அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைக்காமல்
இருக்க மாணவர்களின் எண்ணிக்கை உயர்த்தி சொல்லப்படுகிறதா என்பது குறித்து
பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மதுரை
ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்தூரை யூனியன் முதுகுளம் அரசு உதவி பெறும்
நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் உமாபதி(வயது 33). இவர்,
மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:–
நான், கடந்த 1998–ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரில் உள்ள
கலைமகள் வித்யாசாலை ஆரம்ப பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக நியமிக்கப்பட்டேன்.
அந்த பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை விட கூடுதல் ஆசிரியர்கள்
இருப்பதாக கூறி, என்னை 2006–ம் ஆண்டு முதுகுளம் பள்ளிக்கு இடமாறுதல்
செய்தனர். இந்த நிலையில், முதுகுளம் பள்ளியில் கூடுதல் ஆசிரியர்கள் பணியில்
இருப்பது தெரியவந்தது.
இடமாறுதல்
இதனால் என்னை மீண்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு அரசு
உதவி பெறும் பள்ளிக்கு மாறுதல் செய்யும்படி தொடக்கக்கல்வி இயக்குநருக்கு
விண்ணப்பித்தேன். சாத்தான்குளம் தாலுகா விஜயராமபுரத்தில் உள்ள முத்தாரம்மன்
இந்து நடுநிலைப்பள்ளியில் காலிப்பணியிடம் இருக்கிறது. அந்த பள்ளியில்
என்னை நியமிக்க எந்தவித ஆட்சேபமும் இல்லை என்று அந்த பள்ளியின் மேலாளர்
கடிதம் அளித்துள்ளார்.
இதை சுட்டிக்காட்டி மீண்டும் விண்ணப்பித்த போது, நான் தற்போது பணியாற்றி
வரும் முதுகுளம் பள்ளியில் கூடுதல் ஆசிரியர்கள் இல்லை என்று
தொடக்கக்கல்வித்துறை இயக்குநர் 11.10.2012 அன்று தெரிவித்துள்ளார்.
முரண்பாடு உள்ளது
அரியலூர் மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி 25.5.2012 அன்று அளித்த
அறிக்கையின் அடிப்படையிலேயே முதுகுளத்தூர் பள்ளியில் காலிப் பணியிடம் இல்லை
என்று தொடக்கக்கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு
முன்பு அனுப்பிய கடிதத்தில் முதுகுளத்தூர் பள்ளியில் ஒரு பணியிடம் கூடுதலாக
இருப்பதாக தொடக்க கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.
மாவட்ட தொடக்க கல்வி அதிகாரியின் கடிதத்தில் முரண்பாடு உள்ளது. எனவே,
முதுகுளத்தூர் பள்ளியில் கூடுதல் ஆசிரியர்கள் இல்லை என்ற
தொடக்கக்கல்வித்துறை இயக்குநரின் உத்தரவை ரத்து செய்து விட்டு, என்னை
தூத்துக்குடி மாவட்டத்துக்கு இடமாறுதல் செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
ஆய்வு நடத்த உத்தரவு
இந்த மனு நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் வக்கீல் ஜெ.அசோக் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர்,
“ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைத்து விடக்கூடாது என்பதற்காக பள்ளி
நிர்வாகம் மாணவர்களின் உண்மையான எண்ணிக்கையை மறைத்து கூடுதலாக கூறுகிறது“
என்றார்.
மனுவை விசாரித்த நீதிபதி, முதுகுளம் பள்ளியில் தற்போது எத்தனை மாணவர்கள்
படித்து வருகிறார்கள் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள்
ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...