நாமக்கல்லில், பிளஸ் 2 இயற்பியல் தேர்வு முறைகேடு தொடர்பாக,
பள்ளிக்கல்வித் துறையினர் விசாரணையில், அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி
வருகின்றன.
குறிப்பாக, டாக்டர், இன்ஜினியரிங் போன்ற தொழிற்படிப்புகளுக்கான பாடங்களை
கொண்ட கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில்
படிக்கும் நாமக்கல் தனியார் பள்ளி மாணவர்கள், மாநில அளவில், "ரேங்க்"
பெறுகின்றனர். அதன் காரணமாக, அம்மாணவ, மாணவியர், எளிதாக அரசு
ஒதுக்கீட்டில், டாக்டர், இன்ஜினியரிங் படிப்புகளில் சேர்வதற்கான வாய்ப்பு
கிடைக்கிறது.
பத்து ஆண்டுக்கும் மேலாக, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, தனியார் பள்ளி
மாணவ, மாணவியர், இச்சிறப்பிடத்தை பிடித்து வருகின்றனர். இதனால், மாநிலம்
முழுவதிலும் இருந்து, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியரை,
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில்
சேர்க்க, அவர்களது பெற்றோர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதன்படி, ஒவ்வொரு ஆண்டும், வெளி மாவட்ட மாணவ, மாணவியர் வருகை உயர்ந்து
கொண்டே செல்கிறது.இதை, உன்னிப்பாக கவனிக்கத் துவங்கியுள்ள பள்ளி
கல்வித்துறை, நாமக்கல் மாவட்டத்தில், அரசுப் பள்ளிகள் இருக்கும்
பட்சத்தில், தனியார் பள்ளி மாணவ, மாணவியர் மட்டும், மாநில ரேங்க்
பிடிப்பதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதன் காரணமாக, இரு ஆண்டுகளாக, நாமக்கல் மாவட்டத்தில் நடக்கும் பிளஸ் 2,
10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை, பள்ளி கல்வித் துறையினர், தீவிரமாக
கண்காணிக்கத் துவங்கியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை, இந்தாண்டு, 62 மையங்களில், பிளஸ் 2
பொதுத்தேர்வு நடக்கிறது. அவற்றில், ஐந்து தனியார் பள்ளிகள், இந்தாண்டு,
புதிதாக பொதுத் தேர்வு மைய அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இந்த ஐந்து மையம்
உட்பட, அனைத்து தனியார் பள்ளிகளும், தீவிர கண்காணிப்புக்கு,
உட்படுத்தப்பட்டு வருகின்றன.
இச்சூழலில், நாமக்கல் பொம்மைக்குட்டைமேட்டில் உள்ள, ஒரு தனியார்
பள்ளியில், ப்ளஸ் 2 இயற்பியல் தேர்வில் நடந்த முறைகேடு
கண்டுபிடிக்கப்பட்டவுடன், வேறு மாவட்டத்தில் இருந்து, கூடுதலாக, பறக்கும்
படையினர்,130 பேர் வரவழைக்கப்பட்டனர். அனைவரும், நாமக்கல் மாவட்டத்தில்
உள்ள தனியார் பள்ளியில் நடக்கும் பொதுத்தேர்வை தீவிரமாக கண்காணித்து
வருகின்றனர்.
இதனிடையே, தனியார் பள்ளியில் நடந்த முறைகேடு தொடர்பாக, பள்ளிக் கல்வித்
துறை அதிகார்கள் நடத்தி வரும் விசாரணையில், நாள்தோறும், பல்வேறு
அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மாவட்ட கல்வித்துறை அலுவலர்கள் சிலர் கூறியதாவது: தனியார் பள்ளி
மாணவர்கள், அரசுப் பள்ளிகளில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும். பெரும்பாலான
மாவட்டங்களில், இம்முறையில் தேர்வு நடந்து வருகிறது. ஆனால், நாமக்கல்
மாவட்டத்தில், இதுபோன்ற முறை பின்பற்றுவதில்லை.
தனியார் பள்ளி நிர்வாகத்தினர், "தங்கள் பள்ளியில் கூடுதல் வசதி உள்ளது;
மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது" என, கணக்கு காண்பித்து, தேர்வு
மைய அங்கீகாரம் பெறுகின்றனர்.
அதற்காக, அரசு மேல்நிலைப்பள்ளி, பிளஸ் 2, 10 ம் வகுப்பு மாணவர்களை,
தங்களது பள்ளியில் தேர்வு எழுதுவதற்கு, சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்
மூலம், தனியார் பள்ளி நிர்வாகத்தினர் ஒப்புதல் பெறுவர். பின், தேர்வு
எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையை காண்பித்து, அனுமதி பெறுவர்.
இதுபோன்ற, "தில்லுமுல்லு" செய்து தான், தற்போது முறைகேட்டில்
சிக்கியுள்ள, பொம்மைக்குட்டை மேடு தனியார் பள்ளி தேர்வு மைய அனுமதியை
பெற்றது. இதுபோல், பல தனியார் பள்ளியினர், தேர்வு மைய அங்கீகாரம்
பெற்றுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...