வினோதமான உடல்நல குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள, பிளஸ் 2 மாணவி,
நின்று கொண்டே தேர்வு எழுதுகிறார்; அவரால் உட்கார முடியாது என்பதால்,
நின்றே தேர்வு எழுத சிறப்பு அனுமதி பெற்றுள்ளார்.
மும்பையில், வாசி பகுதியைச்
சேர்ந்த பிரவினாவின் மகள், ஹெமிதா ஷா, பிளஸ் 2 படிக்கிறார். சிறு வயது
முதலே, "மஸ்குலர் டிஸ்ட்ரோபி" எனப்படும், உடல் தசை குறைபாட்டு நோயால்
பாதிக்கப்பட்டுள்ள இவர், 18 வயதான போதிலும், சிறுமி போலவே காணப்படுகிறார்.
இதுகுறித்து, பெண்ணின் தாய் பிரவினா கூறியதாவது: பிறக்கும் போது என்
மகள் ஹெமிதா நன்றாக தான் இருந்தார். இரண்டு வயதாக இருக்கும் போதுதான்,
அவளுக்கு இந்த பிரச்னை இருப்பது தெரிய வந்தது. எனினும், பிரச்னையை
படிப்படியாக சரி செய்து விடலாம் என, மருத்துவர்கள் கூறினர்.
அவளுக்கு, ஆறு வயது இருக்கும் போது, ஏற்பட்ட விபத்து, பிரச்னையை
பெரிதாக்கி விட்டது. ஏற்கனவே நடக்க முடியாமல் இருந்த என் மகளை, உறவினர்
ஒருவர் தூக்கி வைத்திருந்தார். திடீரென அவரை யாரோ பின்னிருந்து
தள்ளிவிட்டனர்; கீழே விழுந்ததில், அவரும், ஹெமிதாவும் காயமடைந்து விட்டனர்.
அதற்கு பிறகு பிரச்னை பெரிதாகி, தானாக நடக்க முடியாத நிலைக்கு ஆளாகி
விட்டாள். எனினும், அவளுக்கு ஊக்கம் மட்டும் அதிகம். எதைப் பற்றியும்
கவலைப்படாமல் படித்து வருகிறாள்.இவ்வாறு, பிரவினா கூறினார்.
ஹெமிதா, தன் ஆசிரியர்கள் பற்றி கூறுகையில், "எனக்கு இருக்கும் இந்த நோயை
பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் என்னையும், சக மாணவியர் போலவே நடத்துவதால்,
எனக்கு நோயின் தாக்கம் தெரிவதில்லை. ஆசிரியர்கள், உடன் படிக்கும் மாணவியர்
அளிக்கும் ஊக்கத்தால் தான் என்னால், இந்த அளவுக்கு வர முடிந்தது" என்றார்.
மஸ்குலர் டிஸ்ட்ரோபி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, எலும்பு வளர்ச்சி
சரியாக இருக்கும்; தசைகள் வளர்ச்சி போதுமான அளவில் இருக்காது.மூன்று லட்சம்
பேரில், இரண்டு அல்லது மூன்று பேருக்கு இந்நோய் ஏற்படுவது உண்டு; எனினும்,
பெண்களுக்கு பெரும்பாலும் வருவதில்லை. ஹெர்மிதா போன்ற ஒரு சிலர், இந்நோய்
பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...