Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அனைத்து வசதிகளையும் கொண்ட அதிசய கிராமம் கங்கதேவி பள்ளி


               ஆந்திராவில், ஒரு அதிசய கிராமம் உள்ளது. அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன், 24 மணி நேர மின் வினியோகத்துடன், சுத்தம், சுகாதாரத்துடன் விளங்கும் இந்த கிராமம், நாட்டின் முன்னணி கிராமங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பல விருதுகளைப் பெற்றுள்ள இந்த கிராமத்தின் தலைவர், சந்திர மவுலி, நேபாள நாட்டின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.


             ஆந்திர மாநில தலைநகர், ஐதராபாத்திலிருந்து, 200 கி.மீ.,யில் உள்ளது, கங்கதேவி பள்ளி. வாரங்கல் மாவட்டத்தில் உள்ள, இந்த கிராமம், சில ஆண்டுகளுக்கு முன் வரை, பிற கிராமங்களைப் போலத் தான் இருந்தது. அதற்குப் பிறகு, தனக்குத் தானே மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டதால், இப்போது, நாட்டின் முன்னணி கிராமமாக திகழ்கிறது.

               மொத்தமே, 1,300 பேர்தான்: இந்த கிராமத்தில், 1,300 பேர் தான் வசிக்கின்றனர்; அவர்கள் அனை வரும் கல்வியறிவு பெற்றவர்கள். தெருவின் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை, விஞ்ஞான பூர்வமாக சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் வசதி, 24 மணி நேர மின் வசதி, கான்கிரீட் சாலைகள், சாலையோர மரங்கள் என, அதிசய கிராமமாக திகழ்கிறது. இந்த கிராமத்தில், ஒரு குடும்பத்தில் கூட, இரண்டு குழந்தைகளுக்கு மேல் கிடையாது. அனைத்து வீடுகளிலும், சொல்லி வைத்தார் போல், ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைகள் தான். சரியாக காலை, 9:00 மணிக்கு துவங்கும் பள்ளிக்கூடம், மாலை, 5:00 மணிக்கு நிறைவடைகிறது. ஆசிரியர்கள் ஒழுங்காக பள்ளிக்கு வருவது போல, பள்ளிக்கு, "மட்டம்' போடும் மாணவரும், இங்கு கிடையாது. அனைத்து குழந்தைகளுக்கும், நோய் தடுப்பு மருந்து, ஊசி போன்றவை, முறையாக வழங்கப்படுகின்றன. ஆண் - பெண் விகிதாச்சாரமும், சரி சமமாக உள்ளது. ஒவ்வொரு வீட்டுத் தலைவரும், தினமும் உழைக்கிறார்; மாதம் தோறும், குறைந்தபட்சம், 10 ஆயிரம் ரூபாய் சேமிப்பு செய்கிறார். மதுபான கடைகள், அறவே கிடையாது. அனைவருக்கும் ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, முதலுதவி முதல் பெரிய அளவிலான சிகிச்சைகள் அளிப்பதற்கும் வசதி கொண்ட மருத்துவ மையங்கள் என, கனவிலும் எண்ணிப் பார்க்க முடியாத, அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது இந்த கிராமம்.

                       "சாதனை அல்ல': இதன் தலைவர் சந்திர மவுலி இதுகுறித்து கூறும் போது, ""இது தனிப்பட்ட மனிதர்களின் சாதனையல்ல; அனைவரும் ஒன்றாக கலந்து பேசி, முடிவுகள் எடுக்கிறோம்; எடுத்த முடிவுகளை ஒழுக்கமாக பின்பற்றுகிறோம். இந்த வெற்றிக்கு பின், எங்கள் கிராமத்தினர் அனைவரின் உழைப்பும் உள்ளது,'' என்றார். சிறப்பான முறையில் விளங்கும் கிராமத்தின் தலைவராக விளங்கும் சந்திரமவுலியை, நேபாள அரசு, தங்கள் நாட்டுக்கு விருந்தினராக வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கிராமத்தில், 25க்கும் மேற்பட்ட குழுக்கள் உள்ளன. சுகாதாரத்தை மேம்படுத்த ஒரு குழு, குடிநீர் பிரச்னைக்கு மற்றொரு குழு, மருத்துவ வசதிக்கு இன்னொரு குழு, காப்பீடு தொடர்பான பணிகளுக்கு வேறொரு குழு என, ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின், "நிர்மல் கிராம் புரஸ்கார்' உட்பட பல விருதுகளை இந்த கிராமம் பெற்றுள்ளது. இதன் பெருமையை அறிந்து ஏராளமானோர் வருகின்றனர். அதன் மூலம், கிராம வளர்ச்சிக்கு நிதி சேகரிக்கப்படுகிறது.

                     சுற்றிப் பார்க்க ரூ.1,700: கிராமத்தை சுற்றிப் பார்க்க வருபவர்களிடம், 1,700 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இவ்வளவு சிறப்பான அம்சங்களை கொண்டுஇருப்பதால், இக்கிராமத்தினருக்கு, சில இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. விவசாய கடன்களை ஒழுங்காக, மாதம் தோறும் வட்டியுடன் இக்கிராமத்தினர் செலுத்தி விட்டதால், மாநிலத்தில், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட, விவசாயக்கடன் தள்ளுபடி பலன்கள், இக்கிராமத்தினருக்கு கிடைக்காமல் போயிற்று.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive