தேர்வுத் துறையையும், இதனோடு சம்பந்தப்பட்ட
அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தையும் (டேட்டா சென்டர்) வலுப்படுத்த, தமிழக
அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரு துறை வட்டாரங்களும்
எதிர்பார்க்கின்றன.
இல்லை எனில், வரும் ஆண்டுகளில், இந்த இரு துறைகளிலும், பெரிய குளறுபடிகளும், குழப்பங்களும் ஏற்பட்டுவிடும் என, துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தேர்வுத்துறை இயக்குனரகம், 1975ல் ஏற்படுத்தப்பட்டபோது, எத்தனை பணியிடங்கள் ஒதுக்கப்பட்டதோ, அதே பணியிடங்கள் தான், இன்றைக்கும் இருக்கின்றன. இயக்குனரகம் மற்றும் மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள் சேர்த்து, ஒட்டுமொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 500. இதில், 120 பணியிடங்கள், காலியாக இருக்கின்றன.
கடந்த 98ல், பிளஸ் 2 தேர்வை, 3.63 லட்சம் மாணவர்களும், 10ம் வகுப்பு தேர்வை, ஐந்து லட்சம் பேரும் எழுதினர். ஆனால், நடப்பு ஆண்டில், பிளஸ் 2 தேர்வை, 8.5 லட்சம் பேரும், 10ம் வகுப்பு தேர்வை, 11 லட்சம் பேரும் எழுதுகின்றனர். பிளஸ் 2 மாணவர் எண்ணிக்கை, மூன்று மடங்கும், 10ம் வகுப்பு மாணவர் எண்ணிக்கை, இரு மடங்கையும் தாண்டிவிட்டது.
மேலும், ஆசிரியர் பயிற்சி தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, எட்டாம் வகுப்பு தனித்தேர்வு என, ஆண்டுக்கு, 20க்கும் மேற்பட்ட தேர்வுகளை, தேர்வுத்துறை நடத்தி வருகிறது. அனைத்து தேர்வுப் பணிகளும், ஆண்டு முழுவதும் அடுத்தடுத்து மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு ஏற்ப, துறையை வலுப்படுத்தவோ, காலி இடங்களை நிரப்பவோ, கூடுதலாக புதிய பணியிடங்களை ஏற்படுத்தவோ, தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது, துறை அலுவலர்களின் குற்றச்சாட்டு.
கடந்த சில ஆண்டுகளாக, தொடர்ச்சியாக ஏற்படும் குளறுபடிகள் காரணமாக, தேர்வுத்துறை திணறி வருவதாகவும், அவர்கள் கூறுகின்றனர். கடந்த 28ம் தேதி நடந்த 10ம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் தேர்வில், ஐந்து மதிப்பெண்களுக்கு உரிய விடைகளை நிரப்ப தேவையான வங்கி செலானை, மாணவர்களுக்கு வழங்காதது, இதுவரை நடந்த குளறுபடிகளில், உச்சகட்டமாக உள்ளது.
கேள்வித்தாள் அச்சடிப்பது, வினியோகம் உள்ளிட்ட பணிகளை, வேறு யாரிடமும் ஒப்படைக்காமல், இயக்குனரே, நேரடியாக கவனிப்பதாக, துறை வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால், "தனக்கும் எதுவும் தெரியவில்லை; இனிமேல் தான் விசாரிக்க வேண்டும்" என, இயக்குனர் வசுந்தராதேவி கூறுவது, விந்தையாக உள்ளது.
தேர்வுத்துறை நிலை இப்படி என்றால், இந்த துறையோடு சம்பந்தப்பட்ட, டேட்டா சென்டரின் நிலைமை, இன்னும் மோசமாக உள்ளது. இந்த மையம், நிதித்துறையின் கீழ் இருக்கிறது. ஆனால், கல்வித்துறை பணிகளை செய்து வருகிறது. "தம் துறை பணிகள் நடக்காதபோது, நாம் ஏன் கண்டுகொள்ள வேண்டும்" என்ற மன நிலையில், நிதித்துறையும், "பள்ளி கல்வி துறையின் கீழ் செயல்படாத போது, நாம் என்ன செய்ய முடியும்" என்ற நிலையில், கல்வித்துறையும் உள்ளன.
இந்த பிரச்சனையை தீர்க்க, டேட்டா சென்டரை, பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டுவந்து, இந்த மையத்தை வலுப்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, துறை அலுவலர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த மையத்தில், வெறும் ஏழு டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் தான் உள்ளனர். 40க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலி. தகவல்களை தொகுத்து, மேற்பார்வையிடும் அதிகாரிகள் நிலையில், மூன்று பணியிடங்கள் காலி. இந்த பதவியில் கூட, ஒப்பந்த அடிப்படையில், பணி நியமனம் செய்துள்ளனர்.
கம்ப்யூட்டர்களும், தொழில்நுட்பங்களும், மிக, மிக பழமையானவை என, துறை ஊழியர்கள் வேதனைப்படுகின்றனர். நடப்பு ஆண்டில், மதிப்பெண்களை தொகுக்கும் பணிக்காக, 70 பேரை, ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்துள்ளனர். ஒரு மதிப்பெண் சான்றிதழுக்கு, ஒரு ரூபாய் என்ற வீதத்தில், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வகையில், 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக, டேட்டா சென்டர் செலவழிக்க உள்ளது. மாணவர்களின் மதிப்பெண்களை தொகுக்கும் பணியில், தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்வது, நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்குமா என, தெரியவில்லை.
டி.என்.பி.எஸ்.சி.,-டி.ஆர்.பி., போன்ற அமைப்புகள், விடைத்தாள்களை, "ஸ்கேன்" செய்து, நவீன முறையில், விடைத்தாள்களை மதிப்பீடு செய்து, மிக விரைவாக, தேர்வு முடிவுகளை வெளியிடுகின்றன. அதேபோன்ற தொழில்நுட்பத்தை, தேர்வுத்துறையிலும் புகுத்த வேண்டும் என, துறை அலுவலர்கள் வலியுறுத்துகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...