Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஐ.ஏ.எஸ். தேர்வில் புதிய கட்டுப்பாடு: முதல்வர் எதிர்ப்பு


         ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) கொண்டு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகளுக்கு முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 
          இந்த விஷயத்தில் பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக தலையிட்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கொண்டுவந்துள்ள பாரபட்சமான கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

           இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் புதன்கிழமை எழுதியுள்ள கடித விவரம்:

             ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். (சிவில் சர்வீஸ்) தேர்வுகளில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கொண்டு வந்துள்ள மாற்றங்கள் குறித்து தங்களது கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். இந்தப் புதிய கட்டுப்பாடுகள் ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவோருக்கு எதிரானதாக உள்ளன.

               குறிப்பாக, சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வில் கொண்டுவரப்பட்டுள்ள நான்கு முக்கிய மாற்றங்கள் தமிழகத்தில் உள்ள கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் வகையில் உள்ளன.

                   பள்ளிக் கல்வியின் இறுதி வரை தமிழில் படித்து, பட்டப் படிப்பை ஆங்கிலத்தில் படித்த மாணவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகளை தமிழில் எழுதலாம் என்ற பழைய முறை இப்போது மாற்றப்பட்டுள்ளது. பட்டப் படிப்பு வரை எந்தவொரு மாணவர் தமிழ் வழியில் பயில்கிறாரோ அவர் மட்டுமே, முதன்மைத் தேர்வில் தமிழில் எழுத முடியும் என்ற புதிய கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. இது தமிழக மாணவர்களின் தாய்மொழியான தமிழ் வழியில் தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பைப் பறிப்பதாக உள்ளது.

                அதே நேரத்தில், ஹிந்தியில் படித்தவர்களுக்கு இதுபோன்ற கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை.

                         இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகள் இடம்பெற்றுள்ளன. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கொண்டுவந்துள்ள புதிய மாற்றங்கள் தமிழ் பேசும் தேர்வர்களுக்கு மட்டுமன்றி ஹிந்தி மொழி பேசாத அனைத்து மாநில மாணவர்களுக்கும் எதிரானதாகும். மேலும், தாய்மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்ட கிராமப்புறங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கையாகும்.

                    இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு இது எதிரானது. ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் தேர்வு எழுதும் மாணவர்களுடன் ஒப்பிடும்போது தாய்மொழியில் எழுதும் மாணவர்களுக்கு இது பின்னடைவாக இருக்கும். இரண்டாவதாக, பட்டப் படிப்பில் பிரதான பாடமாக தமிழ் இலக்கியத்தைத் தேர்வு செய்து படித்த மாணவர்களால் மட்டுமே சிவில் சர்வீஸ் தேர்வில் விருப்பப் பாடமாக தமிழ் இலக்கியத்தை எடுக்க முடியும். இந்த நிபந்தனை மற்ற பாடங்களுக்கு விதிக்கப்படவில்லை. குறிப்பாக, இளங்கலை கணிதம் படித்த ஒருவர், தனது விருப்பப் பாடமாக வரலாறை எடுக்க முடியும். ஆனால், தமிழ் இலக்கியத்தை எடுக்க முடியாது.

             மூன்றாவதாக, ஒரு குறிப்பிட்ட மொழிப் பாடத்தை தேர்வுக்காக எடுக்க விரும்புவோரில், குறைந்தது 25 பேர் இருக்க வேண்டும். அதற்குக் குறைவாக இருந்தால் அவர்கள் ஹிந்தி அல்லது ஆங்கில மொழிகளில் மட்டுமே சிவில் சர்வீஸ் தேர்வை எழுத முடியும். இந்த விதியானது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அனைவரும் சமம் என்பதற்கு எதிரானதாகும்.

                   நான்காவதாக, இந்திய மொழியில் கட்டாயமாக ஒரு தகுதித் தாளை எழுத வேண்டும் என்கிற விதிமுறை நீக்கப்பட்டு, ஆங்கில மொழியில் கட்டுரை எழுதும் பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் நகர்ப்புறங்களில் வசிக்கும் ஆங்கிலம் படித்த தேர்வர்களுக்கு சாதகமாக இருக்கும். கிராமப்புறங்களில் உள்ள பின்தங்கிய மாணவர்களுக்கு பெரும் பாதிப்பாக அமையும்.

              மாநில அரசுகளிடம் ஆலோசிக்கவில்லை: சிவில் சர்வீஸ் தேர்வில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து மாநில அரசுகளிடம் எந்த ஆலோசனையையும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மேற்கொள்ளவில்லை. இது ஜனநாயகத்துக்கு எதிரான செயலாகும். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எதிர்கொள்வதைத் தடுக்கும் நடவடிக்கையாகும்.

                    எனவே, இந்தப் பிரச்னையில் தாங்கள் உடனடியாக தலையிட்டு, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு எழுதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படும் விஷயம் என்பதால், இதில் நீங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகக் கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive