தேர்வு நேரத்திலும், இரவு நேர மின்தடை தொடர்வதால், மாணவர்கள் எல்.இ.டி.,
சார்ஜர் விளக்குகளை கொண்டு படிக்கின்றனர். குறைந்த வெளிச்சம் மற்றும்
கண்ணுக்கு அருகில் விளக்குகள் வைக்கப்படுவதால், மாணவர்களின் பார்வைத் திறன்
பாதிக்கப்படும் என, பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.
ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில்,
காலை, 6:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரை சுழற்சி முறையில் மின்தடை
செய்யப்படுகிறது. மாலை, 6:00 மணி முதல், இரவு, 10:00 மணிக்குள்ளாக இரண்டு
மணி நேரம் கட்டாயம் மின்தடை உள்ளது.
பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு துவங்கி உள்ளது. வரும், 27ம் தேதி
முதல், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு துவங்குகிறது. மின்தடையால்,
பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் ஏழை மாணவர்கள், படிப்பதற்கு எல்.இ.டி.,
சார்ஜர் விளக்குகளை பயன்படுத்துகின்றனர்.
எல்.இ.டி., விளக்குகளில் குறைந்த வெளிச்சம் மட்டுமே கிடைக்கிறது. மேலும்
இதன் ஒளி, குறைந்த வெளிச்சம் என்பதால், கண் பார்வை பாதிக்கும் என,
பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.
படிக்கும் அறை முழுவதும் வெளிச்சம் உள்ளவாறு விளக்குகள் இருந்தால்,
நன்கு படிக்க முடியும். குறுகலான இடத்தில் ஒளிவீசும் டார்ச் லைட்களில் அதிக
நேரம் படித்தால், கண் சோர்வு ஏற்படும் என, கண் மருத்துவர்களும் கருத்து
தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, பிளஸ் 2 மாணவி கவிதா கூறியதாவது: மின்தடை காரணமாக மாலையில்
இரண்டு மணி நேரம் மட்டுமே படிக்க முடிகிறது. மின்தடை இல்லாத நேரமான
அதிகாலை 3:00 மணிக்கு எழுந்து, 6:00 மணி வரை படிக்கிறேன். தற்போது, தேர்வு
நடைபெற்று வருவதால் எல்.இ.டி., விளக்கு வெளிச்சத்தில் படிக்கிறேன். இதனால்,
கண் எரிச்சல் அதிகமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து பெற்றோர் சிலர் கூறியதாவது: அதிக பணம் செலவு செய்து
இன்வெர்ட்டர்கள் வாங்க வசதி இல்லை. எனவே, எங்கள் குழந்தைகள் படிப்பதற்கு
குறைந்த விலையில் கிடைக்கும் எல்.இ.டி., டார்ச் லைட்களை வாங்கி கொடுத்து
உள்ளோம். பார்வை பாதிக்கும் என்ற அச்சம் இருந்தாலும், தேர்வை எதிர்கொள்ள
வேறு வழியில்லை. குறைந்தபட்சம் தேர்வுகள் முடியும் வரையிலாவது, இரவு நேர
மின்தடையை தவிர்க்க மின்வாரிய அதிகாரிகள் முன்வரவேண்டும். இவ்வாறு அவர்கள்
கூறினர்.
இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத மின்வாரிய அதிகாரி ஒருவர்
கூறியதாவது: மின்சாரம் எப்போது அதிகமாக நுகரப்படுகிறதோ, அப்போது, தானாகவே
மின்தடை ஏற்படும் விதமாக கருவிகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. அதன்படி மின்தடை
நேரம் அமைகிறது.
மாலை நேரத்தில் விளக்குகள் பயன்பாடு அதிகம் என்பதால், தானியங்கி மின்தடை
கருவி அதன் பணியை செய்கிறது. மின்சார பற்றாக்குறையை சமாளிப்பதற்காக இந்த
ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் மனித குறுக்கீடு ஏதும் இல்லை. இவ்வாறு
அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...