தமிழகம் முழுவதும், பிளஸ் 2 பொதுத் தேர்வு, நேற்று துவங்கியது. 8.5
லட்சம் மாணவ, மாணவியர் உற்சாகத்துடன், மொழி முதல் தாள் தேர்வில்
பங்கேற்றனர். மொழிப் பாடமான தமிழ்த் தேர்விலும், பிட் அடித்த 6 மாணவர்கள்,
பறக்கும் படை குழுவினரிடம் சிக்கினர்.
தமிழகம் முழுவதும் 8 லட்சத்து, 4,534 மாணவ, மாணவியர் தேர்வில்
பங்கேற்றனர். சென்னையில், 137 மையங்களில் நடந்த தேர்வில், 51,591 மாணவ,
மாணவியர் பங்கேற்றனர். புதுச்சேரியில், 30 மையங்களில் நடந்த தேர்வில், 11
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா, சி.இ.ஓ., ராஜேந்திரன் உள்ளிட்ட
அதிகாரிகள், சென்னையில் உள்ள பல்வேறு தேர்வு மையங்களை பார்வையிட்டனர்.
சென்னை, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேர்வெழுதி,
வெளியே வந்த மாணவியர் கூறுகையில், "மொழித்தாள் தேர்வு, மிகவும் எளிதாக
இருந்தது; அதிக மதிப்பெண்களை அள்ளுவோம்" என்றனர்.
அங்கு, தேர்வை கண்காணித்துக் கொண்டிருந்த, தேர்வுத் துறை இயக்குனர்
வசுந்தரா கூறியதாவது: கேள்வித்தாள் பயன்பாட்டில், எவ்வித குழப்பங்களும்,
முறைகேடுகளும் நடக்காமல் இருக்க, ஏழு இலக்க வரிசை எண்கள், இந்த ஆண்டு,
முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம், ஒவ்வொரு
மையத்திற்கும், தேவையான எண்ணிக்கையில், கேள்வித் தாள்கள் அனுப்பப்படும்.
இவ்வாறு வசுந்தரா கூறினார்.
பழைய முறையிலான கேள்வித்தாள், லீக் ஆனால், அதை கண்டுபிடிப்பது மிகவும்
சிரமம். ஆனால், தற்போதைய முறையிலான கேள்வித்தாள் வெளியானால், எந்த
மையத்திற்கான கேள்வித்தாள் என்பது, சுலபமாக தெரிந்து விடும்; கூடுதல்
கேள்வித்தாள் புழங்குவதும், இதன் மூலம் கட்டுப்படுத்தப்படும்.
நேற்று நடந்தது, தமிழ்த் தேர்வு என்ற போதிலும், ஆறு மாணவர்கள், பிட்
அடித்து, பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டனர். சென்னை மாவட்டத்தில்
இருவர், கடலூர் மாவட்டத்தில் ஒருவர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில்
மூவர் சிக்கினர். இவர்கள் ஆறு பேரும், தேர்வு அறைகளிலிருந்து, உடனடியாக
வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்கு, நேற்றைய தேர்வும் ரத்து செய்யப்பட்டது.
மின்தடை இல்லை: கடந்த ஆண்டு பொதுத் தேர்வின் போது,
மின் தட்டுப்பாடு பிரச்னை, தேர்வு மையங்களில் கடுமையாக எதிரொலித்தது. பல
மையங்களில், மின்சாரம், ஜெனரேட்டர் இன்றி சிரமப்பட்டனர்.
இந்தாண்டு, முன்கூட்டியே, மின் துறையும், கல்வித் துறையும் ஆலோசனை
நடத்தி, தேவையான முன்னேற்பாடுகளை செய்து உள்ளன. அதன்படி, தேர்வு மையங்கள்
அமைந்துள்ள பகுதியில், மின் தடை ஏற்படாது என, நேற்று முன் தினம், மின்
வாரியம் உறுதி அளித்தது. அதன்படி, நேற்று, தேர்வு நடந்த போது, மின் தடை
ஏற்படவில்லை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...