இன்றைக்கு எத்தனையோ பட்டப் படிப்புகள் இருக்கலாம். ஆனால், எம்பிஏ
படிப்புக்கென்று தனி மரியாதை இருக்கத்தான் செய்கிறது. ஏனெனில், இப்படிப்பை
முடித்துவிட்டால், எப்படியும் ஒரு நல்ல வேலை கிடைத்துவிடும் என்ற
நம்பிக்கைதான் அதற்கு காரணம்.
எம்பிஏ படிப்பின் மதிப்பு
இந்த மதிப்பு பற்றிய கருத்தாக்கம், ஒவ்வொருவருக்கும் வேறுபடலாம். இதை இந்திய சூழலில் கீழ்கண்டவாறு கூறலாம். அவை,
1. பணி வாய்ப்பை அடைதல் - சம்பளம், பதவி அல்லது பணிபுரியும் நிறுவனம் ஆகியவற்றை வைத்து அளவிடப்படுகிறது.
2. பெறப்பட்ட திறன்கள் மற்றும் அறிவு ஆகியவற்றின் மாறுபாடுகள்
3. தொடர்புகளின்(connections) ஆழம் மற்றும் வேறுபாடுகள் மேம்படுதல்
4. எம்பிஏ பட்ட முத்திரை
5. ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் மாணவராக இருத்தல்.
மேற்குறிப்பிட்ட விஷயங்களில், 4 அல்லது 5ம் அம்சங்கள் அல்லது இரண்டுமே
உங்களின் விருப்பமாக இருந்தால், நீங்கள் அதிகம் யோசிக்க வேண்டியதில்லை.
தாரளமாக, கிடைக்கும் இடத்தில் எம்பிஏ சேர்ந்து கொள்ளலாம். அதேசமயம், முதல்
மூன்று அம்சங்களுக்கு(1-3) முக்கியத்துவம் கொடுப்பவர்கள், சற்று சிந்திக்க
வேண்டும். அந்த அம்சங்கள், சாதாரண விஷய ஞானம் சம்பந்தப்பட்டவைதான்
என்றாலும், அந்த சாதாரண விஷயஞானம் பலருக்கு இருப்பதில்லை என்பதுதான் உண்மை.
புத்தகங்களில் மூழ்குதல்
எம்பிஏ படிப்பானது, வெறுமனே புத்தகங்களில் உங்களை மூழ்கடித்துக் கொள்வது
மட்டுமல்ல. வகுப்பறையில் மேலோட்டமாக படிக்கும் விஷயங்களை வைத்து, ஒரு
வியாபாரம் நடத்துவது கடினம். இன்றைய எம்பிஏ கல்வி நிறுவனங்கள், Case work,
Hands-on projects மற்றும் குழு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம்
கொடுக்கின்றன. உங்களின் மதிப்பெண் திட்டத்திலும் இது பிரதிபலிப்பதை நீங்கள்
அடிக்கடி காணலாம். வாராந்திர quizzes -ஐ விட, உங்களின் ப்ராஜெக்ட், அதிக
வெயிட்டேஜ் பெற்றிருக்கும்.
எனவே, ப்ராஜெக்ட்களில் ஆர்வம் செலுத்தி, அதை சிறப்பாக முடிப்பதில்
முனையவும். இந்த ப்ராஜெக்ட்கள்தான், நிஜ வாழ்க்கையில், உங்களுக்குத்
தேவைப்படும் திறன்களை வழங்கும். இந்த ப்ராஜெக்ட்களை எங்கே பெறுவது என்ற
சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம். இதற்கு ஒரே வழி, உங்களின்
ஆசிரியர்கள்தான். அவர்கள், சிறந்த ப்ராஜெக்ட்களைப் பெற, உங்களுக்கு
வழிகாட்டுவார்கள்.
தொழில் நிறுவனங்களுடன் நல்ல தொடர்பு வைத்திருக்கும் எம்பிஏ கல்வி
நிறுவனங்கள், தங்களின் மாணவர்கள், சிறப்பான ப்ராஜெக்ட்களைப் பெற உதவி
செய்கின்றன.
நெட்வொர்க்கிங் என்பது கெட்ட வார்த்தையல்ல...
ஒரு வணிகப் பள்ளியில், ஒன்றாக கலந்து படிக்கையில், பலவிதமான தொடர்புகள்
உருவாகின்றன. ஒரே விடுதியின் டைனிங் டேபிளை பகிர்ந்து கொள்ளுதல், ஒன்றாக
தங்குதல் போன்றவை முக்கியமானவை. இதன்மூலம், ஒருவர் மற்றவரால் தூண்டப்பட்டு,
உதவிகள் பரிமாறப்படுகின்றன.
நீங்கள் அனைவராலும் விரும்பப்படும் நபராக, நெகிழ்வுத்தன்மையுடன்
இருந்தால், இன்னும் நன்றாக இருக்கும். மேலும், இந்த நேரத்தில் உங்களது
பேராசிரியர்களையும் அலட்சியம் செய்துவிடக்கூடாது. அவர்கள், உங்களுக்கு
பலவிதங்களிலும் உதவியாக இருப்பார்கள். இவைத்தவிர, முன்னாள் மாணவர்களுடன்
தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுதல், தொழில்துறை நிபுணர்கள், கல்லூரி
வளாகத்திற்கு கேம்பஸ் இண்டர்வியூ வரும் நிறுவனங்கள் ஆகியோருடனான
தொடர்பானது, உங்களுக்கு முன் விரிந்திருக்கும் வாய்ப்புகளைப் பற்றிய ஒரு
தெளிவான பார்வையை வழங்கும். இதன்மூலம் பகல் கனவுகளைத் தவிர்க்கலாம். எனவே,
நெட்வொர்க்கிங் என்பதை சாதாரணமாக நினைக்க வேண்டாம்.
படிக்கும்போது அதிக கவனம்
அநேகமாக, எம்பிஏ படிப்பே, உங்களின் கடைசி கல்வி நிறுவன வாழ்க்கையாக
அமையலாம். எனவே, அந்த 2 ஆண்டு காலத்தில், படிப்பில் சிறப்பாக செயல்பட்டு,
நல்ல மதிப்பெண்களைப் பெறவும். இந்தியாவைப் பொறுத்தவரை, வேலைவாய்ப்பு
நிறுவனங்கள், உங்களின் விண்ணப்பங்களை மதிப்பிடும்போது, படிப்பில் பெற்ற
மதிப்பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன என்பதை மறக்க வேண்டாம்.
இண்டர்ன்ஷிப் என்பதும் முக்கியம்...
நமது நாட்டைப் போன்ற ஒரு நிச்சயமற்ற பொருளாதார சூழலில், இண்டர்ன்ஷிப்
என்பது அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. ஒருவரது பணியை
உறுதிசெய்யும் அம்சமாக இது திகழ்கிறது. இதை Pre Placement Offer(PPO)
என்கின்றனர். ஒருவேளை, அந்தக் குறிப்பிட்ட நிறுவனம், வேறுசில
காரணங்களுக்காக, உங்களுக்கான நிரந்தர பணிவாய்ப்பைத் தர இயலவில்லை
என்றாலும், நீங்கள், அதற்காக தளர்ந்துவிடாமல், சிறப்பாக இண்டர்ன்ஷிப்
செய்து, இண்டர்ன்ஷிப் மேலாளரிடம் ஒரு பரிந்துரைக் கடிதத்தைப் பெறலாம்.
இக்கடிதம், உங்களுக்கு வேலைவாய்ப்பு சந்தையில் பெரிதும் உதவிபுரியும்.
எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடீஸ்
உங்களது கேம்பஸ் பிளேஸ்மென்ட் செல்லில் பங்கு வகிப்பதானது, வணிக
மேம்பாட்டு நடவடிக்கையில் உங்களுக்கு முக்கிய இடம் கிடைக்க உதவும்.
இதன்மூலமாக, நீங்கள் பல்வேறான முக்கிய நபர்களுடன் தொடர்புகளைப்
பெறுவீர்கள்.
மாணவர்கள் தொடர்பான விழாக்களை ஏற்பாடு செய்வது, கிளப்புகளில்
கலந்துகொள்வது போன்றவை, உங்களின் குழு மற்றும் ப்ராஜெக்ட் மேலாண்மை திறனை
மேம்படுத்த உதவும். விதவிதமான போட்டிகள், வினாடி-வினா நிகழ்ச்சிகள்
ஆகியவற்றில் கலந்துகொண்டு வெற்றியடைவதின் மூலமாக, பணப் பரிசுகள்
கிடைப்பதுடன், உங்களின் பல்வேறான திறன்களும் அதிகரிக்கும். இத்தகைய
நடவடிக்கைகள், உங்களின் CV -ல், உங்களின் கூடுதல் தகுதிகளாக சேர்ந்து,
சிறந்த பணிநிலையைப் பெறும் வாய்ப்புகளை அதிகரிக்கும் என்பது அனைவருக்கும்
தெரிந்த உண்மை.
சர்வதேச அனுபவம் பெறுதல்
வளாகத்தில் நடைபெறும், மாணவர் பரிமாற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வதன்
மூலம், சிறந்த சர்வதேச அனுபவம் பெறலாம். இத்தகைய சலுகைகளைப் பெற, நீங்கள்
தேர்ந்தெடுக்கும் கல்லூரி மிகவும் முக்கியமானது. ஏனெனில், பிரபலமான மற்றும்
புகழ்பெற்ற கல்லூரிகளில்தான், மாணவர் பரிமாற்ற நிகழ்வுகள் நடைபெறும்.
மாணவர் பரிமாற்றத்தின்போது, ஒரு ப்ராஜெக்டையோ அல்லது இண்டர்ன்ஷிப்பையோ
நீங்கள் பெற்றால், அது உங்களின் மகுடத்தில் பதித்த, மற்றொரு வைரமாக
ஜொலிக்கும். ஆனால், பரிமாற்ற செயல்பாட்டைப் பொறுத்தவரை இன்னொன்றையும்
நீங்கள் நினைவில் வைக்க வேண்டும். பல வணிகப் பள்ளிகளில், மாணவர்
பரிமாற்றத்தில் கலந்துகொள்ளும் ஒருவர், தனது இதர பொறுப்புகளை இழக்கிறார்.
எனவே, உங்களின் முடிவு புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும்.
மாணவர் பரிமாற்றத்தின் மூலமாக, நீங்கள் படிக்கும் கல்லூரிக்கு வரும்
வெளிநாட்டு மாணவர்களுடன், சிறந்த தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூலமாக,
நல்ல சர்வதேச அறிவைப் பெறலாம். மேலும், சில நல்ல சர்வதேச வணிகப் பள்ளிகள்
நடத்தும் போட்டிகள் மற்றும் மாநாடுகளில் கலந்துகொள்ள முயற்சிக்கவும்.
அதுபோன்ற போட்டிகளில் நீங்கள் வெற்றிபெற்றால், உங்களுக்கு சிறப்பான
உதவித்தொகை திட்டங்கள் கிடைக்கும்.
முன்முயற்சி முக்கியம்
உங்களின் பாடத்திற்கு வெளியே, அதேசமயம், உங்களுக்கு ஆர்வமுள்ள
விஷயங்களில், சில சான்றிதழ் படிப்புகளை மேற்கொள்ளலாம். அது, உங்களின்
எம்பிஏ.,வுக்கு தொடர்புடையதாக இருத்தல் நலம். (நிதித்துறையில் CFA படிப்பு
ஒரு உதாரணம்). ஒரு வெளிநாட்டு மொழியைக் கற்றல் மற்றும் ஒரு ஆராய்ச்சி
பேப்பர் எழுதுதுல் போன்றவையும் உங்களின் தகுதிகளை அதிகப்படுத்தும்.
சிறந்த அனுபவம்
நீங்கள் எம்பிஏ முடித்தப்பிறகு எங்கே பணிபுரியப் போகிறீர்கள் அல்லது
என்ன செய்யப்போகிறீர்கள் என்பதைப் பற்றி ஏற்கனவே திட்டம் வைத்திருந்தால்,
படிப்பு காலத்தில், உங்களின் செயல்பாடு அதற்கேற்ப இருக்கும். ஆனால்,
அப்படிப்பட்ட உறுதியான திட்டமிடல் இல்லையெனில், இந்த 2 ஆண்டு காலத்தில்
அதற்கான திட்டமிடலை, அவசரமின்றி, நிதானமாக, நன்கு யோசித்து மேற்கொள்ளலாம்.
அதற்காக, உங்களின் மாணவர் பருவ சந்தோஷங்களை தியாகம் செய்துவிட
வேண்டியதில்லை. மாணவர் பருவ சந்தோஷங்களை அனுபவிப்பதோடு, பணிக்குத் தேவையான
மென்திறன்களையும் வளர்த்துக் கொள்ளலாம். உங்களது படிப்பின்போது, சிறந்த
அனுபவம் பெறுவதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்பதே இதன் சுருக்கம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...