Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல; உறுதியான மனம் இருந்தால் போதும்


          சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல; உறுதியான மனம் இருந்தால் போதும் என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளார், பார்வை குன்றிய, கால்கள் செயலிழந்த இளைஞர் ஒருவர். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் நடத்திய பி.ஏ., தேர்வில் முதல் ரேங்க் பெற்று, தங்கப்பதக்கம் வென்றுள்ளார், இந்த மாற்றுத்திறனாளி இளைஞர்.

           பல்லடம் அருகேயுள்ள சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி - மல்லிகா தம்பதியர். இவர்களின் ஒரே மகன் சங்கர் சுப்ரமணியம், 26. பிறவியிலேயே 90 சதவீத பார்வை குறைபாடு உடையவர்; இரண்டு கால்களுக்கும் வளர்ச்சியில்லாமல், நடக்க முடியாது. பெற்றோர் உதவியின்றி நடமாட முடியாது.

                       பார்வை குறைபாடு காரணமாக, உருவங்கள் நிழல்களாகத்தான் தெரியும்; வண்ண வேறுபாடுகளை முழுமையாக அறிய முடியாது. கண்ணொளி இல்லாவிட்டாலும், காதொலியை ஆழமாக மனதில் பதிய வைக்கும் அபார திறன் ஒன்று மட்டுமே, தெய்வம் தந்த வரம்; எந்த விஷயத்தையும் எளிதில் மறந்துவிடாத, நுட்பமான ஞாபக சக்தி உண்டு.

              அதைவிட மேலாக, சாதிக்க வேண்டும் என்ற திடமான உறுதி மனதில் உண்டு. இதுவே, சங்கர் சுப்ரமணியத்தை சாதனையாளராக மாற்றி வருகிறது. முழுமையாக பார்வை குறைபாடு இருப்போர், "பிரெய்லி" முறையில் படிக்க முடியும்; ஆனால், சங்கர் சுப்ரமணியத்துக்கு 10 சதவீத பார்வை இருக்கிறது; எனினும், பாட புத்தகங்களை படிக்க முடியாது; பிறரை வாசிக்கச் சொல்லி தான், இவரால் படிக்க முடியும். பாடங்களை மனம் பாடம் செய்து, "ஸ்கிரைப்" ஆசிரியர் உதவியுடன், தேர்வு எழுதி வருகிறார்.

                    கணுவாய் ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளியில் படித்து, 10ம் வகுப்பு தேர்வில் 62 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்தார். பாட புத்தகத்தை புரட்டாமல், பள்ளியில் ஆசிரியர்கள் சொல்லித் தந்த பாடங்களை மனதில் பதிய வைத்தே, இவர் தேர்வில் சாதித்து காட்டியுள்ளார். தற்போது, சென்னை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பி.ஏ., பொருளாதாரம் பட்டப்படிப்பில், முதல் ரேங்க் வாங்கி, தங்கப்பதக்கம் வென்றுள்ளார். பல்கலையில் நடந்த விழாவில், கவர்னர் ரோசைய்யா தங்கப்பதக்கம் வழங்கி, சாதனை மாணவர் சங்கர் சுப்ரமணியத்தை கவுரவித்துள்ளார்.

               இவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி, பல்லடம் அருகேயுள்ள காற்றாலையில் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். தாய், தந்தையின் தளராத ஊக்கமும், அரவணைப்பும், சிறப்பாசிரியர்களின் பயிற்சியும் சங்கர்சுப்ரமணியத்தை, படிப்பின் சாதனை படிகளில் ஏற வைத்துள்ளது. "பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெறுவதே, எனது அடுத்த லட்சியம்,&'&' என்கிறார், சங்கர் சுப்ரமணியம்.

                அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி, தாய் மல்லிகா கூறியதாவது: பிறவியிலேயே கால்கள் ஊனம், கண் பார்வை குறைவுடன் பிறந்ததால், குழந்தையை வளர்ப்பதும், படிக்க வைப்பதும் சிரமம் என கருதினோம். எனினும், அர்ப்பணிப்புடன் வளர்த்து வந்தோம். இன்று, அந்த குழந்தை சாதனை இளைஞனாக மாறி எங்களுக்கு பெருமை சேர்த்துள்ளான்.

             முதலில், பள்ளியில் சேர்க்க மிகவும் சிரமப்பட்டோம்; பல பள்ளிகளிலும் அட்மிஷன் கிடைக்கவில்லை. கணுவாய் ஹோலிகிராஸ் பள்ளியில், சேர்த்துக் கொண்டனர். அங்குள்ள ஆசிரியர்களின் ஊக்குவிப்பு, சிறப்பு ஆசிரியர்கள் ரகுபதி ஐயர், பத்மநாபன் ஆகியோரின் பயிற்சி ஆகியவை, எங்கள் மகனின் திறமையை வெளியே கொண்டு வர மிகவும் உதவியது.

                சங்கர் சுப்ரமணியத்துக்கு இசையிலும் ஆர்வம் உண்டு. கோவை அரசு இசைக்கல்லூரியில் குரலிசை பிரிவில் படிக்க "அட்மிஷன்" கிடைத்தது. பார்வை குறைபாடு மற்றும் கால் ஊனம் உள்ள மாற்றுத்திறனாளி என்பதை கருத்தில் கொண்டு, வாரம் இரு முறை மட்டும் வகுப்புக்கு வர தனிப்பட்ட சலுகை அளிக்கப்பட்டது. ஆனால், சுல்தான்பேட்டையில் இருந்து கோவைக்கு காரில் வர வேண்டும் என்றால், தினமும் 1,000 ரூபாய் செலவாகும் என்பதால், பயிற்சியில் பங்கேற்க முடியவில்லை. எங்கள் மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அரசு வேலை அளித்து உதவ வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive