையில், ஒரு தேர்வின் மதிப்பெண்ணைக் கொண்டு, அம்மாணவனுக்கு அடுத்த தேர்வுக்கு மதிப்பெண் வழங்குவது, மாணவனின் ஆர்வத்தை, சீர்குலைக்கும். மேலும், மோசடியாக தேர்வில் வெற்றி பெறவும் இது வழி வகுக்கும்.

               தேர்வில், இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது, அதுகுறித்து தெளிவான முடிவை எடுக்க, பள்ளிக் கல்வித் துறையில், ஆய்வுத் துறை ஒன்று அவசியமாகிது. இத்துறையை உடனடியாக, அரசு ஏற்படுத்த வேண்டும். மேலும், விடைத் தாள்களை தபால் மூலம் அனுப்புவதைக் கைவிட்டு, ஒவ்வொரு தேர்வு மையத்திலிருந்து, விடைத் தாளை சேகரித்து, விடைத்தாள் திருத்தும் மையத்துக்குக் கொண்டு செல்ல, பொறுப்பாளர் ஒருவரை, அரசு நியமிக்க வேண்டும்.

              இதன்மூலம், விடைத் தாளை பாதுகாப்பாக கையாள முடியும். தற்போது நடந்துள்ள குளறுபடிகளுக்கு, தேர்வு முறையில், நவீன முறையை புகுத்தலாம் என்றால், அதற்கான கட்டமைப்பு வசதிகள் பள்ளிகளில் இல்லை. குறிப்பாக, ஆன்-லைன் தேர்வை எழுத, மாணவர்களுக்கு, கணினி அறிவும் இல்லை. இந்த இரண்டையும், ஆரம்பக் கல்வி முதல் மாணவர்களுக்கு அளித்தால் மட்டுமே, தேர்வில் நவீன முறையை புகுத்த முடியும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive