அரசுத் தேர்வுகளில் முதலிடம் பெறும் மாணவர்களுக்குப் பரிசு வழங்குவதும், பாராட்டுவதும் மற்ற மாணவர்களை ஊக்கப்படுத்தும் ஓர் அணுகுமுறையாக இருக்கலாம். தொழிற் கல்லூரிகளில் இடம் கிடைக்க பள்ளித் தேர்வில் அதிகபட்ச மதிப்பெண் பெறவேண்டும் என்ற நிலை இருப்பதால் அவற்றில் இடம் பிடிக்க நினைப்பவர்களுக்கு இந்த அணுகுமுறையால் ஊக்கம் கிடைக்கக் கூடும்.
ஆனால், எல்லா மாணவர்களையும் இந்தப் போட்டியில் இணைத்து, பந்தயக் குதிரைகள் போல் மாணவர்களை நடத்துவது சரியா என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக, அரசுப் பள்ளிகள் இந்த நோக்கத்திற்காக இயங்குவது எப்படிச் சரியாகும்?
அதிக மதிப்பெண்களுக்காக மாணவர்களை ஓர் எந்திரம் போல் இயங்க வைக்கும் போக்கு தனியார் பள்ளிகளில் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது. இதே நடைமுறையை அரசுப் பள்ளிகளிலும் பின்பற்றினால் கல்வியின் அடிப்படை நோக்கம் பாழ்பட்டுவிடும். அரசுப் பள்ளிகள் என்பது ஏழை எளிய மக்களின் குழந்தைகளும் கல்வி பெற வேண்டும் என்பதற்காக நடத்தப்படுபவை.
100 சதவீத தேர்ச்சி என்றொரு போட்டியும் இருக்கிறது. முதல் போட்டியாவது, மேற்படிப்புக்கு உரிய இடம் பெற்றுத்தரும் போட்டியாகக் கருத இடமிருக்கிறது. ஆனால், இந்த 100 சதவீத தேர்ச்சி காட்டும் உத்வேகத்தின் பின்னணியில் ஒரு சோகம் அல்லது தீண்டாமை இருப்பதை உணர முடியும்.
நிச்சயமாக தேர்ச்சி பெறுவார்கள் என்று கருதப்படும் மாணவர்களை மட்டும் தேர்வு எழுத வைக்கும் நடைமுறை இது. இவ்வாறு செய்வதால் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் பாஸ் ஆகி, 100 சதவீத தேர்ச்சி கிடைத்துவிடும். பள்ளிக்கு இதன் மூலம் நற்பெயர் கிடைத்துவிடும். ஆனால், தேர்வு எழுதாமல் நிறுத்தப்பட்ட மாணவர்கள் கதி என்னாவது?
இவர்களில் பலர் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்களாக இருக்கக்கூடும். குறிப்பாக, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களாகவே அதிகம் இருக்க வாய்ப்பு இருக்கிறது. இவர்களில் சிலர் வீட்டு வேலை அல்லது தோட்ட வேலை பார்த்துவிட்டு பள்ளிக்குத் தாமதமாக வரக் கூடியவர்களாகவும், புத்தகம், நோட்டு வாங்க இயலாதவர்களாகவும் இருக்கக்கூடும்.
இவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தி படிக்க இயலாமல் குறைந்த மதிப்பெண் எடுப்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் தேர்வில் கட்டாயம் பாஸ் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டால், அவர்களின் கொஞ்ச நம்பிக்கையும் பறிக்கப்பட்டு விடுகிறது என்பதே உண்மை.
இது ஒருபுறம் இருக்க, மதிப்பெண் என்ற ஒரே தகுதிக்காக மாணவர்களைத் தயார்படுத்த பள்ளிகள் முற்படும்போது, விளையாட்டு போன்ற மற்ற திறமைகளை வளர்க்க வேண்டும் என்ற சிந்தனை மறைந்து விடுகிறது. படிப்பு படிப்பு என்ற மனோநிலையில் இருந்து இன்றைய பெற்றோரும் மாறவில்லை.
ஒரு தொழிற்சாலையில் தயாராகும் ரோபோக்கள் போன்று மாணவர்கள் வளர்க்கப்பட்டால் அவர்கள் தொழிற்சாலைகளில் பணியாற்ற மட்டுமே தகுதியுடையவர்களாக மாற்றப்படுகின்றனரே தவிர, வேறு எதையும் அவர்களிடம் எதிர்பார்க்க இயலாது. அதாவது, மாணவர்களை சகல திறன் கொண்டவர்களாக உருவாக்குவதை விடுத்து பன்னாட்டு நிறுவனங்களில் கூலி ஆள்களாக பணியமர்த்தக் கூடியவர்களாக உருவாக்குகிறது இந்த மதிப்பெண் போட்டி. இதனால் தேசத்தின் எதிர்காலம் கேள்விக் குறியாவதைத் தடுக்க இயலாது. இதில் இருந்து மாற்றம் பெறுவதற்கான தொலை நோக்குப்பார்வை தேவை.
படிப்பு மதிப்பெண் இவை மட்டும் பிரதானம் என்று கருதப்படுவதால்தான், ஒலிம்பிக் போன்ற உலகளாவிய போட்டிகளில் நம்மவர்கள் மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்து கொண்டிருக்கிறார்கள். விளையாட்டு போனற துறைகளில் ஒரு சில வசதி படைத்தவர்கள் மட்டும் புகழ்பெறும் நிலைக்கும் இதுதான் காரணம். எதிர்காலச் சந்ததியினர் மேல்நாட்டுக் கலாசாரத்தில் மூழ்கி ஒழுக்கம் கெட்டுத் திரிவதற்கும் நாமே காரணமாகி விடுகிறோம். இந்த நிலையை மாற்ற அரசுகள் யோசிக்க வேண்டும்.
ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒவ்வொரு குடும்பத்திலும் சில அடிப்படைத் தொழில்கள் இருக்கின்றன. ஒரு தலைமுறை செய்யும் தொழிலை அவர்களின் சந்ததியினரும் நவீன தொழில்நுட்பங்களைச் சேர்த்து செய்து அதை ஆலமரம் போல் உருவாக்கலாம். ஆனால், பள்ளிகளில் இந்தச் சிந்தனை சிறிதும் இல்லாததோடு, ஒழுக்கம் வலியறுத்தப்படாததால் பகட்டு வாழ்க்கைக்கு ஆசைப்படுபவர்களாக மாணவர்கள் மாறுகின்றனர். இதன் விளைவு, மூதாதையரின் தொழிலைப் புறக்கணித்து குறுகிய காலத்தில் சம்பாதிக்கும் வழியைத் தேடிச் சென்று பழி பாவங்களுக்கு ஆளாகின்றனர்.
இதனால் ஒரு தலைமுறை செய்த தொழில் அந்தத் தலைமுறையுடன் முடிவுக்கு வருவது தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. இந் நிலை மாற, தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் தங்கள் குடும்பத் தொழிலை நவீன காலத்துக்குத் தகுந்தாற்போன்று விருத்தி செய்யக் கூடியவர்களாகவும் மாணவர்கள் மாற்றப்பட வேண்டும். அதற்கான உத்திகள் வகுக்கப்பட வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...