பிளஸ் 2 தேர்வில், பல்வேறு முறைகேடுகளில்
ஈடுபட்டதாக, 18 மாவட்டங்களில் இருந்து, 289 மாணவர்கள், பறக்கும் படை
குழுவினரிடம் பிடிபட்டுள்ளனர்.
கல்வியில் மிகவும் பின் தங்கியுள்ள,
திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் போன்ற, வட மாவட்டங்களில், தேர்வு
முறைகேடுகள் அதிகம் நடந்துள்ளன. கடந்த
1ம் தேதியில் இருந்து, பிளஸ் 2 தேர்வுகள் நடந்து வருகின்றன. இதுவரை, தமிழ்,
ஆங்கிலம், கணிதம், வேதியியல், கணக்குப் பதிவியல், வணிகவியல், பொருளியல்,
விலங்கியல், உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம் ஆகிய தேர்வுகள்
நடந்துள்ளன. நாளை, 25ம் தேதி, உயிர் வேதியியல் தேர்வும், கம்ப்யூட்டர்
சயின்ஸ் தேர்வும் நடக்கின்றன. 27ம் தேதி, புள்ளியியல் மற்றும் அரசியல்
அறிவியல் தேர்வுகளுடன், பிளஸ் 2 தேர்வுகள், முடிவுக்கு வருகின்றன.
கடந்த
18ம் தேதி வரையிலான தேர்வுகளில், "பிட்' வைத்திருந்தது, விடைத்தாள்
துண்டுகளைப் பார்த்து, விடை எழுதியது, பக்கத்து மாணவரைப் பார்த்து
எழுதியது, விடைத்தாள்களை பரிமாறியபடி, விடைகளை எழுதியது உள்ளிட்ட, பல்வேறு
தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, 289 மாணவர்கள், பறக்கும் படை
குழுவினரிடம் பிடிபட்டுள்ளனர். கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி,
திருவண்ணாமலை, திருவள்ளூர், தருமபுரி, வேலூர் உள்ளிட்ட, 18 மாவட்டங்களில்
தான், தேர்வு முறைகேடுகள் அதிகம் நடந்துள்ளன. திருப்பூர், கன்னியாகுமரி,
தேனி, மதுரை உள்ளிட்ட, 14 மாவட்டங்கள், தேர்வு முறைகேடு பட்டியலில் இடம்
பெறவில்லை.
தேர்வு முறைகேடுகளில், கல்வியில் பின்தங்கியுள்ள வட
மாவட்டங்கள் தான், அதிகம் இடம் பெற்றுள்ளன. அதிகபட்சமாக, திருவண்ணாமலை
மாவட்டத்தில், 130 மாணவர்கள், தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
அரியலூர், 27 மாணவர்களுடன், இரண்டாம் இடத்திலும்; விழுப்புரம், 22 பேருடன்,
மூன்றாம் இடத்திலும் உள்ளன. கல்வி தரத்திற்கு பெயர் பெற்ற சென்னை
மாவட்டமும், 19 மாணவர்களுடன், நான்காம் இடத்தில் இடம் பெற்றுள்ளது;
தூத்துக்குடி மாவட்டத்தில், 14 மாணவர்கள், "பிட்' அடித்ததால், ஐந்தாம்
இடத்தில் உள்ளது. மிகக் குறைவாக, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களில், தலா ஒரு
மாணவர் மட்டுமே, தேர்வுமுறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். பொது தேர்வுகளில்,
ஆண்டுதோறும் முதலிடத்தை வகிக்கும், விருதுநகர் மாவட்டத்திலும், இரு
மாணவர்கள் பிடிபட்டுள்ளனர்.
வட மாவட்டங்கள், தொடர்ந்து கல்வியில் பின்
தங்கியிருப்பதை, இந்த தேர்வு முறைகேடுகள், எடுத்துக் காட்டுகின்றன. ஆண்டு
முழுவதும் படித்த ஒரு பாடத்தில் இருந்து, தேர்ச்சிக்குரிய, 70
மதிப்பெண்களைக் கூட பெற முடியாது என்ற நம்பிக்கையின்மை ஏற்பட்டு,
எப்படியாவது தேர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன், மாணவர்கள்,
முறைகேட்டில் ஈடுபடுகின்றனர். பள்ளி கல்விக்காக, ஆண்டுதோறும், பல ஆயிரம்
கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும், கல்வியில் பின் தங்கியுள்ள மாவட்டங்களை
முன்னேற்றுவதற்கு, கல்வித்துறை, உருப்படியாக, எந்த திட்டங்களையும்
செயல்படுத்தவில்லை என்பதையே, முறைகேடு புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
முந்தைய தி.மு.க., ஆட்சியில், வட மாவட்டங்களில், கல்வி தரத்தை
மேம்படுத்துவதற்காக, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த
நிதியில் எந்த திட்டங்களை செய்தனர், அதனால், என்ன முன்னேற்றம் ஏற்பட்டது
என்பது, அதிகாரிகளுக்கே வெளிச்சம்.
மாணவர்களை மட்டும் மட்டம்
தட்டக்கூடாது: கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தேர்வு முறைகேடுகளை,
வெறும் எண்ணிக்கையாக பார்க்காமல், இதன் பின்னணிக்கான காரணங்களை,
முழுவதுமாக ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த
விவகாரத்தில், மாணவர்களை மட்டும், மட்டம் தட்டக்கூடாது. கற்பித்தலில்,
செயல்படுத்தப்படும் கல்வி திட்டங்களில், ஆசிரியர் செயல்பாடுகளில் உள்ள
ஓட்டைகளை கண்டறிந்து, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வட மாவட்ட
பள்ளிகளில், எப்போதுமே, ஆசிரியர் காலி பணியிடங்கள், அதிகம் இருப்பதும்,
தரம் குறைவதற்கு ஒரு முக்கிய காரணம். கல்வியில் முன்னேறியுள்ள தென்
மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தான், ஆசிரியர் போட்டித் தேர்வுகளில் வெற்றி
பெறுகின்றனர்.
இதனால், இவர்களை, வட மாவட்டங்களில், பணி நியமனம் செய்ததும்,
சில ஆண்டுகளுக்குப்பின், மீண்டும், தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு சென்று
விடுகின்றனர். இதனால், தொடர்ந்து, வட மாவட்டங்களில், ஆசிரியர் பணியிடங்கள்
காத்தாடுகின்றன. இந்நிலை மாற, வட மாவட்டங்களைச் சேர்ந்த பட்டதாரிகளும்,
அதிக எண்ணிக்கையில், ஆசிரியர் தேர்வுகளில், தேர்வு பெற வேண்டும். இதற்கு,
முதலில், பள்ளிக்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதுடன், இந்த மாவட்டங்களைச்
சேர்ந்த மாணவர்கள், உயர்கல்வி பெறுவதையும், அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
இந்த இரண்டையும் செய்தால், கல்வியில், வட மாவட்டங்கள், வெகுவாக முன்னேறும்.
இந்த நிலை உருவானால், சமூக, பொருளாதார நிலையிலும், வட மாவட்டங்கள்
முன்னேற்ற நிலையை அடையும். இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...