டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வுகளில், தமிழ் மொழியின்
முக்கியத்துவத்தை குறைத்துவிட்டது போல் பேசுவது தவறு. தமிழ் மொழியை
புறக்கணித்து, தமிழக அரசுப் பணிகளுக்கு, பணியாளர்களை தேர்வு செய்ய
முடியாது" என, புதிய பாடத்திட்டங்களை உருவாக்கிய முன்னாள் தலைவர் நட்ராஜ்
கூறினார்.
குரூப்-1, குரூப்-2, குரூப்-4, 8, வி.ஏ.ஓ., உள்ளிட்ட பல்வேறு போட்டித்
தேர்வுகளுக்கான புதிய பாடத் திட்டங்களை, டி.என்.பி.எஸ்.சி., கடந்த 13ம்
தேதி இரவு வெளியிட்டது. குரூப்-2 தேர்வில் இருந்த தமிழ், ஆங்கிலம்
மொழித்தாள் நீக்கப்பட்டு, 200 கேள்விகளும், பொது அறிவு பாடத்திற்கு
ஒதுக்கப்பட்டன.
குரூப்-4 தேர்வில், மொழித்தாள் பகுதியில், கேள்விகளின் எண்ணிக்கை, 100ல்
இருந்து, 50 ஆக குறைக்கப்பட்டு, பொது விழிப்புத்திறன் என்ற பகுதி
சேர்க்கப்பட்டது. பல லட்சம் பேர் எழுதும், வி.ஏ.ஓ., தேர்வில், மொழிப்
பாடத்திற்கான கேள்வி, 100ல் இருந்து, 30 ஆக குறைக்கப்பட்டது. இதற்குப்
பதிலாக, கிராம நிர்வாகம், புதிதாக சேர்க்கப்பட்டது.
தேர்வாணையத்தின் இந்த நடவடிக்கையால், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம்
குறைந்து விட்டது எனவும், இதனால், கிராமப்புற தேர்வர்கள், கடுமையாக
பாதிக்கப்படுவர் எனவும், கருணாநிதி, வைகோ உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள்
கருத்து தெரிவித்தனர்.
தேர்வில், தமிழ் மொழிக்கான முக்கியத்துவத்தை குறைக்கக் கூடாது என்றும்,
பழைய நிலை தொடரவும், அவர்கள் வலியுறுத்தினர். இந்த விவகாரம், தேர்வர்கள்
மத்தியிலும், பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தேர்வாணையத்தின் புதிய தலைவராக பதவி ஏற்ற நவநீதகிருஷ்ணன்,
புதிய பாடத்திட்ட பிரச்னை குறித்து, தீவிரமாக பரிசீலித்து வருவதாக,
தெரிவித்தார். இதனால், மீண்டும் பழைய கேள்வி அமைப்பு முறைகளே
அமல்படுத்தப்படுமா என்றும், எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.
இது போன்ற சூழலில், பாடத் திட்ட சர்ச்சை குறித்து, பாடத் திட்டத்தை
உருவாக்கியவரும், தேர்வாணையத்தின் முன்னாள் தலைவருமான நட்ராஜிடம் கேட்ட
போது, அவர் கூறியதாவது:
பாடத்திட்டத்தை முழுவதுமாக படித்து புரிந்து கொள்ளாதவர்கள் தான்,
தேவையற்ற சர்ச்சைகளை கிளப்புகின்றனர். பல்வேறு துறைகளுடன் ஆலோசனை நடத்தி,
ஆறு மாதங்களுக்கு மேலாக உழைத்து, காலத்திற்கு ஏற்ப, புதிய பாடத் திட்டங்களை
உருவாக்கினோம்.
எந்த தேர்வு பாடத் திட்டத்திலும், தமிழ் மொழிக்கான முக்கியத்துவத்தை
குறைக்கவில்லை; தமிழ் மொழியை புறக்கணிக்கவும் இல்லை. இதை, அனைவரும்
புரிந்து கொள்ள வேண்டும். போட்டித் தேர்வு என்பது, அனைத்து
தேர்வர்களுக்கும் சம நிலையை கொண்டதாக இருக்க வேண்டும்.
தமிழ் பாடத்திற்கு ஒரு வகை கேள்விகள், ஆங்கிலப் பாடத்திற்கு ஒரு வகை
கேள்விகள் கேட்பது, எந்த வகையில் நியாயம்? தமிழ் மொழியிலும், ஆங்கில
மொழியிலும், இலக்கணங்கள், அதிகளவு இடம் பெறுகின்றன.
அரசுப் பணிகளில் சேர்பவர்களுக்கு, அடிப்படை இலக்கணங்கள், மிகவும்
முக்கியமா அல்லது, தமிழகத்தின் கலாசாரம், பண்பாடு, தொன்மை, மாநிலத்தில்
ஓடும் ஆறுகள், நதிகள் குறித்த விவரங்கள் போன்றவற்றை பற்றி தெரிந்து கொள்ள
வேண்டியது முக்கியமா? இலக்கணப் பகுதிகளை குறைத்துவிட்டு, அதற்குப் பதிலாக,
தமிழக கலாசாரம், பண்பாடு, தொன்மை உள்ளிட்டவற்றை, புதிய பாடத்திட்டத்தில்
சேர்த்துள்ளோம்; அவ்வளவு தான்.
தமிழில், 100 கேள்விகள் கொடுத்தால், அதில், இலக்கணப் பகுதிகளில்
இருந்தும், இலக்கியங்களில் இருந்தும், திரும்ப, திரும்ப ஒரே மாதிரியான
கேள்விகள் தான் கேட்கப்படுகின்றன. இதனால், அதிகமானோர் தேர்வு பெற்று,
அரசுப் பணிக்கு செல்கின்றனர்.
இப்படிப்பட்டவர்களால், அரசு நிர்வாகத்தை, எப்படி சிறப்பாக இயங்கச் செய்ய
முடியும்? வி.ஏ.ஓ.,வுக்கு இலக்கணம் அவசியமா? வி.ஏ.ஓ., தேர்வில், கிராம
நிர்வாகம் குறித்து, புதிய பாடத்திட்டம் கொண்டு வந்துள்ளோம். வி.ஏ.ஓ.,
தேர்வு எழுதுபவர், தமிழ் இலக்கணம், ஆங்கில இலக்கணம் தெரிந்தால் போதுமா?
கிராம நிர்வாக முறைகள் குறித்தும், கிராமங்கள் குறித்தும், தமிழகத்தில்
ஓடும் நதிகள், ஆறுகள் குறித்தும் படிக்க வேண்டாமா?
தேவையில்லாதவற்றை நீக்கியும், குறைத்தும், தேவையானதை சேர்த்தும்
உள்ளோம்; அவ்வளவு தான். இதில், தமிழ் மொழியை, எங்கேயும் புறக்கணித்து
விடவில்லை. தமிழில், பல்வேறு பாடப் பகுதிகள் உள்ளன; கேள்விகளும் உள்ளன.
பாடத் திட்டங்களை படித்துப் பார்த்தால், யாரும் குறை கூற மாட்டார்கள்.
இவ்வாறு நட்ராஜ் கூறினார்.
டி.என்.பி.எஸ்.சி., புதிய பாடத்திட்டங்கள், இணையதளத்தில் இருந்து,
திடீரென நீக்கப்பட்டுள்ளன. இதனால், சர்ச்சைக்குரிய பாடத்திட்ட
விவகாரத்தில், புதிய முடிவு எடுக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பாடத்திட்ட சர்ச்சை குறித்து, நேற்று முன்தினம், தேர்வாணைய தலைவர்
நவநீதகிருஷ்ணன், உறுப்பினர்களுடன், தீவிரமாக ஆலோசனை நடத்தி உள்ளார்.
அடுத்தடுத்து நடக்கும் கூட்டங்களில், தமிழ்மொழிப்பாட நீக்கம் குறித்தும்,
முடிவு எடுக்கப்படும் என, தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன. எதுவாக
இருந்தாலும், தமிழக அரசின் அனுமதியை பெற்றபின், அறிவிப்பு வெளியாகும் என,
கூறப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...